Last Updated : 24 Jan, 2014 07:04 PM

 

Published : 24 Jan 2014 07:04 PM
Last Updated : 24 Jan 2014 07:04 PM

மதுரை: வைகை வறண்டதால் மதுரையை அச்சுறுத்தும் குடிநீர் பஞ்சம்; ஏப்ரம் மே மாதங்களில் உச்சகட்டத்தை அடையலாம் என எதிர்பார்ப்பு

வைகை அணையின் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதால் மதுரையில் குடிநீர் பஞ்சம் நெருங்கி வருகிறது. ஏப்ரல், மே மாதத்தில் உச்சகட்டத்தை எட்டும் என்பதால் அதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் 11.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏற்கெனவே இருந்த 72 வார்டுகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வைகை கூட்டுக் குடிநீர் திட்டம்-1, திட்டம்-2 ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி வைகை அணையிலிருந்து பெறப்படும் நீரை, பண்ணைப்பட்டியில் சுத்திகரித்து மதுரை மாநகரில் விநியோகித்து வருகின்றனர்.

2 நாள்களுக்கு ஒருமுறை

இதுதவிர புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளான திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர், அவனியாபுரம், விளாங்குடி போன்றவற்றில் வசிப்போருக்காக வைகை ஆற்றிலிருந்து ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீரைச் சேகரித்து பொதுமக்களுக்கு அளித்து வருகின்றனர். நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தர வேண்டும் என்ற அடிப்படையின் கீழ் மதுரை மாநகராட்சிக்கு 160 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.

ஆனால் அதற்கேற்ற அடிப்படைக் கட்டமைப்பு இல்லாததால் தற்போது 100 மில்லியன் லிட்டரை மட்டுமே மாநகராட்சி நிர்வாகத்தால் பெற முடிகிறது. இந்த நீரை ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 100 லிட்டர் என்ற அடிப்படையில் இரு நாள்களுக்கு ஒருமுறை விநியோகித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவதால் பொதுமக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.

மார்ச் வரை மட்டுமே

இந்நிலையில் பருவமழை பெய்யத் தவறியதாலும், போதியளவு வரத்து இல்லாததாலும் வைகை அணையில் நீரின் அளவு வெகுவாகக் குறைந்தது. அந்த சமயத்தில் விவசாயத்துக்காக தண்ணீரைத் திறந்துவிட்டதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து அணையின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. வியாழக்கிழமை நிலவரப்படி 35.56 அடி தண்ணீரே அங்கு உள்ளது. இந்த நீரைக் கொண்டு இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே, அதாவது மார்ச் வரை மட்டுமே மதுரை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய இயலும். அதற்குப்பின் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, மாநகராட்சி மூலம் குடிநீர் கிடைப்பதே அரிது என்ற நிலை உருவாகி வருகிறது.

அதிகாரிகள் அவசர ஆலோசனை

இதுபற்றி ஆலோசிக்க தமிழ்நாடு குடிநீர் வழங்கல், பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வியாழக்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து அன்றிரவே மாநகராட்சி மேயர் வி.வி ராஜன் செல்லப்பா தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் மற்றொரு அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டங்களில் மதுரை எதிர்நோக்கியுள்ள குடிநீர் பஞ்சம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், அதனை சரி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

கிணறுகள் பட்டியல் தயாரிப்பு

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: வைகை அணையில் உள்ள தண்ணீரைக் கொண்டு மார்ச் வரை மட்டுமே மக்களுக்கு விநியோகிக்க முடியும். அதன்பின் தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதத்தில்தான் தொடங்கும் என்பதால் இடைப்பட்ட ஏப்ரல், மே மாதங்களில் கண்டிப்பாக கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். இதைத் திட்டமிட்டு தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவை தினமும் வழக்கத்தைவிட சற்று குறைவாக அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இதுதவிர மாநகராட்சிப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து 500-க்கும் அதிகமான இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களில் தனியார் கிணறுகளை கணக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நீர் ஆதாரம் இருக்கும் வகையிலான தோட்டங்கள், பண்ணைகள், விவசாய நிலங்களும் கண்டறியப்பட்டு வருகின்றன. இவற்றின் உரிமையாளர்கள் அனுமதியுடன் தேவைப்படும் இடங்களில் ஆழ்துளைக் கிணறு போட்டு, அதிலிருந்து கிடைக்கும் நீரை லாரிகள் மூலம் எடுத்துச் சென்று மாநகரப் பகுதிகளில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஏப்ரலில் மழை பெய்யுமா?

இதுதவிர வைகையாற்றில் மணலூர் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளைச் சீரமைக்க உள்ளோம். அங்கிருந்து பெறப்படும் தண்ணீரால் மதுரையின் கிழக்கு மண்டலப் பகுதியில் ஓரளவுக்கு தட்டுப்பாட்டினைத் தவிர்க்கலாம். கடந்த சில ஆண்டுகளின் விவரங்களை ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் ஓரிரு நாள் மழை பெய்திருப்பது தெரியவந்துள்ளது. அதுபோல் இந்த ஆண்டும் மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு இல்லையெனில் ஏப்ரல், மே மாதத்தில் குடிநீர் பஞ்சத்தை அனுபவித்தே தீர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

தேர்தல் நெருங்குவதால் அதிமுகவினர் கலக்கம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபடுவர். அதிகாரிகள் தேர்தல் தொடர்பான பணிகளில் அதிக கவனம் செலுத்துவர். அப்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

மேலும் மக்கள் குடிநீருக்காக கஷ்டப்பட்டால் சாலை மறியல் உள்ளிட்ட சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட வழிவகுக்கும் என்பதால், குடிநீர் பிரச்னை தற்போது அதிமுகவினரை கலக்கமடைய வைத்துள்ளது. எனவேதான், ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான பணிகளை இப்போதே அதிமுகவினரும், அதிகாரிகளும் இணைந்து திட்டமிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி மேயர் வி.வி ராஜன் செல்லப்பா, ஆணையர் கிரண்குராலா ஆகியோர் அரசு செயலர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் இதுபற்றி ஆலோசிப்பதற்காக சென்னை விரைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x