Published : 28 Nov 2013 12:10 PM
Last Updated : 28 Nov 2013 12:10 PM
இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக 5 கம்பெனி துணை ராணுவத்தினர் வெள்ளிக் கிழமை ஏற்காடு வருகின்றனர்.
டிசம்பர் 4-ம் தேதி நடக்கவுள்ள ஏற்காடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்லுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, ஏற்காட்டில் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாளை முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். முக்கியத் தலைவர்கள் வருகையால் ஏற்காட்டில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
இந்தத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுமே பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில போலீசாருடன் சேர்ந்து, 5 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினரும் ஏற்கனவே தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் 5 கம்பெனி துணை ராணுவத்தினர் (சுமார் 600 பேர்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வந்து, இங்கிருந்து ரயிலில் ஏற்காடு செல்கின்றனர்.
ஏற்கனவே, அங்கு முகாமிட்டுள்ள 5 கம்பெனி துணை ராணுவத்தினருடன் இணைந்து இவர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர் என்று தேர்தல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
தேர்தலில் ஓட்டு போட வருபவர்கள், கண்டிப்பாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் அதிகாரிகள் வழங்கும் அதிகாரபூர்வமான புகைப்பட வாக்காளர் பூத் ஸ்லிப்களை கொண்டு வரவேண்டும். ஸ்லிப் கிடைக்காதவர்கள், வாக்குச் சாவடி வாயிலில் இதற்கென அமர்த்தப்பட்டிருக்கும் பணியாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT