Published : 27 Feb 2014 08:40 PM
Last Updated : 27 Feb 2014 08:40 PM
கடும் வறட்சி, பணப்புழக்கம் இன்மை போன்ற சூழல்கள் 2004 மே மாதம் வாட்டியெடுத்தபோது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகளாக தமிழகத்தில் எதிரொலித்து ஆளும் அதிகார வர்க்கத்திற்கு ஏக்கம் தந்தது- மழை பெய்யாதா? மக்கள் நமக்கு ஓட்டளிப்பார்களா? என்பதுதான். மழையைப் போன்று ஏக்கமும் பொய்த்தது. அந்த தேர்தலில் 40 மக்களவைத் தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. அதேநிலை இப்போதும் ஆகிவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றனர் ஆளும்தரப்பினர். மக்களை வாட்டி எடுக்கும் கோடை, அரசியல் வாதிகளை பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
கடந்த ஆண்டு கோடை மழை சிறு தூற்றலோடு நின்று போனது. தென்மேற்குப் பருவ மழையும் 20 சதவீதம் கூட மக்களை திருப்திப்படுத்தவில்லை. வடகிழக்குப் பருவமழையும் ஏமாற்றிவிட்டது. இதனால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. நொய்யல் ஆறு வறட்சியின் கோரப்பிடியில் உள்ளது. அதிலிருந்து வாய்க்கால்கள் மூலம் புறப்பட்டு குளங்களை நிரப்பவேண்டிய நீர் கானல் நீராகி விட்டது. சில குளங்களில் சாக்கடைகளும், சாயக்கழிவுகளும் தேங்கி நிற்கிறது. எப்போதும் நீர் ததும்ப நிற்கும் சுண்டக்காமுத்தூர் பேரூர் குளங்கள் வறண்டு போய் ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாகிக் கொண்டிருக்கிறது.
தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழை வந்தால் ஊற்றெடுக்கும் என்று நம்பி உக்கடம் பெரிய குளத்தை தூர்வாரி வைத்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி நீர் வராமல் பாளம் பாளமாக வெடித்து நிற்கிறது. நகரின் முக்கிய குளமான வாலாங்குளம், ஆகாயத்தாமரைகள் காய்ந்த சருகுக்குளமாக காட்சியளிக்கிறது.
இதனால் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளான சூலூர், இருகூர், ஒண்டிப்புதூர், சின்னியம்பாளையம் துவங்கி, பேரூர், கோவைப்புதூர், மதுக்கரை, குனியமுத்தூர், குறிச்சி, கவுண்டம்பாளையம், துடியலூர் வரை நிலத்தடி நீர் படுபாதாளத்திறகுப் போய்விட்டது.
குனியமுத்தூர் நகராட்சி பகுதிகளில் இப்போது 700 முதல் 1200 அடி வரை ஆழ்துளைக் கிணறு போடவேண்டியிருக்கிறது. அதிலும் ஓரிரு மாதங்களில் தண்ணீரின்றி வேறொரு ஆழ்துளைக்கிணறு போட வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மதுக்கரை, குறிச்சி, சுந்தராபுரம், குனியமுத்தூர், கோவைபுதூர், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நிலைமை மிக மோசம்.
கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் முதல் இரண்டு திட்டங்கள், ஆழியாறு திட்டங்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பழைய நகராட்சிப் பகுதிகளுக்கு மட்டுமே தினமும் நீர் விடப்படுகிறது. சிங்கநல்லூர், உப்பிலிபாளையம், ஒண்டிப்புதூர் பகுதிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை விடப்படுகிறது. புதிதாக மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர், குறிச்சி பகுதிகளில் பத்து முதல் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இங்கே நிலவும் நிலத்தடி நீர் பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகள் காரணமாக மக்கள் நகரின் மையப் பகுதிகளுக்கு குடியேறும் நிலை ஆரம்பித்துள்ளது.
இப்போதே நிலைமை இப்படி என்றால் கோடை வாட்டி எடுக்கும் மார்ச், ஏபரல், மே மாதங்களில் கோவைக்கு ஜீவதார நீர்க்கேந்திரமாக விளங்கும் பில்லூர், சிறுவாணி, ஆளியாறு அணைகளில் நீர் வற்றும்போது நிலைமை என்ன ஆகும் என்பதே பொதுமக்களின் கேள்வி. ஒரு பக்கம் விவசாயத்திற்கு நீர் இல்லாத சூழல். இன்னொரு பக்கம் குடிக்கும் நீருக்கே சிக்கல் வந்துவிடக்கூடாது. அப்படி வந்தால் 2004 தேர்தலைப்போலவே எங்கள் நிலை ஆகிவிடும் என்று வருத்தப்படுகிறார் கோவை ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர்.
கோடையை சமாளிக்க முடியும்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவை நகரை சுற்றியுள்ள நீர்நிலைகள் வறண்டு வருவது உண்மைதான். ஆனால் சென்ற ஆண்டைக்காட்டிலும் அதிக அளவு பில்லூர், சிறுவாணி நீர்த்தேக்கங்களில் நீராதாரம் உள்ளது. அதேபோல் நகரப் பகுதிகளில் தேவையான அளவு போர்வெல் போடப்பட்டு பொதுமக்களுக்கு பொதுக்குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டை விட கோடையை இந்த ஆண்டு சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT