Published : 20 Oct 2014 06:46 PM
Last Updated : 20 Oct 2014 06:46 PM
“தி இந்து” தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூரை தொடர்ந்து திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையிலுள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் ஜூட்ஸ் கல்லூரி பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் பேசியதாவது:
அச்சு ஊடகத் துறைக்கு இது போதாத காலம். கெடுபிடி மிகுந்த காலம். டார்வின் கொள்கையில் முக்கியமானது தக்கவை பிழைக்கும் என்பதாகும். இது ஊடக உலகில் மிகப்பெரிய உண்மை.
இந்த நிலையில் மக்களின் தேவைகளை, உணர்வுகளை, ஏக்கங்களை பிரதிபலிக்கும் ஒரு நாளிதழாக “தி இந்து” அமைந்திருப்பது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. வாசர்களை மாற்றிய பெருமைமிக்க அடையாளமாக திகழ்கிறது. செய்தியை மட்டும் பார்க்காமல் சமூக அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. எந்த திசையில் செல்ல வேண்டும் என முன்கணித்து தீர்க்கமாக செயல்பட்டு வருகிறது.
எந்த செய்தியை முதன்மை செய்தியாக்க வேண்டும். முதல் பக்கத்தில் எந்த செய்தி வரவேண்டும் என்ற இலக்கணத்தை மீறி பல பத்திரிகைகள் செயல்பட்டுவரும் நேரத்தில்,வாசகர்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் எல்லா தரப்பு செய்திகளையும் “தி இந்து” வழங்கி வருகிறது.
பெண்கள், முதியோர், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் ஏக்கங்களையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு , அடித்தட்டு மக்கள் மீது கரிசனம் கொண்ட பத்திரிகையாக திகழ்கிறது. அடித்தட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாகவும், அதேநேரத்தில் சந்தை நிர்வாகத்திலும் வெற்று பெற்றுள்ளது. அடித்தள மக்களையும் உள்ளடக்கிய அணுகுமுறையை “தி இந்து” கொண்டுள்ளது.
“தி இந்து” நாளிதழில் 48 நாட்களாக வெளிவந்த நீர், நிலம், வனம் மிகச்சிறந்த பதிவு. இந்திய வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத உன்னதமான பணி. இதனை ஒரு யாகமாகவே நான் கருதுகிறேன். ஏதோ ஒரிடத்தில் அமர்ந்து கொண்டு இதனை இந்து பதிவு செய்யவில்லை. மக்களோடு மக்களாக பழகி, கள ஆய்வு செய்து இந்த பதிவை வெளியிட்டுள்ளது.
கடலோர பகுதிகளோடு நீர் நிலம் வனம் முடிந்துவிடவில்லை. இழந்துவிட்ட நீர்நிலைகளை, ஆதாரங்களை மீட்க வேண்டும். கண்மாய்கள், கால்வாய்களை பாதுகாக்க வேண்டும். தமிழர்களின் அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, காவிரி பிரச்சினை, ஆந்திரா தண்ணீர் தர மறுப்பு என தண்ணீருக்காக போராடுகிறோம். நமது பாரம்பரிய நீர் ஆதாரங்கள் எங்கே போய்விட்டன. அவைகளை மீட்டெடுக்க வேண்டும். இதனை தி இந்து முன்னின்று செய்ய வேண்டும். வாசகர்களாகி நாங்களும் அந்த யாகத்தில் பங்கெடுத்து வெற்றி பெற செய்வோம் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT