Published : 27 Feb 2014 11:34 AM
Last Updated : 27 Feb 2014 11:34 AM

கோவை: கும்கி நஞ்சனின் பரிதாப மரணம்

'முகாமுக்கு வேண்டாம். அதன் உடல்நிலை சரியில்லை. எந்த நேரமும் மதம் பிடிக்கும் நிலையில் இருக்கிறது; மதம் பிடித்த நிலையில் அதற்கு வேண்டுவது அமைதி; விடுதலை. அந்த நிலையில் மற்ற யானைகளை பார்த்தால் மூட் அவுட்டாகி அமைதியை இழந்துவிடும். அதன்பின்பு எந்த விபரீதமும் நடக்கலாம்!'

- இப்படி தலைதலையாய் அடித்துக்கொள்ளாத குறையாக 2 மாதங்களுக்கு முன்பு சொன்னார்கள் பாகன்கள். அவர்கள் எதற்காக பயந்தார்களோ அது நடந்தே விட்டது. 55 வயது 'கும்கி' நஞ்சன். வரும்போது 4950 கிலோ இருந்த அதன் எடை 3000 கிலோவுக்கு குறைவாக இறங்கி, அது மரணத்தையும் தழுவியிருக்கிறது. மரணம் என்று சொல்வது தவறு மாமலை சரிந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில், குறிப்பாக கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மலையடிவார கிராமங்களில் காட்டுயானைகள் தொல்லை மிகுதியாக அவற்றை அடக்க இங்கே ஒரு கும்கி யானை கேம்ப் போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்காக டாப்ஸ்லிப் வனப் பகுதியில் இருந்த வனத்துறைக்கு சொந்தமான கும்கிகளில் நஞ்சன், பாரி என்ற இரண்டு யானைகளை தொண்டாமுத்தூர் அருகே உள்ள போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கே சாடிவயல் பகுதியில் நிரந்தர கும்கி முகாம் அமைத்து பாகன்களும் யானைகளும் தங்கவும், உணவுகள் வழங்கவும் வசதிகளை ஏற்பாடு செய்தது.

காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் முதல் தொண்டாமுத்தூர் வாளையாறு வரை எங்கெல்லாம் அரிச்சாட்டியம் செய்கிறதோ, அவற்றை விரட்டியடிப்பது இந்த கும்கிகளின் பணி. தவிர, வேலையில்லாத சமயங்களில் கோவை குற்றாலத்திற்கு வருகிற சுற்றுலா பயணிகளை சவாரி செய்து குஷிப்படுத்துவதும் இவற்றின் பணி.

அப்போதே நஞ்சன், பாரியின் பாகன்களும் உதவியாளர்களும் புலம்பித் தீர்த்தனர். அடர்ந்த வனத்திற்குள் எங்களுக்கான எல்லா வசதிகளுடனும் இருந்தோம். இந்தச் சூழல் யானைகளுக்கோ எங்களுக்கோ ஒத்துவருமா என்றும் தெரியவில்லை. நாங்கள் கேட்கும் வசதிகளை வனத்துறையினர் செய்து தரவும் மறுக்கிறார்கள் என்று நேரடியாக நான் செய்தி எடுக்கப்போன வேளையில் புலம்பித் தீர்த்தார்கள்.

இன்றளவும் அவர்கள் எதிர்பார்த்த வசதிகள் எந்த அளவு நிறைவேற்றப்பட்டன என்பது கேள்விக்குறிதான். இந்த கும்கிகள் இங்கு வந்த பின்பு இந்த பிராந்தியத்தில் எந்த யானையை விரட்டியது என்பதுவும் கேள்விக்குறிதான். எங்கே காட்டுயானைகள் தொந்தரவு என்று மக்கள் புகார் கொடுக்கிறார்களோ அங்கெல்லாம் காட்சிப்பொருளாக அரங்கேறுவதே கும்கிகளின் வேலையாக இருந்தது. அப்படித்தான் குப்பபாளையம் என்ற கிராமத்தில் (சாடிவயல் கேம்பிலிருந்து சுமார் 15 கி.மீ தூரம்) காட்டுயானைகள் தொந்தரவு என்று 3 மாதங்களுக்கு முன்பு சென்று பர்ணசாலை அமைத்து தங்கியது இரண்டு கும்கிகளும். அங்கே 10 நாட்களுக்கு மேலாக காட்டுக்குள்ளிருந்து நாட்டுக்குள் புகும் காட்டுயானைகளை திரும்ப காட்டுக்குள்ளேயே விரட்டி விடும் பணியை செய்தது. இதேவேளையில் இதன் அருகாமை கிராமமான தாளியூரில் காட்டுயானைகள் தொந்தரவு என்று அங்கே பயணப்பட்டது கும்கிகள்.

அங்கும் ஒருவாரம் கேம்ப். இங்கே கும்கிகள் முகாமிடுவதற்கு 2 மாதங்கள் முன்பிருந்தே மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரே பிரச்சனை. காட்டுயானைகள் தாக்கி 2 பேர் மரணம். பல்வேறு வீடுகள் சேதம். வாழைத்தோட்டங்கள் நாசம். கும்கி வந்தால்தான் ஆச்சு. என்று மக்கள் சாலை மறியல், வனத்துறை அலுவலக முற்றுகை போராட்டம், வன அலுவலகத்தில் தூங்கும் போராட்டம் எல்லாம் நடத்தினர். தாளியூருக்கும் மேட்டுப்பாளையம் வன கிராமங்களுக்கும் தொலைவு 60 கி.மீ க்கு குறையாது.

தாளியூரிலேயே நஞ்சன் மஸ்து எனப்படும் மதம் பிடிக்கும் நிலையில் மூர்க்கமாக இருந்தது. கட்டி வைக்கப்பட்டிருந்த மரக்கிளைகளை எல்லாம் துவம்சித்து உடைத்துக் கொண்டிருந்தது. எனவே இதை சாடிவயல் கேம்பில் கொண்டு போய் கட்டிப்போட்டு அமைதிப்படுத்துவதை தவிர வேறுவழியில்லை என பாகன்கள் வனத்துறையினருக்கு எடுத்துச் சொன்னார்கள். வனவர்களோ, வேறு வழியில்லை. இது செல்லாவிட்டால் மேட்டுப்பாளையம் மக்களை அமைதிப்படுத்த முடியாது. அரசியல் நெருக்கடியும் உண்டு என்று உறுதிபட சொல்லி விட மேட்டுப்பாளையத்திற்கும் பயணமானது நஞ்சனும் பாரியும்.

அங்கே அடுத்தடுத்து வந்த கும்கிகளை மனதார வாழ்த்தி வரவேற்றார்கள் கிராமத்து மக்கள். குரும்பனூர் என்ற கிராமத்தில் அதற்காக கொட்டகை அமைக்கப்பட்டது. இரவு ரோந்து சென்றது கும்கிகள். இவை வந்த நேரமோ என்னவோ காட்டுயானைகள் எங்கோ காட்டுக்குள்ளேயே அந்த சமயம் ஓடி ஒளிந்து கொண்டன.

இந்தச் சூழலில்தான் வனத்துறை மற்றும் கோயில் வளர்ப்பு யானைகள் முகாம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. அதற்கு இந்த கும்கிகளும் போயே ஆக வேண்டும் என்றது வனத்துறை. வேண்டவே வேண்டாம். நஞ்சனுக்கும் பாரிக்கும் மஸ்து வந்து கொண்டிருக்கிறது. உடனே சாடிவயல் செல்வதுதான் சரி என்றனர். அதிலும் வனவர்களின் அதிகாரமே மேலோங்கியது. விளைவு. யானைகள் நலவாழ்வு முகாமிற்கு கடந்த டிசம்பர் 19-ம் தேதி தமிழக அரசின் யானைகள் நல வாழ்வு முகாமிற்கு வந்தது பாரி, நஞ்சன்.

இவை வருவதற்கு முன்பே வனத்துறை யானைகள் ஆண்யானைகள், கோயில் யானைகள் பெண் யானைகள் எனவே இவற்றை அருகருகே வைத்தால் அவற்றின் உணர்வுகள் தூண்டப்பட்டு மதம் பிடிக்கும் நிலை ஏற்படலாம் என்ற கருத்தும், எதிர்ப்பும் சுற்றுச்சூழல், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வந்தது. அந்த எதிர்ப்பை தவிர்க்க கோயில் யானைகளுக்கு தேக்கம்ப்பட்டியிலும், வனத்துறை வளர்ப்பு யானைகளுக்கு விளாமரத்துாரிலும் கேம்ப் அமைத்து தனித்தனியாக யானைகள் நலவாழ்வு முகாமை துவங்கினர்.

வனத்துறை யானைகள் முகாமில் நஞ்சன், பாரி உள்பட மொத்தம் 18 யானைகள் பங்கேற்றன. அப்போது முதலே, இரண்டு யானைகளும் மதம் பிடிக்கும் நிலையில் இருந்தன. அந்த நேரத்தில் காட்டு யானைகள் முகாமிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வந்தன. அப்போதும் கூட நஞ்சன், பாரியும் மற்ற யானைகளுக்கு பாதுகாப்பாக இருந்து காட்டு யானைகளை விரட்டி வந்தன. முகாம் தொடங்கி 25 நாள் இருக்கும் போது இரு யானைகளுக்கும் மதம் உச்சநிலை அடைந்தது. இதில் நஞ்சன் மிக ஆக்ரோஷமாக செயல்பட்டதில் பரணி, சேரன் ஆகிய வனத்துறை யானைகளை குத்தி காயப்படுத்தியது.

இதனால், 4 கால்களையும் பலமான சங்கிலிகளால் நஞ்சனை மரத்தில் தனித்து கட்டி வைத்தனர். மதம் காரணமாக சங்கிலியை அறுக்க நஞ்சன் தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதனால், சங்கிலி அறுத்துக்கொண்டே இருந்ததால் பின் வலது காலில் புண் ஏற்பட்டது. புண் என்றால் சாதாரண புண் அல்ல. தடிமனான கால் சங்கிலி அந்த புண்ணிற்குள் சென்று ஆழமாகவே பதிந்து வெளியில் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. அதைப்பார்த்து பாகன்களும், உதவியாளர்களும் பதறினர். ஆனால் வனத்துறையினரால் ஆரம்ப நிலையில் புண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஏனென்றால் அவை பாகன்கள் உட்பட யாரையும் கிட்ட நெருங்க விடவில்லை. பிப்ரவரி 4-ம் தேதி முடிவடைந்த நிலையில் மதம் அடைந்த நிலையில் இருந்த நஞ்சன், பாரியையும் லாரியில் ஏற்ற முடியவில்லை.

இதனால் முகாம் நடந்த அத்துவானக்காட்டு பகுதியிலேயே விட்டு விட்டு சென்றனர் நலவாழ்வு முகாம் நடத்தினவர்கள்.

அங்கு அதுவரை போடப்பட்டிருந்த செட்டுகள் கூட பிரித்து சென்று விட்டனர் ஒப்பந்ததாரர்கள். அதைத்தொடர்ந்து நாங்களும், நஞ்சன் பாரியும் அனாதைகளாக எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனித்து விடப்பட்டோம் என்று பாகன்கள் கதறினர். நமக்கு பேட்டியும் அளித்தனர். அது 'தி இந்து'வில் செய்தியாக வந்தது. அதன்பிறகே அதே இடத்தில் 8 வனவர்களையும், துப்பாக்கி மற்றும் பட்டாசு, யானை மற்றும் பாகன்களுக்கான உணவு ஏற்பாடுகளையும் செய்து தந்தனர் வனத்துறை அதிகாரிகள்.

அதைத்தொடர்ந்து பாரி முற்றிலும் குணமடைந்தது. நஞ்சனுக்கு ஓரளவு மதம் குறைந்து வந்தது. பாகனை மட்டும் அருகே அனுமதித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நஞ்சனுக்கு ஊசி மூலம் மருந்து புகட்டப்பட்டது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அன்று நஞ்சனின் காலில் அறுத்த சங்கிலி நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வெட்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து, பின்பக்க சங்கிலிகள் அகற்றப்பட்டன. முன்பக்கம் மட்டும் சங்கிலிகள் கட்டப்பட்டன. அன்றிலிருந்தே இருந்தே நஞ்சன் சாப்பிட மறுத்துவிட்டது. தண்ணீர் உள்ளிட்ட எந்த உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், முகாமிற்கு வரும் போது 4,950 கிலோவாக இருந்த நஞ்சன், 3 ஆயிரம் கிலோவிற்கு கீழே குறைந்தது. வயிறு ஒட்டி கழுத்தும் சுருங்கிவிட்டது. கும்கி யானைகளிலேயே மிகவும் பிரமாண்டமாகவும், வலிமையான தோற்றமாக அறியப்பட்ட நஞ்சன் மிகவும் வற்றி தனது தோற்றத்தையே இழந்து நின்றது.

கோவை மாவட்ட வனத்துறை மருத்துவர் மனோகரன் குழு தொடர்ந்து காட்டுக்குள் வருவதும், சிகிச்சையளிப்பதும் தொடர்ந்தது.

அதன் உச்சகட்டமாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த யானைகள் நல மருத்துவ நிபுணர் பணிக்கர் தலைமையில் நஞ்சனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு நாளில் நஞ்சன் உணவு உட்கொள்ளும் என்று கேரண்டி கொடுத்துவிட்டு சென்றார் பணிக்கர். ஆனால் 3 நாட்களாகியும் நஞ்சன் வாய் திறக்கவில்லை. அதனால் இரண்டு நாட்களுக்கு முன்பு 100 பாட்டில் குளுக்கோஸ், கால்சியம் ஊக்க மருந்து புண் ஆறும் மருந்துகள் ஊசி மூலமாக செலுத்தப்பட்டன. தொடர்ந்து நஞ்சனை லாரியில் ஏற்றி போளுவாம்பட்டி கும்கி முகாமிற்கு கொண்டு செல்ல முயற்சித்தனர் வனவர்கள். அதற்கு அதனால் ஒத்துழைக்க முடியவில்லை. கால்கள் நடுங்கின. இதனை வாய்திறக்க மறுக்கும் நஞ்சன் என்று செவ்வாய்க்கிழமை 'தி இந்து'வில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில்தான் நேற்று முன்தினம் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வன விலங்கின அறிவியல் துறை தலைவர் டாக்டர் ஜெயாதங்கராஜ், உதவி பேராசிரியர் மருத்துவர் பழனிவேல்ராஜன், மாவட்ட மருத்துவர் மனோகரன் உள்ளிட்டோர் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனைக்காக ரத்தம், சிறுநீர், சாணம் ஆகியவற்றை சேகரித்தனர். வாய் மூலம் குளுக்கோஸ் விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.காலை 10.30 மணிக்கு துவங்கிய இந்த சிகிச்சை மதியம் 1.30 வரை நீடித்தது. அதைத்தொடர்ந்து தள்ளாடி மருத்துவர்கள் முன்னிலையிலேயே நஞ்சன் கீழே விழுந்தது. சில நிமிடங்கள் கால்கள் வெட்டி வெட்டி இழுக்க தனது இறுதி மூச்சை விட்டது.

வால்பாறை காடுகளில் 7 வயது குட்டியாக இருக்கும்போது அனாதரவாக வனத்துறையினரிடம் அகப்பட்டதாம் நஞ்சன். அது முதலே நஞ்சனுக்கு பணிப்பயிற்சிகளை அழித்து, மேற்கு வங்கத்தில் கும்கி யானைக்கான பயிற்சிகள் தரப்பட்டு டாப்ஸ்லிப் வன உயிரின பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டதாம். தமிழக வனத்துறையிலேயே கட்டுமஸ்தானான உடல்வாகும், எப்பேற்பட்ட பளுவையும் துாக்க வல்லதும், எப்படிப்பட்ட காட்டுயானையையும் லாவகமாக துரத்தி அடிப்பதிலும், மடக்கி பிடித்து வளர்ப்பு முகாமிற்கு கொண்டு வருவதிலும் கெட்டிக்காரனாக விளங்கிய நஞ்சன் இன்னும் 3 வருடத்தில் 58 வயதில் ஓய்வு பெறுவதாக இருந்தது. அதற்குள் தன் மூச்சை விளாமரத்தூரில் விட்டுவிட்டது.

''நலவாழ்வு முகாம் வேண்டாம். அதற்கு மஸ்து கிளம்பினால் தேவை அமைதி, விடுதலை. அதை செய்யாமல் மற்ற யானைகள், குறிப்பாக பெண்யானைகள் உலாவும் பகுதியில் கொண்டு போய் நிறுத்தி அதன் வாசம் பட்டாலே அதற்கு இம்சைதான் கூடுதலாக ஏற்படும். அதனால் மஸ்து கூடுதலாக வடிந்து சொல்ல முடியாத துன்பத்தை அடையும் என்று எவ்வளவோ எடுத்துச்சொன்னோம். அதை யாருமே கேட்கவில்லை. இப்போது அதன் உயிரையே காவு வாங்கிவிட்டது. நாங்களும் வனபத்திரகாளி, வனதேவதைகள் எல்லாவற்றையும் கும்பிட்டு படையல் வைத்து நஞ்சன் பிழைக்க எவ்வளவோ வேண்டுதல் செய்தோம். இப்ப நாங்க பயந்தது நடந்துடுச்சே!'' என்று நஞ்சனின் பாகனும், அவரின் உதவியாளர்களும் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. நலவாழ்வு முகாமே நஞ்சனுக்கு மரணத்தை தந்திருப்பது யாரும் ஜீரணிக்க முடியாத கொடுமைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x