Published : 17 Mar 2014 09:27 PM
Last Updated : 17 Mar 2014 09:27 PM

தனித்து விடப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி: கன்னியாகுமரியில் திராவிடக் கட்சிகள் கலக்கம்

பொதுவுடமைத் தலைவர் ஜீவானந்தத்தை தந்த மண் கன்னியாகுமரி. அவருக்கு பின் வந்தவர்களும் தொழிலாளர்கள் நலனை முன்வைத்து தொடர்ந்து போராட்டக் களத்தில் குதித்ததால், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலுவாக இருக்கிறது.

அ.தி.மு.க. அணியில் இருந்து விலகிக் கொண்ட கம்யூனிஸ்ட்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் முந்திரி, தோட்டத் தொழிலாளர்கள் அதிகம். இவர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த வகையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இங்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது.

2004ம் ஆண்டு இத்தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஏ.வி.பெல்லார்மின் எம்.பி.யானார். 2009ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பெல்லார்மினுக்கு டெப்பாசிட் காலியானது. இருந்தும் மாவட்டம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. இச்சூழ்நிலையில், இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தனித்து, களம் காண்பதால் குமரியில் திராவிடக் கட்சிகள் கிலியடைந்துள்ளன.

தேர்தலை எதிர்கொள்வது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி கூட்டம், நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது. புகைப்படத்துக்கு மட்டுமே அனுமதி. கூட்ட விவாதம் குறித்து மார்க்சிஸ்ட் நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது:

`வர இருப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தல் தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி என குமரியில் 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்க்கும் போது திராவிடக் கட்சிகள் 5 சீட்கள் வரை கொடுக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு கூட்டணி பேரம் என உதாசீனப்படுத்துகிறார்கள். இந்த முறை குமரியில் வலுவாக இருக்கும் பா.ஜ.கவுக்கு தேர்தலில் பாடம் புகட்டி, திராவிட கட்சிகளுக்கும் எங்கள் பலத்தை நிரூபிப்போம்.

கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. முதல் முறையாக போட்டியிடுகிறது. அவர்கள் கம்யூனிஸ்ட் வேட்பாளரிடம் பாடம் படிக்கும் அளவுக்கு வேலை பார்ப்போம்.

கருணாநிதி, `இதயத்தில் இடம் உண்டு. தொகுதியில் இடம் இல்லை’ என்கிறார். ஜெயலலிதாவோ, `சந்தோஷமாக சேர்ந்தோம்...சந்தோஷமாக பிரிவோம்’ என்கிறார். மொத்தத்தில் எந்த கட்சியானாலும் இடதுசாரிகள் வலுவாகி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தேர்தலில் தனித்து களம் கண்டாலும் எதிராளிகளுக்கு கிலி கொடுப்போம்” என்றார்.

பொதுவாகவே திராவிடக் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்தே இந்த தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் களம் கண்டிருக்கிறார்கள். இப்போது முதல் முறையாக தனித்து களம் காண்பது தி.மு.க., அ.தி.மு.க.வினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x