Published : 22 Jan 2014 07:05 PM
Last Updated : 22 Jan 2014 07:05 PM
குடிநீர் ஆதாரம் இல்லாததால் ஆற்று மணலில் ஊற்று தோண்டி அகப்பையில் தண்ணீர் எடுத்து குடிநீராகப் பண்படுத்தி வருகின்றனர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 4 கிராம மக்கள்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மாவட்ட எல்லைப் பகுதியாகவும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அருகிலும் குண்டாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளன பூமாலைப்பட்டி, முத்துராமலிங்கபுரம், முத்துராமலிங்கபுரம்புதூர், தாமரைபுரம் கிராமங்கள்.
போராடிவரும் கிராம மக்கள்
இந்தக் கிராமங்களில் சுமார் 850-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மழையின்மையாலும் தொடர் வறட்சியாலும் கிணறுகளில் நீர் வற்றிவிட்டதால் இந்தக் கிராம மக்கள் குடிநீருக்காக மிகவும் போராடி வருகின்றனர்.
பூமாலைபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட இந்த 4 கிராமப் பகுதிகளிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சி தண்ணீர் வழங்கப்பட்டாலும் அது உப்பு நீராகவே உள்ளது. இந்தக் கிராமப்புறங்களில் குறிப்பிட்ட அடி ஆழத்துக்கு மேல் களிமண்ணும், அதையடுத்து பாறைகளும் இருப்பதுமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
குண்டாறு ஆதாரம்
இதனால், பூமாலைப்பட்டி உள்ளிட்ட 4 கிராம மக்களும் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் வழங்கும் தண்ணீரை குடிநீராக உபயோகிக்க முடிவதில்லை. குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும், பாத்திரங்கள் துலக்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கிராம மக்களின் ஒரே குடிநீர் ஆதாரமாக விளங்குவது குண்டாறு மட்டுமே.
பொக்லைன் இயந்திரம்
மழையின்மையாலும் வறட்சியாலும் குண்டாறில் தண்ணீர் இல்லையெனிலும் 4 கிராமங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்கும் அட்சய பாத்திரமாகத் திகழ்கிறது. பூமாலைபட்டி, முத்துராமலிங்கபுரம், முத்துராமலிங்கபுரம்புதூர், தாமரைபுரம் மக்கள் குண்டாற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் குறிப்பிட்ட 3 இடங்களில் சுமார் 8 முதல் 13 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.
அதில், ஊற்றுபோல் கசியும் சுவையான நீரையே குடிநீராக பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஊற்றாகக் கசியும் நீரை அள்ள நீண்ட கைப்பிடிகொண்ட அகப்பையை (தேங்காய்மூடி) பயன்படுத்தி வருகின்றனர். அதன்மூலம், மணல் துகள்கள் இல்லாமல் தெளிந்த நீரைமட்டுமே லாவகமாக அள்ளி குடங்களில் நிரப்பிக்கொள்கின்றனர்.
இதுபற்றி, முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மூதாட்டி காவேரி (61) கூறியது:
திருமணமாக நான் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து, அதற்கு முன்பிருந்தும் இப்படித்தான் குண்டாறில் குடிநீர் தண்ணீர் எடுக்கிறோம். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஊற்றில் மெல்லமெல்லவே நீர் கசிகிறது. ஒரு குடம் நீர் நிரப்ப சுமார் அரை மணிநேரம் ஆகிறது. வெய்யில் காலங்கலில் ஒரு குடம் தண்ணீர் நிரப்ப 2 மணி நேரம் வரை ஆகும். குடிநீருக்காக பகலில் மட்டுமின்றி இரவிலும் குடங்களை வரிசையில் வைத்து பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் எடுத்துச்செல்வோம் என்றார்.
அப்பகுதியைச் சேர்ந்த போஸ் என்பவர் கூறுகையில், இந்த ஆறுதான் எங்களின் குடிநீர் ஆதாரம். இதில் மணல் குவாரி நடத்த அரசு அறிவித்து தனியார் ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். ஆனால், ஆற்றில் மணல் எடுக்கப்பட்டால் 4 கிராம மக்களுக்கு குடிக்க தண்ணீரே கிடைக்காது என்பதால், மணல் குவாரி நடத்தக் கூடாது என இதுவரை 30 முறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். என்ன ஆனாலும், இந்த ஆற்றில் மணல் எடுக்க விடமாட்டோம்.
பெண்கள் மட்டுமின்றி, ஆண்கள், சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளும் குடங்களுடனும் அகப்படைகளுடனும் வந்து தண்ணீருக்காக காத்திருந்துதான் எடுத்துச் செல்கிறோம். இங்குள்ள 4 கிராமங்களில் வசிப்பவர்கள் வீடுகளில் குடங்களுக்கு அருகிலேயே அகப்பையும் இருக்கும். திருவிழா, வீட்டு நிகழ்ச்சிகளுக்கு குடிநீருக்காக டேங்கரில் குடிநீர் வாங்கிக்கொள்வோம் என்றார்.
இயற்கை நமக்கு எவ்வளவோ செல்வங்களை வழங்கினாலும், அதன் ரகசியங்களும், மர்மங்களும் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகளாகவே உள்ளன. அதில் இதுவும் ஒன்று என்கிறார்கள் கிராமவாசிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT