Published : 13 Oct 2014 03:41 PM
Last Updated : 13 Oct 2014 03:41 PM

‘தனித்துவத்துடன் மிளிரும் கட்டுரைகள்’

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழகத்தின் மாநகரங்களில் நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சியைத் தொடர்ந்து தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பேசியபோது, “இளம்பிராயம் தொட்டு இந்துவோடு வளர்ந்திருக்கிறேன். ஓவியக் கல்லூரியில் படிக்கும் உத்வேகத்தில் இருந்தபோது, குடும்பத்தினரின் அனுமதி ஆரம்பத்தில் கிடைக்கவில்லை. ஆங்கில இந்துவை சரளமாக வாசிக்கும் டெஸ்டில் வீட்டு பெரியவர்கள் திருப்தியடைந்த பிறகே அனுமதி கிடைத்தது. அதேபோல ஓவியக் கல்லூரியில் இருந்து வெளியில் வந்ததும், பத்திரிகைத் துறைக்கு முயற்சிகள் மேற்கொண்டேன்.

கடந்த நூற்றாண்டில் நடந்த புரட்சிகர மாற்றங்களில் முக்கியமானவை செய்தித்தாள் மூலமாகவே நடந்திருக்கிறன. அதிலும் அவற்றில் இடம்பெற்ற ஓவியங்களும், பின்னாளில் புகைப்படக்கலை வளர்ந்து அதுவும் ஓவியக் கலையால் சுவீகரிக்கப்பட்டதும், செய்தித்தாள்களில் ‘காண்பியல் மொழி’ வண்ணமயமானது. வாசிப்பில் புலமையற்றவர்களும்கூட செய்தித்தாளில் கையாளப்பட்ட ஓவியங்களை உள்வாங்கிக்கொண்டு ரசித்தார்கள். இந்த வகையில் செய்தித்தாளின் கருத்துப் படங்கள் மொழியைத்தாண்டி, மக்களை நெருக்கமாக்கியது. வரலாற்றில் இதுபோன்ற சிந்தனையைத் தூண்டும் ஒவியங்களை படைத்ததற்காக சிறைத்தண்டனை பெற்ற ஓவியர்கள் இருக்கிறார்கள். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அத்தகைய புரட்சிகரமான கருத்துச் சித்திர உத்தியை சிறப்பாகவே பயன்படுத்தி வருகிறது.

மேலும், அந்தப் பணியை சிறப்பாக்கும் வகையில் அடுத்தகட்டமாய், இந்தியாவை ஐரோப்பிய உலகுக்கு அறிமுகம் செய்துவைத்த அரிய பழைய படங்களை மீண்டும் இளம்சமூகத்துக்கு ‘தி இந்து’ முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். செய்திகளை உடனுக்குடன் பகிர்வதில் சமூக ஊடகங்கள் செய்தி ஊடகங்களை விழுங்கிவரும் காலகட்டத்தில், ‘தி இந்து’வில் வெளியாகும் கட்டுரைகள் தனித்துவமாக மிளிர்கின்றன.

வாசகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி. ஒருசில தினங்களில் வெளியாகவிருக்கும் ‘தி இந்து’ தீபாவளி மலரில் முதல்முறையாக, புதுமைப்பித்தன் சிறுகதையை சித்திரக்கதையாக புதுமையான வகையில் முயற்சித்திருக்கிறோம். இளம் தலைமுறையினரும் வரவேற்கக் கூடிய வகையில் அது அமைந்திருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x