Published : 05 Aug 2016 05:35 PM
Last Updated : 05 Aug 2016 05:35 PM
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.
இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
>அன்பாசிரியர் 19: புகழேந்தி - கிராமப்புற மாணவர்கள் கொண்டாடும் ஆசான்! மூலம் மாறி வரும் கல்விச் சூழலுக்கு ஏற்ப, இணையம் மூலம் கற்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அன்பாசிரியர் புகழேந்தி, அவர் வேலை பார்க்கும் மன்னம்பாடி அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த அத்தியாயத்தைப் படித்த பெயர் குறிப்பிட விரும்பாத 'தி இந்து' வாசகர், பள்ளிக்கு உதவி செய்திருக்கிறார். இதுகுறித்து நம்முடன் மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் புகழேந்தி.
''கத்தார் நாட்டில் வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'தி இந்து' - அன்பாசிரியர் தொடரில் உங்களைப்பற்றிப் படித்தேன். உங்கள் பணிகள் தொடரவேண்டும். வாழ்த்துகள் என்று கூறினார். நானும் நன்றி கூறினேன். அவர் அத்தோடு முடிக்கவில்லை. உங்கள் ஸ்மார்ட் க்ளாஸ் திட்டம் என்ன ஆயிற்று என்று கேட்டார்.
நான், ஒரு தொண்டு நிறுவன நண்பர் கணினி வாங்கி கொடுத்துள்ளார். ப்ரொஜக்டர் வாங்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன். நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளேன் என்று கூறினேன். எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கேட்டார். நான் ஒரு விலைப்புள்ளி வாங்கி அனுப்பினேன். நீங்கள் யாரிடமும் கேட்க வேண்டாம்; நானே உரிய தொகையைக் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னவர் உடனே அந்த நிறுவனத்திற்கு ரூ. 24 ஆயிரத்துக்கு காசோலையை அனுப்பினார்.
இப்போது புரொஜக்டர் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை எளிமையாகக் கொண்டாட விரும்பினோம். விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில்குமார் பள்ளிக்கு வந்து புரொஜக்டரை இயக்கி மாணவர்களையும் எங்களையும் மகிழ்வித்தார்'' என நெகிழ்கிறார் அன்பாசிரியர் புகழேந்தி.
இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT