Published : 24 Feb 2014 06:55 PM
Last Updated : 24 Feb 2014 06:55 PM
கோவை நகரின் முக்கிய சாலைகளில் தனியார் நிறுவன ஒயர் பதிப்பிற்காக தேண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான முக்கியச் சாலைகளும், குறுக்குச் சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைகளும் ஒன்றையொன்று சந்தித்துச் செல்கின்றன. மக்கள் நெருக்கடி, வாகன நிறுத்துமிட நெருக்கடி என பல பிரச்சினைகளுக்கு நடுவே, தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இந்த சாலைகள், பயணத்தை மட்டும் சுமந்து செல்வதில்லை.
பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்புகள், தொலைத்தொடர்பு இணைப்புகள் என ஏராளமான இணைப்பு வசதிகளையும் தன்னுள்ளே அரவணைத்துச் செல்கிறது.
செம்மொழி மாநாடு சமயத்தில், நகரில் அவிநாசி சாலை, திருச்சி சாலை என முக்கிய பகுதிகளில் நிலத்தடி மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது வெளிமாநில நிறுவனம் ஒன்றின் மூலம் நிலத்தடி மின் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஒரு புறம் என்றால், மறுபுறம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது தொலைத்தொடர்பு கேபிள்களை முக்கிய சாலைகளில் பதித்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
அவிநாசி சாலை, ரயில்நிலையம், நஞ்சப்பா சாலை, ஒசூர் சாலை, நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி தொலைத்தொடர்பு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நவீன எந்திரங்கள் மூலம் இரவு நேரத்தில் சாலைகளை வெட்டி ஒயர்கள் பதிக்கப்பட்டன. அந்தப் பணிகள் முடிந்தவுடன் சிமெண்ட், தார் கலவை மூலம் அந்த குழிகள் மூடப்பட்டன.
‘தடுமாற்றம்’
ஆனால், தனியார் நிறுவனத்தினர் குழிகளை மூடிய விதமும், சுட்டெரிக்கும் வெயிலும் சேர்ந்து மூடப்பட்ட குழிகளை மீண்டும் உயிர்பிக்கச் செய்துள்ளன. செ.மீ., அளவிலேயே இருக்கும் இந்தக் குழிகளால், பெரிய வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த வெட்டுக் காயங்கள் தரும் தலைவலியையும், தடுமாற்றமும் ஏராளம். சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் லேன்களைப் போலவே, இந்த குழிகளும் தெரிவதால் விபரீத பயணங்களாகிவிட்டன .
‘ஒரே நிறுவனம்’
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மின்சார வாரியம் மற்றும் தனியார் நிறுவன கேபிள் பதிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணியின்போது அறிவிப்புப் பலகைகள் வைத்து பணி நடைபெற வேண்டும், பணி முடிந்ததும் அவர்களே சீரமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான இடங்களில் சரிசெய்துவிட்டனர். பெரிய குழிகளாக தோண்டும் மின்வாரியத்தினர் கூட சரியாக மூடி விடுகின்றனர். ஆனால், தனியார் நிறுவனங்கள் அப்படி செயல்படுவதில்லை. சில மாதங்களுக்கு முன்பு ஏரிமேடு பகுதியில் கேபிள் இணைப்பிற்காக அனுமதி பெற்று, சாலையை மோசமாக்கியதும் இதே தனியார் நிறுவனம் தான் என்றனர்.
தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி காலமும், அவர்களது பணியும் முடிவதற்கு முன்பே அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதன் மூலமே சாலைகளின் நிரந்தர சேதத்தை தடுக்க முடியும் என்கின்றனர் பொதுநல அமைப்பினர்.
‘விரைவில் முடியும்’
ஆணையாளர் க.லதா கூறியது,
கடந்த ஒரு வாரமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தினர் கேபிள்களை பதித்து வருகின்றனர். முறைப்படி அனுமதி பெற்று நடைபெறும் இந்த பணி, இன்னும் சில வாரங்களில் முடிவடையும். அதிகாரிகளும் இதை ஆய்வு செய்து வருகிறார்கள். குறைகள் காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT