Published : 13 Feb 2014 07:52 PM
Last Updated : 13 Feb 2014 07:52 PM
தேவர் ஜெயந்தி விழாவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்ததால் அ.தி.மு.க. மீது இருந்த அதிருப்தி தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் பசும்பொன் பயணத்துக்குப் பிறகு மாறியுள்ளதா என முக்குலத்தோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக மீது அதிருப்தி
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக். 30-ம் தேதி தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா நடைபெறும். இதில் கள்ளர், மறவர், அகமுடையார் அடங்கிய முக்குலத்தோர் சமுதாய மக்கள் திரளாகப் பங்கேற்பர்.
கடந்த ஆண்டு குருபூஜைக்கு 144 தடை உத்தரவு, வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் அதிமுக மீதும், முதல்வர் ஜெயலலிதா மீதும் அந்த சமுதாயத்தினர் அதிருப்தியில் இருந்தனர்.
இதன் உச்சகட்டமாக தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற அமைச்சர்களின் வாகனங்கள் மீது மண்ணை அள்ளி வீசினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வர் படம் பொறித்த பிளக்ஸ் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன.
முதல்வர் பசும்பொன் வருகை
இந்த நிலையில், முதல்வர் கடந்த 9-ம் தேதி பசும்பொன் வந்து, முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை அணிவித்தார். அத்துடன், தேவரைப் புகழ்ந்து பேசியது மட்டுமின்றி, அவரது லட்சியமே தங்களது லட்சியம் எனவும், அதை வென்றெடுக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் அங்கு கூடியிருந்த அ.தி.மு.க. மற்றும் தேவர் சமுதாய மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்வுக்குப்பின் அ.தி.மு.க. மீதும், முதல்வர் மீதும் நிலவிய அதிருப்தி குறைந்திக்கிறதா? என முக்குலத்தோர் அமைப்புகளைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.
மனதுக்கு ஆறுதல்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநிலத் தலைவரும், உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.கதிரவன் கூறுகையில், தேவர் ஜெயந்தி விழாவின்போது காவல்துறையின் நடவடிக்கையால் தேவர் சமுதாய மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
எனக்கும் அந்த வருத்தம் இருந்தது. இந்த சமயத்தில் தேவர் சிலைக்கு முதல்வர் தங்கக் கவசம் அணிவித்துள்ளது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. இதன்மூலம் அ.தி.மு.க. மீதான அதிருப்தி குறையத் தொடங்கியுள்ளது’ என்றார்.
ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் கே. ராமசாமி கூறுகையில், ‘மன அழுத்தம், மன உளைச்சலில் காயம் பட்டிருந்தோம். அதற்கு மருந்துபோடும் வகையில் தற்போது தங்கக் கவசத்தை, தானே நேரில் வந்து அளித்துள்ளதை வரவேற்கிறோம். மனிதராக வாழ்ந்து மறைந்தவரின் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பது இதுவே முதல்முறை என்பதால் தேவரின் புகழ் ஒருபடி அதிகரித்துள்ளது. இதற்கான பயன் அ.தி.மு.க.வுக்கு கிடைக்குமா என்பதை இப்போது கூற முடியாது’ என்றார்.
அதிமுக மாநாடு தான்
அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவைத் தலைவர் எஸ்.ஜெயமணி கூறுகையில், அ.தி.மு.க. மீதிருந்த அதிருப்தியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்கவில்லை.
இந்த சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து நடத்திய அ.தி.மு.க. மாநாடு போலத்தான் இருந்தது’ என்றார்.
முக்குலத்தோர் சமுதாயம் மீது முதல்வருக்கு கனிவு உண்டு
இது குறித்து முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சில அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: ஜெயந்தி விழாவின்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அதிருப்தி ஏற்பட்டிருந்தது உண்மைதான். ஆனால், இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது.
தற்போது தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஜெயந்தி விழாவுக்கு பின், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர், ஆர்.பி உதயகுமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவியும், தஞ்சாவூர் தங்கமுத்து, சிவகங்கை செந்தில்வேல், ராமநாதபுரம் முனியசாமி ஆகியோருக்கு வாரியத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் முக்குலத்தோர் சமுதாயம் மீது முதல்வருக்கு கனிவு உண்டு என்பதை அந்த மக்கள் நன்கு உணர்வர். இதன் பயன் கண்டிப்பாக மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT