Published : 07 Feb 2014 07:37 PM
Last Updated : 07 Feb 2014 07:37 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டுமென்ற நீண்ட நாள் கனவு எப்போது நனவாகும் என விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மா, புளி, காய்கறிகள் மற்றும் மலர்கள் உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்திலேயே முன்னோடியாக விளங்குகிறது. குறிப்பாக, ஓசூரில் ரோஜா, ராயக்கோட்டையில் சாமந்திப்பூ, செண்டுமல்லி, காவேரிப்பட்டணத்தில் மல்லிகை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தியாகும் மலர்கள், பெங்களுர் சந்தையிலிருந்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மணம் வீசும் மல்லிகை
கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப் பட்டணம், திம்மாபுரம் பகுதிகளில் மணம் மிகுந்த மல்லிகை அதிக அளவில் சாகுபடியாகிறது. திம்மாபுரம், பெரியமுத்தூர், காவேரிப் பட்டணம், சந்தாபுரம், வேலம்பட்டி பகுதிகளில், தென் பெண்ணை ஆற்றுப்படுகையில் சுமார் 1,500 ஏக்கரில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் வருவாய் தரும் பணப் பயிரான மல்லிகைப் பூவில் 4 வகைகள் உள்ளன. குளிர்காலத்தில் குறைந்த விளைச்சலும், கோடையில் அதிக விளைச்சலும் கிடைக்கும். தற்போது குளிர், பனிப்பொழிவால் மல்லிகை மொட்டுகள் கருகி, விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், பெங்களூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.750 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகிறது.
மாறும் விலை
இந்தப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மலர்கள் பெங்களூர் சந்தையில் ஏலம் விடப்படுகின்றன. காலை 8 மணிக்கு செல்லும் வாகனத்தில் பூக்களை அனுப்பினால் கிலோ ரூ.800 முதல் ரூ.1,000 வரையிலும், அதற்குப் பிறகு அறுவடை செய்து அனுப்பப்படும் பூக்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.600 வரையிலும் விற்பனையாகின்றன.
இதுகுறித்து அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாது கூறுகையில், தற்போது திருமணம் மற்றும் விழாக்காலம் என்பதாலும், விளைச்சல் குறைவாக உள்ளதாலும் மல்லிகைப் பூவின் விலை அதிகரித்துள்ளது.இப்பகுதியில் நிலவும் கடும் குளிர் மற்றும் பனி காரணமாக மல்லிகை மொட்டுக்களில் நீர் சேர்ந்து கருகி விடுகிறது. ஒரு செடியில் 4 மொட்டுகள் இருந்தால், 3 மொட்டுகள் கருகி விடுகின்றன. தற்போது 500 செடிகளில் 2 முதல் 3 கிலோ மட்டுமே கிடைக்கிறது.
ஆனால், விலை அதிகமிருந்தாலும் லாபம் குறைவுதான். ஏனெனில், செடிகளுக்கு உரம், மருந்து தெளிப்புக்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது. கோடை காலத்தில் 500 செடிகளில் 8 முதல் 10 கிலோ வரை பூக்கள் பூக்கும். அப்போது கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகும். சில நேரங்களில் கூலி கூட மிஞ்சாது. இதுபோன்ற சமயங்களில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படுகின்றன.
மலர் ஏற்றுமதி மண்டலம்
எனவே, விலையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைச் சமாளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அல்லது அரசு உதவியுடன் வாசனை திரவியத் தொழிற்சாலை அமைத்து, நஷ்டத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கலாம். மேலும், மலர் ஏற்றுமதி மண்டலம் அமைத்தாலும் விவசாயிகள் பெரிதும் பயனடைவர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT