Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM
சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு 74. இப்பகுதியில் உள்ள நம்மாழ்வார்பேட்டை, சின்னபாபு தெருவில் பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளைக் கொண்ட இந்த மார்க்கெட், சாலையை ஆக்கிரமித்து இயங்கி வருகிறது.
அத்தியாவசியமான நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட அந்த சாலையில் செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
நம்மாழ்வார்ப்பேட்டை பகுதியில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் சுப்பராயன் தெரு, நல்லநாயுடு தெரு, கன்னியம்மன் கோயில் தெரு, சத்தியவாணி தெரு, பராகா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்கள் அயனாவரம், ஓட்டேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சின்னபாபு தெருவை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் சின்னபாபு தெருவை ஆக்கிரமித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மார்க்கெட் இயங்கிவருவதால், 40 அடி கொண்ட தெரு வெறும் 8 அடி அகலத்துக்கு சுருங்கிவிட்டது. இதனால், சின்னபாபு தெருவில் கார், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடிவதில்லை.
நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, விபத்து நேரிட்டாலோ ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத நிலை நீடிக்கிறது. இதுகுறித்து, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச் சென்றும் பலனில்லை என்றார்.
சின்னபாபு தெருவில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்திருக்கும் பூங்காவனம் தெரிவித்ததாவது:
சின்னபாபு தெருவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறிக் கடைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் 40க்கும் குறைவான கடைகளே இயங்கி வந்தன. சாலையில் இயங்கும் கடைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்க, 35 ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி சார்பில் சுப்பராயன் முதல் தெருவில் வணிக வளாகம் மற்றும் மீன் அங்காடி வளாகம் அமைக்கப்பட்டது.
15 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்ட இந்த வணிக வளாகம் மற்றும் மீன் வளாகத்தில் 56 கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், நியாய விலைக்கடை, மளிகைக் கடைகள் உள்ளிட்டவைகளுக்காக தனியாக 7 கடைகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில், காய்கறி கடைக்காரர்கள் 6 மாதங்களே இருந்தனர். கடையின் பரப்பளவு குறைவாக இருந்ததால், அவர்கள் மீண்டும் சாலையிலேயே காய்கறிக் கடைகளை வைக்கத் தொடங்கினர். அந்த கடைகள் இன்று நூற்றுக்கும் மேற்பட்டவையாக பெருகிவிட்டன என்றார்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
சின்னபாபு தெருவில் இயங்கும் காய்கறிக் கடைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சுப்பராயன் முதல் தெருவில் உள்ள பழைய வணிக மற்றும் மீன் அங்காடி வளாகத்தை இடித்துவிட்டு, சாலையில் இயங்கும் காய்கறி கடைக்காரர்களுக்கு தாராள இட வசதி வழங்கும் வகையில், 2 அல்லது 3 தளம் கொண்ட புதிய வணிக வளாகத்தை அமைப்பதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT