Published : 18 Feb 2014 08:12 PM
Last Updated : 18 Feb 2014 08:12 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊருக்குள் படையடுக்கும் மலைப் பாம்புகள் கட்டுப்படுத்தும் வகையில் பாம்பு பண்ணை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்து 400 சதுர கிலோமீட்டர் பரப்பில் வனப் பகுதிகள் அமைந்துள்ளன. கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, அஞ்செட்டி, ஊடேதூர்கம், சிங்காரப்பேட்டை, தொகரப்பள்ளி, ஒசூர், ஜவளகிரி வனச் சரகங்களில் யானை, சிறுத்தைப்புலி, கடமான், புள்ளிமான், காட்டுபன்றி, மயில், உடும்பு, கீரிப்பிள்ளை மற்றும் ஏராளமான மலைப் பாம்புகள் உள்ளன.
கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, அரசம்பட்டி, பாரூர், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட 16 காப்புக் காடுகளிலிருந்து சமீபகாலமாக ஏராளமான மலைப் பாம்புகள் கிராமங்களிலும், விவசாய நிலங்களிலும் ஊடுருவுகின்றன. அவை ஆடு, கோழி, எலிகளை விழுங்குகின்றன. இவற்றை மக்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைக்கின்றனர். சாதாரண பாம்புகளை அடித்துக் கொல்பவர்கள் கூட, மலைப் பாம்புகளைத் துன்புறுத்தாமல், வனத் துறையினரிடம் ஒப்படைத்துவிடுகின்றனர்.
பாம்பு சரணாலயம்
வனப் பகுதிகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாறியதும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவதும் ஊருக்குள் பாம்புகள் நுழைவதற்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றன. வனப் பகுதியில் யானை, மான், மயில் ஆகியவற்றைப் பாதுகாக்க வனப் பகுதி இருப்பதுபோல், மலைப் பாம்புகளைப் பாதுகாக்க பாம்புகள் சரணாலயம் அமைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைப் பூங்கா அல்லது அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் பாம்பு பண்ணை அமைக்க சுற்றுலாத் துறையும், வனத் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வனச் சரகர் பாபு கூறுகையில், மலைப் பாம்புகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மலைப் பாம்புகளுக்கு சரணாயலாம் அமைப்பது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார், என்றார்.
மூன்று மலைப் பாம்புகள்
போச்சம்பள்ளி அருகேயுள்ள பெரிய கரடியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமரேசன் என்பவரது தென்னந்தோப்பில் மூன்று மலைப் பாம்புகள் நுழைந்தன. அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் அவற்றைப் பிடித்தனர். சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்புகளுக்கு பூஜை செய்த கிராம மக்கள், பின்னர் அவற்றை காப்புக் காட்டில் விட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊருக்குள் அடிக்கடி மலைப் பாம்புகள் நுழையும். எனினும், ஒரே நேரத்தில் மூன்று மலைப் பாம்புகள் வந்தது இதுவே முதல்முறையாகும். பாம்புகளைப் பிடித்த பின்னர் நாங்கள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுப்போம். ஆனால், சில சமயங்களில் அவர்கள் வருவதில்லை.
அப்போது, காப்புக் காடு அல்லது ஏரிகளில் மலைப் பாம்புகளை விட்டு விடுகிறோம். அவை மீண்டும் ஊருக்குள் வந்து விடுகின்றன, என்றனர்.
இரையை மயக்கும் ஒலி
மலைப் பாம்பு இரை தேடும் முறை வித்தியாசமானது. தனக்கான இரையைப் பார்த்தால், மலைப் பாம்பு வித்தியாசமான ஒலியை எழுப்பும். அந்த சப்தத்தைக் கேட்டு மயங்கும் விலங்குகளைப் பிடித்து, எலும்புகளை நொறுக்கி விழுங்கி விடும். ஒரு ஆட்டை விழுங்கும் மலைப் பாம்பு குறைந்தது மூன்று மாதங்களுக்கு இரையைத் தேடிச் செல்லாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT