Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM
எத்தனை முறை அரசு விலையை ஏற்றினாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஒரு லிட்டர் டீசலுக்கு 80 பைசா தள்ளுபடி கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள் சங்ககிரியில். அங்குள்ள 3 பெட்ரோல் பங்க்குகள், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு சொந்தமானவை. அந்த 3 பங்க்குகளில்தான் இந்தத் தள்ளுபடி.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் குமாரசுவாமி கூறியது: 1974-ல் வெறும் 33 உறுப்பினர்களோடு ஆரம்பித்த எங்கள் சங்கத்தில் இப்போது 2600 பேர் உறுப்பினர்கள். இவர்களுக்கு 10 ஆயிரம் லாரிகள் ஓடுது. சங்கத்துக்காக 1980-ல் ஒரு பெட்ரோல் பங்க்கை ஆரம்பிச்சோம். இப்ப அது மூன்றாக பெருகி நிற்கிறது.
அளவு குறைவு, கலப்படம்னு எந்தப் புகார்களும் இல்லாம முதல்ல வாடிக்கையாளர்களுக்கு எங்க மேல நம்பிக்கை வரவெச்சோம். அதனால நாங்க வேகமா வளர்ந்தோம். 2003-ல் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் லிட்டரா இருந்த டீசல் விற்பனை, இப்ப ரெண்டு லட்சமா உயர்ந்திருக்குது. ஆயில் கம்பெனிகள், எங்களுக்கு கொடுக்கும் கமிஷனில் வாடிக்கையாளருக்கு ஏதாச்சும் பண்ணலாமேன்னு யோசிச்சோம். அதுல உருவானதுதான் இந்த இன்சென்டிவ் சிஸ்டம். 6 வருஷத்துக்கு முன்னால லிட்டருக்கு 20 பைசா இன்சென்டிவ் கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமா அதை உயர்த்திக்கிட்டே வந்தோம். இப்ப சங்க உறுப்பினர்களுக்கு 80 பைசா, வாடிக்கையாளர்களுக்கு 60 பைசான்னு வைச்சிருக்கோம். எங்க வருமானத்துல 70 சதவீதத்தை வாடிக்கையாளர்களுக்கே கொடுக்கிறோம்.
சங்க உறுப்பினர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையா இந்த இன்சென்டிவை கொடுப்போம். மத்தவங்களுக்கு உடனுக்குடன் வழங்கிருவோம். சேலம், திருச்செங்கோடு சங்கத்துக்கு சொந்தமான பங்க்குகளிலும் எங்களவிட கம்மியான அளவில் இன்சென்டிவ் கொடுக்கிறார்கள். எங்க சங்கத்துக்கு சொந்தமா மூன்று ஆட்டோமொபைல் ஸ்டோரும் நான்கு ஆயில் ஸ்டோரும் இருக்கு. எல்லாவற்றிலும் சேர்த்து வருஷத்துக்கு 390 கோடிக்கு வியாபாரம். 40 லட்சம் வருமான வரி கட்டுறோம் என்று வளர்ந்த கதையை பெருமையுடன் சொன்னார் குமாரசுவாமி.
தொடர்ந்து பேசிய சங்கத்தின் செயலாளர் செல்வராஜு, ‘‘லாரி வீலுக்கு நைட்ரஜன் காஸ் பிடித்தால் தேய்மானம் குறையும். மற்ற இடங்களில் ஒரு வீலுக்கு 100 ரூபாய் கேட்பாங்க. ஆனா, நாங்க இலவசமாவே குடுக்குறோம். டிஸ்டில்டு வாட்டரையும் இனாமா கொடுக்கிறதுக்காக தனியா ஒரு பிளான்டே போட்டுட்டோம். எங்க பங்க்குல குறைந்த கட்டணத்தில் ரயில் முன் பதிவு, ஜெராக்ஸ் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குறோம். எங்களுடைய பணியாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவருமே பிளட் டோனர்கள். அத்தனை பேருக்கும் ஐந்து லட்ச ரூபாய்க்கு காப்பீடு செய்திருக்கிறோம்’’ என்றார்.
தேசியம், மாநிலம், மண்டலம் என வாங்கிக் குவித்திருக்கும் விருதுகள், இவர்களின் உன்னத சேவைக்கு இன்னொரு மைல்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT