Published : 24 May 2017 10:11 AM
Last Updated : 24 May 2017 10:11 AM
கோயம்புத்தூர், உக்கடம் அருகே ஒக்கிலியர் காலனி மாநகராட்சிப் பள்ளியில் முதல் வகுப்புப் பிரிவில் கணிதம் - உயிரியல் எடுத்துப் படித்தேன். பிளஸ் 2 தேர்வில் 913 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். அப்பா இல்லை. அம்மா கூலி வேலை செய்கிறார். படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். நான் என்ன படித்தால் வருங்காலத்தில் விரைவில் வேலை கிடைக்கும்?
- மணிகண்டன், கோவை மாணவர்.
இக்கேள்விக்கு ஆலோசனை அளிக்கிறார் கல்வியாளரும், அண்ணா பல்கலைக் கழக முன்னாள் இயக்குநருமான நவநீத கிருஷ்ணன்.
பயோ கணிதம் படித்துள்ளதால் நீங்கள் பொறியியலைத் தேர்ந்தெடுக்கலாம். இப்போதும் பொறியியலுக்கான எதிர்பார்ப்பு குறையவில்லை. கணினி அறிவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவுகள் இப்போது உச்சத்தில் இருக்கின்றன. சராசரி மதிப்பெண்கள் பெற்றிருந்தால்கூட, கேம்பஸ் தேர்வுகளில் சிறப்பாகப் பங்களித்தால் நிச்சயம் வேலை உண்டு.
உங்களுக்கு உடனடியாக வேலை தேவைப்படுவதால் பாலிடெக்னிக் துறையைக் கூடத் தேர்ந்தெடுக்கலாம். ஏற்கெனவே பிளஸ் 2 முடித்திருப்பதால், இரண்டு வருடங்களில் படிப்பை முடிக்க முடியும். பிளஸ் 2 படித்ததால், அறிவியல் மற்றும் கணிதத்தில் அடிப்படை அறிவு இருக்கும். இதனால் படிக்கவும் எளிதாக இருக்கும்.
கலை, அறிவியல் துறை எடுக்கலாமா?
கலை, அறிவியல் துறைகளையும் நாடலாம். ஆனால் அவற்றில் ஒரு பட்டம் மட்டும் பெற்றால் மதிப்பும், ஊதியமும் குறைவாக இருக்கும். முதுகலைப் படிப்பையும் முடித்தால் அதிக சம்பளம் பெற முடியும்.
கலை மற்றும் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் பிஎஸ்சி பட்டப்படிப்புக்கு முன்னுரிமை கொடுக்கலாம். பிஎஸ்சி கணினி அறிவியல் முடித்து ஐடி நிறுவனங்களில் ஏராளமானோர் நல்ல ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பிஎஸ்சி கணிதம் முடித்து ஆசிரியர் பணிக்கும் செல்லலாம்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளைப் பற்றிய அறிவும் அவசியம். அண்ணா பல்கலைக் கழகத்தின் கவுன்சலிங் வழியாகப் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கல்விக்கான கட்டணம் இலவசம் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது.
உங்களைப் போல உயர் மதிப்பெண்கள் பெற்று, மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு உதவவும், உதவித் தொகை வழங்கவும் ஏராளமான தனியார் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. அவற்றின் உதவியோடு உங்கள் வாழ்வை வளமாக்குங்கள். வாழ்த்துகள்!
*
நல்ல மதிப்பெண்கள் பெற்றும், நீங்கள் விரும்பும் மேற்படிப்புகளைத் தொடர்வதற்குப் பொருளாதாரத் தடைகள் காரணமாக இருக்கிறதா? 'தி இந்து' உங்களுக்கு கரம் கொடுக்கக் காத்திருக்கிறது. மதிப்பெண்களை மட்டுமே அளவீடாகக் கொள்ளாமல், பிற துறைகளில்/ திறமைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களையும் அடையாளப்படுத்த விரும்புகிறோம்.
உதவ நினைக்கும் நல்லுள்ளங்களுக்கும், தேவை இருக்கும் மாணவச் செல்வங்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட முன்னெடுத்துள்ளோம்.
உதவிகள் தேவைப்படுவோர் உங்களது மகன்/ மகளாக இருக்கலாம். உறவினர், அக்கம்பக்கத்தினர், தெரிந்தவர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களைப் பற்றிய தகவல்களை 'தி இந்து'விடம் அளிக்க வேண்டுகிறோம்.
வாருங்கள் வாசகர்களே, 'அறம் பழகு' வாயிலாக உதவ சிரம் தாழ்ந்து அழைக்கிறோம்!
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT