Published : 27 Feb 2014 08:02 PM
Last Updated : 27 Feb 2014 08:02 PM
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும், நவீன கேமராக்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, நோயாளிகள் தவிர, அவர்களைக் காண வரும் பார்வையாளர்களையும் சேர்த்தால், தினசரி 5,000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இவ்வளவு கூட்டம் வருவதால், சில குற்றச் செயல்களும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுவதாக புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. மேலும், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதில்லை, என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கேமரா கண்காணிப்பு
இந்த புகார்களை தவிர்க்கவும், மருத்துவமனை, நோயாளிகள், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நவீன கேமராக்கள் நிறுவி, மருத்துவமனை வளாகத்தை முழுமையாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே 10 கேமராக்கள் உள்ளன. ஆனால், அவை மருத்துவமனை வளாகம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் இல்லை. தற்போது, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ரூ.3.5 லட்சம் செலவில் மருத்துவமனையில் 32 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில், திருச்செந்தூர் சாலையில் உள்ள வாயில், பின்புற வாயில், தாய் சேய் நல சிகிச்சை மையம், குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட, 32 இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு அறை
இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை, மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அலுவலர் அறையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெரிய திரையில், மருத்துவமனை வளாகம் முழுவதையும் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உறைவிட மருத்துவ அலுவலர், உதவி உறைவிட மருத்துவ அலுவலர் ஆகியோர், இந்த கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பர். கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், விரைவில் முறைப்படி செயல்பட உள்ளன.
ஒலிபெருக்கி வசதி
மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் ஜே.சைலஸ் ஜெயமணி கூறியதாவது:
இம்மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே 10 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு குற்றச் செயல்கள் குறைந்துள்ளன. தற்போது, 32 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 35 மீட்டர் தொலைவு வரை கண்காணிக்கும் வசதி கொண்டவை. அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட ஏதாவது ஒரு பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்தாலோ, மருத்துவர் இல்லாமல் இருந்தாலோ கேமரா மூலம் கண்காணித்து, உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவுக்கு மருத்துவரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக மருத்துவமனையின் மெயின் கேட், திருச்செந்தூர் சாலை கேட், பின்புற கேட், குழந்தைகள் வார்டு, சிறப்பு வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட 13 இடங்களில் ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. உறைவிட மருத்துவ அலுவலர் அலுவலகத்தில் உள்ள மைக் மூலம், அந்த பகுதியில் இருப்போருக்கு உரிய அறிவுரைகள் வழங்க முடியும். இந்த கேமராக்கள் மூலம் மருத்துவமனையின் பாதுகாப்பு மட்டுமின்றி, நோயாளிகள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கவும், நோயாளிகளுக்கு ஏற்படும் இன்னல்களை உடனுக்குடன் அறிந்து நிவர்த்தி செய்யவும் முடியும். இந்த கேமராக்கள் விரைவில் முறைப்படி தொடங்கி வைக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT