Published : 17 Dec 2013 10:57 AM
Last Updated : 17 Dec 2013 10:57 AM

பைக் ரேஸ்: விர்ர்ர்ரூம்... மரண விளையாட்டின் மறுபக்கம்!

வீதிகளில் காற்றாடி விடுவதும், சாலைகளில் மோட்டார் பைக் ரேஸ் செல்வதும் சென்னையின் கறுப்பு விளையாட்டுகளாக ஆகி விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இதில் சிக்கி உயிரிழந்த சிறுமி சைலஜா உள்பட பைக் ரேஸ் பறித்த அப்பாவிகளின் உயிர்கள் ஏராளம். கடந்த இரு தினங்களுக்கு முன்புகூட மெரினாவில் பைக் ரேஸ் ஓட்டிய ஆறு மாணவர்களை கைது செய்தது போலீஸ். யார் இவர்கள்? என்ன விளையாட்டு இது? பின்னணி என்ன?

பணக்கார பொழுதுபோக்கு

பைக் ரேஸ் ஓட்டுவது பெரும்பாலும் 15 தொடங்கி 22 வயதுவரையுள்ள சுள்ளான்களே. சென்னையின் கிழக்கே பெசன்ட் நகர், அடையார் பகுதியில் பெரும் பணக்காரர்கள் கொண்ட ஒரு குழுவும், வடக்கே ராயபுரம், காசிமேடு என்று இன்னொரு குழுவும் என மிகப் பெரும் குழுவியக்கம் இதில் உண்டு.

பல்வேறு விதமான அதாவது வெவ்வேறு வேகத்திறன் கொண்ட (சிசி க்யூபிக் கெபாசிட்டி) மோட்டார் சைக்கிள்களைப் பிரித்து மேய்ந்து, ஒன்றின் பகுதியை இன்னொன்றுக்கு வைத்து வேகத் திறனைக் கூட்டி பிரத்யேக ரேஸ் பைக்குகளாக மாற்றுவார்கள். இன்றைய சென்னை நிலவரப்படி மொத்தம் எட்டு வகை பைக் ரேஸ்கள் நடத்தப்படுகின்றன.

அடையாறு - லைட்ஹவுஸ்

அறிமுகப் பிரிவு இது. ஆபத்து குறைவு. அதிகாலை மற்றும் இரவு 10 மணிக்கு மேல் நடக்கும். இதன் விதி முறை, பைக்கை டியூன் செய்யக் கூடாது. பெரும்பாலும் அடையாறு பாலம் தொடங்கி கலங்கரை விளக்கம் வரை நடக்கும். இலக்கு நான்கு முதல் ஐந்து நிமிடங்கள். பந்தயத் தொகை கிடையாது.

புறநகர் பிரிவு

தாம்பரம், மதுரவாயல், கானாத்தூர், கிழக்குக் கடற்கரைச் சாலை, ஓ. எம்.ஆர். பகுதிகளில் பகலில் நடக்கும். டபுள்ஸ் கட்டாயம். இலக்கு 10 கி.மீட்டரை ஒன்பது நிமிடங்களில் கடக்க வேண்டும். பைக் டியூனிங் கூடாது. சைலன்ஸரின் உள்ளே இருக்கும் மப்ளரை வெட்டக் கூடாது. பந்தயத் தொகை ரூ. 5,000 முதல் 10,000 வரை.

கடற்கரை சாலை மட்டுமே

மெரினா காந்தி சிலை - ராயபுரம் மற்றும் காந்தி சிலை - திருவான்மியூர். அனுபவஸ்தர்களுக்கான ரேஸ் இது. நண்பகல் 12 மணியில் தொடங்கி மதியம் 3 வரை நடக்கும். ஹெல்மெட் அணியக் கூடாது. பந்தயத் தொகை 10,000 முதல் 20,000 வரை.

ரகசிய எண் அட்டை முக்கியம்

மெரினா காந்தி சிலை - ராயபுரம் - அங்கு குறிப்பிட்ட நபரிடம் ரகசிய எண் எழுதப்பட்ட அட்டையை வாங்கிக்கொண்டு, ஜெமினி - வட பழனி லட்சுமண் ஸ்ருதி சிக்னல்வரை சென்று - அங்கு மற்றொரு அட்டை யைப் பெற்றுக்கொண்டு மெரினா காந்தி சிலைக்கு திரும்பி வர வேண் டும். இதுவும் டபுள்ஸ்தான். பந்தயத் தொகை ரூ.20,000 முதல் 40,000 வரை.

சீட்டுத் தொகை சேகரிப்பு!

பைக் மற்றும் ஆட்டோ மெக்கானிக்குகளுக்கான ரேஸ் இது. கலங்கரை விளக்கம் - திருவொற்றியூர் வரை நடக்கும். குறிப்பிட்ட குழுவினர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை நடத்துகின்றனர். ஒரு குழுவுக்கு இரு பைக்குகள். டபுள்ஸ் கட்டா யம். இரண்டில் எது முந்தினாலும் அந்த அணிக்கே வெற்றி. மொத்தம் ஐந்து அணிகள் களத்தில் இறங்கும். மாதம், வார சீட்டுக் கட்டி பந்தயத் தொகையை சேகரிப்பார்கள். பந்தயத் தொகை ரூ. 50,000 தொடங்கி 3,00,000 வரை அல்லது பந்தய வாகனம். போட்டிக்கு முன் நடுவரின் சாட்சிக் கையெழுத்துடன் பத்திரம் எழுதுவார்கள்.

பந்தயத்தில் நிபந்தனைகள் உண்டு. ஐந்து இடங்களில் பைக்கை ஜிக்ஜாக் (பாம்புபோல நெளிவது) செய்ய வேண்டும். மெயின் ஸ்டாண்டை சாலையில் உரசி தீப் பொறி தெறிக்க வேண்டும். இதை பந்தயப் பிரதிநிதிகள் கண்காணிப்பர். பீக் ஹவரில் நகர நெரிசலில் தொடங்கி வட சென்னை வரை கன்டெய்னர் லாரி டிரைவர்களையே கதிகலங்க வைப்பார்கள் இவர்கள். சைலன்சர், இன்ஜின், பெட்ரோல் டேங்குகளிலும் சில மாற்றங்களை செய்து பைக்கின் வேகத் திறனை அதிகரிப்பார்கள்.

தீவிரவாத அணிகள்

தீவிரவாத ரேஸ் இது. தேர்ந்த மெக்கானிக்குகள், ஆட்டோ டிரைவர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்த குழு இது. அடிக்கடி அண்ணா சாலையில் நீங்களும் இவர்களைப் பார்க்கக்கூடும். இரண்டு இரண்டு பைக்குகளாக 10 அணிகள் பறக்கும்.

ஒரே சாலையில் அத்தனை பைக்கு களும் செல்லாது. ஒவ்வொரு அணிக் கும் ஒவ்வொரு பாதை. சராசரியாக ஐந்து கி.மீ. தூரம். ஹெல்மெட் கூடாது; சைடு ஸ்டாண்டை மடக்கக் கூடாது. பைக்கை ஜிக் ஜாக் செய்து ஐந்து இடங்களில் தீப்பொறி தெறிக்க வேண்டும். சில நேரங்களில் பந்தயத் தொகையைப் பொறுத்து பிரேக்கின் பிடிமானம் குறைவாக இருக்க வே ண்டும்.

வேகத்தை குறைக்க பிரேக்கை பயன்படுத்தக்கூடாது. கியரை மட்டுமே உபயோகிக்க வேண்டும். சிக்னலில் நிற்கக் கூடாது. போக்குவரத்து நெரிசலில் மட்டும்தான் நடக்கும். சிக்னலில் வண்டியை நிறுத்தியவர்கள், போலீஸிடம் பிடிபட்டவர்கள், கீழே விழுந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்களுக்கு மீண்டும் ரேஸில் கலந்துகொள்ள ஆயுட்கால தடை. பந்தயத் தொகை ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரை அல்லது பந்தய பைக்.

அதி தீவிரவாத அணிகள்!

அதிதீவிரவாத ரேஸ் இது. அநேகமாக இன்று இது இல்லை. ஒருவழிப்பாதையில் எதிர்ப்புறமாக வர வேண்டும். அண்ணா சாலை, அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் நடந்தது. பந்தயத் தொகை பைக் மட்டுமே.

தேவை கடுமையான சட்டங்கள்!

தற்போது போலீஸார் கடுமையான கெடுபிடிகளைக் காட்டினாலும் ரேஸ் பைக் ஓட்டுபவர்களை முழுமையாகத் தடை செய்ய முடியவில்லை. சிக்குபவர்களை இந்திய தண்டனைச் சட்டம் 279, 304 (ஏ), 308 ஆகிய பிரிவுகளில் மட்டுமே கைது செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

இதற்கும் அதிகமான தண்டனை கிடைக்கக்கூடிய பிரிவுகளில் இவர்களைக் கைது செய்வதற்கான ஆலோசனைகளை போலீஸார் மேற்கொள்வது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x