Published : 27 Oct 2014 01:28 PM
Last Updated : 27 Oct 2014 01:28 PM

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நாளிதழ்கள் திகழ வேண்டும்: தி இந்து வாசகர் திருவிழாவில் காந்திகிராம பல்கலை. துணைவேந்தர் வேண்டுகோள்

நாளிதழ்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலியைத் தொடர்ந்து திண்டுக்கல் நாயுடு மகாஜன நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் துணைவேந்தர் எஸ்.நடராஜன் பேசியதாவது:

மற்ற தினசரி தமிழ் நாளிதழ்களில் இருந்து 'தி இந்து' தமிழ் நாளிதழ் முற்றிலும் மாறுபட்டதாக வெளியாகியுள்ளது. அன்றாட செய்திகளுடன், சமுதாய விழிப்புணர்வு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், வர்த்தகம், ஜோதிடம், கல்வி, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தாங்கிய ஒரு தினசரி புத்தகமாக மக்களுக்குத் தருகின்றனர். அதனால், இளைஞர்கள், மாணவர்களுக்கு இன்று 'தி இந்து' நாளிதழ் பொக்கிஷமாகிவிட்டது. மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை பற்றிய தேடுதலையும், அறிவுத்திறனையும் வெளிப்படுத்தும் கருவியாக "தி இந்து" நாளிதழ் செயல்படுகிறது.

பொதுவாக பல்கலைக்கழகங்களில் கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் இணைந்த கலவையாக படிக்கின்றனர். ஆங்கிலம் சரளமாகத் தெரிந்தவர்களுக்கு தமிழ் வராது. தமிழ் தெரிந்தவர்களுக்கு ஆங்கிலம் வராது. தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் தற்போது 'தி இந்து' நாளிதழ்கள் வருவது கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது.

இளைஞர்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி

இந்தியாவில் இன்று 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களாக உள்ளனர். இளைஞர்களுடைய முன்னேற்றம்தான் நாட்டின் வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. அத்தகைய இளைஞர்களுடைய வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

சுயதொழில், கல்வி, எதிர்காலம் பற்றிய சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இளைஞர்கள் தடுமாறுகின்றனர். மாணவர்கள் வேலைவாய்ப்புக்கான கல்வியைத் தேர்ந்தெடுக்க தெரியாமல் சிரமப்படுகின்றனர். இளைஞர்கள், மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நாளிதழ்கள் செயல்பட வேண்டும். விஞ்ஞான முறையில் தொழில்நுட்ப அறிவைப் பெற உதவி செய்ய வேண்டும். எதிர்மறை செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளிலும் நாளிதழ்கள் ஈடுபட வேண்டும். சுய தொழில், வேலைவாய்ப்புகள் பற்றிய பல்துறை துறை வல்லுர்கள் கருத்துகளை கேட்டறிந்து சமூக அக்கறையுள்ள செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இன்று 'தி இந்து' நாளிதழ் தகவல் தொழில்நுட்ப வசதிகளை அதிகம் பயன்படுத்தி, வாசகர்களுக்கு இருந்த இடத்திலேயே உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

"தி இந்து"வின் 'உங்கள் குரல்' மூலம் வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து தவறுகளையும், தகவல்களையும் கேட்டு நாளுக்குநாள் மெருகேற்றிக் கொள்கின்றனர். பத்திரிகைகள் நிறைய வரலாம், போகலாம். ஆனால் 'தி இந்து' பத்திரிகை துறையில் மட்டுமின்றி வாசகர்களிடம் நிலையான ஒரு இடத்தைப் பெற்றுவிட்டது. 'தி இந்து' ஆணித்தரமாக 'உள்ளதைச் சொல்வோம், நடந்ததை எழுதுவோம்' பாணியில் வெளியிடும் செய்திகள் நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது.

சமுதாயம், மதம் சார்ந்த செய்திகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கிராமத் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கிராமத்தில் இருப்பவர்கள் நகரங்களை நோக்கி ஓடுகின்றனர். ஆனால், குஜராத்தில் நகரங்களில் வசிப்பவர்கள் கிராமங்களை நோக்கி ஓடுகின்றனர். அந்தளவுக்கு அந்த மாநிலத்தில் கிராமங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. அதுபோன்ற வளர்ச்சி தமிழகத்திலும் ஏற்பட கிராமப்புற விவசாயம், தொழில்களுக்கு நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியை இந்து குழுமத்தின் மூத்த பொது மேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். நிறைவாக திண்டுக்கல் கூடுதல் விற்பனைப் பிரதிநிதி கே.முத்துக்குமரன் நன்றி கூறினார்.

விழாவில் "தி இந்து" குழுமத்தின் சிறப்பு வெளியீடுகளான தீபாவளி மலர் உள்ளிட்ட பல்வேறு மலர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x