Published : 11 Feb 2014 08:01 PM
Last Updated : 11 Feb 2014 08:01 PM
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் தாண்டவமாடும் வறட்சியால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நூறு குளங்கள் நீரின்றி காய்ந்து போயுள்ளன. கருகிய பயிர்களுடன் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து நிவாரணம் கேட்பது வாரம்தோறும் தொடர்கிறது. இதுபோதாதென்று, குடிநீர்த் தட்டுப்பாடும் தலைதூக்க ஆரம்பித்து உள்ளது.
விவசாயத்தை பிரதானமாக கொண்ட திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டாக பருவ மழை கைகொடுக்காத நிலையில், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதோடு, சாகுபடி பரப்பும் ஆண்டுக்கு, ஆண்டு சரிவடைந்து வருகிறது. இதனால், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களும் பாதிப்படைந்து வருகிறது.
மாவட்டத்தில் விவசாயத்துக் கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருக்கும் நீர் ஆதாரங்கள் வறண்டு மேய்ச்சல் நிலங்களாக மாறியிருப்பதோடு, நீர் ஆதாரங் களை சார்ந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது. மானாவாரி நிலங்கள் பல இடங்களில் வீட்டுமனைகளாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இரவைப் பாசனம்
சங்கரன்கோவில் வட்டத்தில், மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. விவசாயத்தை நம்பியே விவசாயிகளும் இருக்கிறார்கள். வழக்கமாக மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து, பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்களையே இப்பகுதியில், இரவைப் பாசனத்தில் பயிர் செய்வர். சென்றாண்டு வறட்சிக்குப் பின், நிலத்தை தரிசாக விட்டு வைத்திருந்த விவசாயிகள், நடப்பாண்டு அக்டோபர் மாதம் தலைகாட்டிய மழையை நம்பி, மீண்டும் பயிர் செய்தனர்.
குறிஞ்சாக்குளம்
குருவிகுளம் ஒன்றியம், குறிஞ்சாக்குளம் பகுதியில், 1,400 ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள் பயிர் செய்திருந்தனர். ஆனால், மழை இல்லாததால் முளைத்த பயிர்கள் கருகிவிட்டன. 2-வது முறையும் விதைத்து, பயிர் செய்து, அவை பூக்கும் தருணத்தில் பருவமழை இல்லாததால் அனைத்து பயிர்களும் வாடி மகசூல் தராமலேயே கருகிவிட்டன.
மனமுடைந்துள்ள விவசாயிகள், வங்கியிலும், தனியாரிடமும் வாங்கியக் கடனை செலுத்த முடியாமல் அவதியுறுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக இந்த வறட்சி நீடிக்கிறது. இதனால், விவசாயக் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டிருக்கின்றன.
ஆட்சியரிடம் மனு
இப்பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று, ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. குறிஞ்சாக்குளம் பகுதி விவசாயிகள் மீண்டும் திங்கள்கிழமை, கருகிய பயிர்களை எடுத்துக் கொண்டு, ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
ரூ.1,500 நிவாரணம்
இப்பகுதி விவசாயி எஸ்.சீனிவாசன் கூறியதாவது:
கடந்த, 4 ஆண்டுகளாக சங்கரன்கோவில் பகுதி விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,500 மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. 10 ஏக்கரு க்கு ரூ.1.5 லட்சம் வரையில் கடன் வாங்கி செலவு செய்திருந்த விவசாயிகளுக்கு, நிவாரணத் தொகை மிகவும் குறைவு. தற்போது, இந்த ஆண்டும் வறட்சியால் பயிர்கள் கருகிவிட்டன.
குடிநீர் தட்டுப்பாடு
இப்பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டிருக்கின்றன. ஆடு, மாடுகளுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. கோடையில் குடிநீர் பிரச்னையை இப்பகுதி மக்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள். இதனால் உரிய நிவாரணம் கேட்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் கோரி மனு அளித்திருக்கிறோம் என்றார் அவர்.
1,893 குளங்கள் வறண்டன
மாவட்டத்தில், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடைய நல்லூர், நாங்குநேரி, ராதா புரம் வட்டாரங்களில், கடந்த ஆண்டைப்போல்இவ்வாண்டும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு ள்ளது. இவ்வட்டார ங்களில் மானாவாரி குளங்கள் பலவும் வறண்டிருக்கின்றன.
மாவட்டத்தில் 921 கால்வரத்து குளங்கள், 1,528 மானாவாரி குளங்கள் என்று 2,449 குளங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. தற்போது, 451 கால்வரத்து குளங்கள், 1,442 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் 1,893 குளங்கள் வறண்டிருக்கின்றன.
சங்கரன்கோவில் வட்டாரம் முழுக்க மானாவாரி குளங்கள்தான் இருக்கின்றன. அவை அனைத்தும் நீரின்றி வறண்டிருக்கின்றன. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
அணைகள் கவலைக்கிடம்
அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதிஅணை நீர்மட்டம் 40 அடிக்கும் கீழாக குறைந்திருப்பதால், இப்பகுதியிலுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. மேலும் 4,900 ஏக்கரில் விவசாயமும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
கருகும் மாற்றுப் பயிர்
விவசாயிகள் வறட்சியை சமாளிக்கும் வகையில் மாற்றுப் பயிர்களை பயிர் செய்த போதும், மாற்றுப் பயிர்களுக்கு தேவையான நீர் மேலாண்மை செய்ய முடியாமல், பயிர்கள் கருகி வருவதால், சாகுபடி செய்துள்ள பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கடந்த மாதம் 21-ம் தேதி சங்கரன்கோவில் வட்டம், செவல்குளம் பகுதி விவசாயிகளும் வாடிய மக்காச்சோளம் பயிர்களுடன் ஆட்சியரிடம் நிவாரணம் கோரி முறையிட்டிருந்தனர். செவல்குளம் பகுதியில் சுமார் 1,500 ஏக்கரில் மக்காச்சோளமும், உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆயிரம் ஏக்கரிலும் பயிரிடப்பட்டிருந்தது. இவ்வாண்டு பருவமழை பெய்யவில்லை என்பதால் பயிரிட்டிருந்த மக்காச்சோளமும் மற்ற பயறு வகைகளும் கருகிவிட்டன.
லாரி தண்ணீர்
இது தொடர்பாக இப்பகுதியை சேர்ந்த விவசாயி ராஜ் கூறியதாவது:
இப்பகுதியில் கடந்த 4 ஆண்டாக வறட்சி நிலவுகிறது. இதனால், சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் அவதியுறுகிறோம். இவ்வாண்டு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர்கள் தண்ணீரின்றி கருகிவிட்டன.
தற்போது, இங்கு பயிரிட்டுள்ள எலுமிச்சை மரங்களை காப்பாற்ற, கடன் வாங்கி தனியார் மூலம் தண்ணீரை லாரிகளில் எடுத்து வந்து மரங்களுக்கு ஊற்றி வருகிறோம். கடந்த ஆண்டும் இதுபோல் பயிர்கள் கருகி பெரும் இழப்பு ஏற்பட்டது என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT