Published : 20 Feb 2014 04:54 PM
Last Updated : 20 Feb 2014 04:54 PM
‘சில ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வரும் தீப்பெட்டித் தொழில், தற்போது தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களை நோக்கி நகரும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என்று, சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கலால் வரி விலக்கு, ஏற்றுமதி ஊக்கத் தொகை உயர்வு போன்றவை கேட்டு, 6 ஆண்டுகளாக போராடும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், இது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தீப்பெட்டித் தொழில்
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம் பகுதிகளிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில், குருவிகுளம், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், தருமபுரி மாவட்டத்தில் காவேரிபட்டணம் பகுதியிலும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.
தமிழகம் முழுவதும் 20 முழு இயந்திர மயமாக்கப்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 300 பகுதி இயந்திரமாக்கப்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் உள்ளன. கையினால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் 2,000-க்கும் மேற்பட்டவை இயங்குகின்றன.
இத் தொழிற்சாலைகளில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இதில், 90 சதவிகிதம் பேர் பெண்கள். நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு, தமிழகத்தில் இருந்துதான் தீப்பெட்டி அனுப்பப்படுகிறது. ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் தமிழகத்தில் இருந்து தீப்பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உற்பத்தி செலவு அதிகம்
கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளை பொறுத்தவரை, 600 தீப்பெட்டிகளை கொண்ட பண்டல் தயாரிக்க ரூ.125 செலவாகிறது. பகுதி இயந்திரம் மூலம் உற்பத்தி செய்ய ரூ.90-ம், முழு இயந்திரம் மூலம் உற்பத்தி செய்ய ரூ.30-ம் ஆகிறது.
ஆனால், விற்பனையைப் பொருத்தவரை ஒரு பண்டல் தீப்பெட்டி, தரம் மற்றும்
பிராண்ட் நேம் ஆகியவற்றை பொருத்து ரூ.280 முதல் 320 வரை விற்பனை செய்யப்படுகிறது. தீப்பெட்டி மூலப்பொருள்களான தீக்குச்சி, மெழுகு, ரசாயனப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.
கலால் வரி
கையினால் செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு, கடந்த 10 ஆண்டு களாக கலால் வரி கிடையாது. பகுதி இயந்திரமாக்கப்பட்ட தொழிற்சாலை களில் தயாராகும் தீப்பெட்டிகளுக்கு 6 சதவிகிதம், முழு இயந்திரமாக்கப்பட்ட தொழிற்சாலைகளில் தயாராகும் தீப்பெட்டிகளுக்கு 12 சதவிகிதம் கலால் வரி விதிக்கப்படுகிறது.
மூலப் பொருள்களின் விலை உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, வேலையாட்கள் பற்றாக்குறை, தீப்பெட்டிகளுக்கு போதுமான விலை இல்லாதது போன்றவற்றால், தீப்பெட்டித் தொழில் கடந்த சில ஆண்டுகளாகவே நெருக்கடியை சந்தித்து வருகிறது.
வரி விலக்கு கோரிக்கை
எனவே, ‘பகுதி இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 6 சதவிகிதம் மத்திய கலால் வரியை நீக்க வேண்டும். ஏற்றுமதி செய்யும் தீப்பெட்டிகளுக்கு வழங்கப்படும் 7 சதவிகித ஊக்கத் தொகையை 15 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்’ என, தீப்பெட்டித் தொழிலாளர்கள், கடந்த 6 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
‘தற்போது மக்களவைத் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலாவது சலுகைகள் அறிவிப்பார்கள் என்று, எதிர்பார்த்தோம். ஆனால், ஏமாற்றம் தான் மிஞ்சியது’ என்றார், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம்.
வடக்கு நோக்கி நகரும் அபாயம்
`2009-ம் ஆண்டு முதல் கலால் வரி விலக்கு கேட்டு போராடி வருகிறோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கு, அப்போதைய முதல்வர் கருணாநிதி பரிந்துரைக் கடிதம் அனுப்பினார். ஆனால், மத்திய நிதியமைச்சர் மற்றும் இணையமைச்சர் ஆகியோர் தமிழர்களாக இருந்தும், அந்த பரிந்துரையை ஏற்கவில்லை.
நாங்கள் இதுவரை 7 முறை டெல்லிக்கு சென்று மத்திய நிதியமைச்சர், இணையமைச்சர், அதிகாரிகளை சந்தித்து, இது தொடர்பாக மனு கொடுத்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால், கையினால் உற்பத்தி செய்யும் தீப்பெட்டித் தொழில், பகுதி இயந்திரமாக்கப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அறிவிக்கப்படாத மின்வெட்டு, தீப்பெட்டி மூலப் பொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை மூலம் பாதிப்படைந்துள்ள இத்தொழில் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.
மேலும், உத்திரகாண்ட், ஜார்கண்ட், உ.பி. போன்ற வடமாநிலங்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இதுவரை தீப்பெட்டி கொள்முதல் பகுதிகளாக இருந்த இடங்கள், தற்போது உற்பத்தி மையமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தீப்பெட்டித் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக வடமாநிலங்களை நோக்கி நகரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் சேதுரத்தினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT