Published : 22 Feb 2014 08:07 PM
Last Updated : 22 Feb 2014 08:07 PM
நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மருந்துக்கு கூட இல்லை. மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என நோயாளிகளும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என மாணவர்களும் புலம்பி வருகின்றனர்.
நாகர்கோவில் நகரின் மையப் பகுதியான கோட்டாறில் உள்ளது அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. தமிழகத்தில் அரசால் நடத்தப்படும் ஒரே ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி என்ற பெருமைக்குரியது. மருத்துவமனையில் வெளி நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெறுகின்றனர்.
அடிப்படை வசதிகளுக்காக நோயாளிகளும், மாணவர்களும் அடிக்கடி போராட்டம் நடத்துவது இங்கு வாடிக்கை. ஆனால், இக்கல்லூரியின் தரம் குறித்து ஆய்வு செய்ய வரும் மருத்துவக் குழுவினர், கல்லூரியிலும், மருத்துவமனையிலும் அடிப்படை வசதிகள் நன்றாக இருப்பதாக சான்றிதழ் கொடுத்து உள்ளனர். இது அவிழ்க்கப்பட முடியாத மர்ம முடிச்சாக இருந்து வருகிறது.
வீதிக்கு வந்த நோயாளிகள்
கடந்த 8-ம் தேதி உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், நோயின் தாக்கத்தை விட, அங்கே தங்கியிருப்பதன் கொடூரத்தை நினைத்து வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்தனர். நோயாளிகளுக்கு குடிநீர் கூட சரியான நேரத்தில் விநியோகிப்பது இல்லை என்று குற்றம் சாட்டினர். அதேவேளை, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவ, மாணவியர்களும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்க தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் கூறியதாவது:
அரசு கல்லூரி என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவியர் இங்கே படிக்கின்றனர். மாணவியர் விடுதியில் குளியலறையில் தாழ்ப்பாள் கூட இல்லை. குளியலறையின் வெளியே வாளியை வைத்து, உள்ளே ஆள் இருப்பதாக காட்ட வேண்டிய சூழல். நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம்? என நினைத்து, தலையில் அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
கல்வி சம்பந்தமாக கல்லூரி மாணவிகள் வெளியூருக்கு செமினார் சென்றால் கூட, வருகைப்பதிவு செய்வதில்லை. ஆயுர்வேத மாணவியர்களுக்கும், எம்.பி.பி.எஸ். படிக்கும் மருத்துவ மாணவிகளுக்கும் முதலாம் ஆண்டில், ‘உடற்கூறியல்’ என்ற பாடம் வரும்.
குமரி மாவட்டத்தில் அரசு எம்.பி.பி.எஸ். கல்லூரி ஆசாரிபள்ளத்தில் இருக்கிறது. ஒரே பாடம் தானே என்று சொல்லி, கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவிகளை இங்கிருந்து ஆசாரிபள்ளத்துக்கு அனுப்புகின்றனர்.
மாணவியர் விடுதியில் ஜெனரேட்டர் வசதியோ, தங்கும் அறைகளில் பொருள்களை வைக்க அலமாரி உள்ளிட்ட வசதிகளோ இல்லை. இதனால், புத்தகப்பைகளை அறையின் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்து விட்டு, அருகில் படுத்துக் கொள்கின்றனர். அறைகளில் பூச்சி, பல்லி உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக உலா வருக்கின்றன. சுகாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது என்றார் அவர்.
மருத்துவ வசதி குறைவு
கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் தாமஸ் கூறியதாவது:
ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. உள் நோயாளிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் செய்முறை பயிற்சிக்காகவும், நோயாளிகளின் மருந்துகளுக்காகவும் ஒரு மூலிகைத் தோட்டம் உள்ளது. அதை முறையாக பராமரிக்காமல் பெயர் அளவுக்கு சில மூலிகைகளை வளர்த்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியராக ஜோதி நிர்மலா இருந்த போது, குலசேகரன்புதூர் அருகில் மூலிகைத் தோட்டம் அமைக்க 5 ஏக்கர் நிலம் வழங்கினார். இப்போது அந்த இடத்தில் ஒரு துளசிச் செடி கூட இல்லை. இன்னும் சொன்னால் அந்த இடம் இருப்பதையே கல்லூரி தரப்பு மறந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
உணவு, உடை, உறைவிடம் இது மூன்றும் மனிதனின் அடிப்படைத் தேவைகள். விடுதியில் தங்கியிருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை. உறைவிடத்தில் பூச்சி, விஷஜந்துக்கள் புகுந்து நிச்சயமற்ற வாழ்வியல் சூழல் நிலவுகிறது. மொத்தத்தில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவிகள் மருத்துவர் ஆவதற்கு முன், நோயாளிகள் ஆகி விடுவார்கள் என்பதே உண்மை என்றார் அவர்.
மறுக்கும் கல்லூரி முதல்வர்
குற்றச்சாட்டுகள் குறித்து அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கிருஷ்ணமாச்சார்யாவிடம் விளக்கம் கேட்ட போது கூறியதாவது:
கல்லூரி மாணவியர் விடுதிகளில் உள்ள குறைபாடுகள் முழுமையாக சரி செய்யப்பட்டு விட்டன. கல்லூரி வளாகத்தில் தற்போது, 150 மூலிகைச் செடிகள் உள்ளன. மாணவர்கள் ஊட்டி, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டு, மூலிகைகளை பார்வையிட்டு வருகின்றனர்.
சீதோஷ்ண நிலை காரணமாக அனைத்து மூலிகைகளையும் கல்லூரிக்குள் வளர்க்க முடிவதில்லை. ‘அனாட்டமி’ பாடத்துக்காக மாணவர்கள் ஆசாரிபள்ளம் செல்வது உண்மைதான். இந்த பாடத்தை நடத்த இறந்தவர்களின் உடல் தேவை. அவை எங்கள் கல்லூரிக்கு ஒதுக்கப்படவில்லை என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT