Last Updated : 30 Jan, 2014 09:20 PM

 

Published : 30 Jan 2014 09:20 PM
Last Updated : 30 Jan 2014 09:20 PM

நெல்லை: விளைநிலம் அழிப்பில் அரசுத் துறைகள் ஆர்வம்; தலையிடுமா பசுமைத் தீர்ப்பாயம்

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்ய வேண்டிய அரசுத் துறைகள், திருநெல்வேலி மாவட்ட விளைநிலங்களை அழிப்பதில் கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. பசுமைத் தீர்ப்பாயம், இதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சரியும் சாகுபடி

தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில், பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு உள்ளிட்ட 11 அணைக்கட்டுகள் உள்ளன.

மாவட்டத்தில் விவசாயம் செழித்து, உணவு உற்பத்தி பெருக வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள, இந்த அணைகளின் மொத்த கொள்ளளவு 13,765.5 மில்லியன் கனஅடி. தற்போது, அணைகளில் 5,874.5 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில், 4,250.2 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருந்தது. மாவட்டத்தில், 11 அணைக்கட்டுகள் இருந்தும், விவசாய நிலப்பரப்பு ஆண்டுக்கு, ஆண்டு குறைந்து வருவது குறித்து விவசாயப் பிரதிநிதிகள் வேதனை வெளியிடுகிறார்கள்.

`விளைநிலங்கள் இல்லாவிடில், அணைகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் வீணாகிவிடும். விவசாயம் கேள்விக்குறியாகும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அகதிகளாக அலைய நேரிடும்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

`விளைநிலங்கள் அழிவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று, மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயப் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றார்கள். அரசுத்துறைகள் பலவும் இணைந்து, விளைநிலங்கள் அழிவுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவுவதாக விவசாய பிரதிநிதிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

வருவாய்த்துறை

விளைநிலங்களை, விவசாயம் செய்யத் தகுதியற்ற தரிசு நிலம் என்று எவ்வித தொலைநோக்கு சிந்தனையும் இல்லாமல் சான்று வழங்குகிறது. முள்வேலியிட்டு, மண், கல், கட்டுமான இடிபாடுகளை விளைநிலங்களில் கொட்டி அழிப்பதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

வேளாண் துறை

வேளாண் தொழிலுக்கு உகந்த விளைநிலம் வீட்டுமனைகளாகும் போது, பாராமுகமாக இருக்கிறது. இதனால், செழுமையான நிலம் வீணடிக்கப்படுகிறது.

பொதுப்பணித்துறை

விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் நீராதாரம் பாதிக்கப்படும்போது, விவசாயிகள் பக்கம் கருணை காட்டுவதில்லை.

கனிம வளத்துறை

செம்மண் போன்ற கனிமங்களை கடத்திவந்து விளைநிலங்களில் கொட்டி கட்டுமானங்களை எழுப்புவதை தடுக்க முடியவில்லை. இதனால், பாசன நிலங்கள் தரிசாக மாற்றப்பட்டு வருகின்றன.

உள்ளூர் திட்டக்குழுமம்

விளைநிலங்களில் கட்டுமான ங்களுக்கு எவ்வித ஆய்வும் இல்லாமல் அனுமதி அளிக்கிறது. இதனால், விளைநிலங்கள் காணாமல் போய்விடுகின்றன.

உள்ளாட்சி நிர்வாகம்

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் கண்ணை மூடிக்கொண்டு கட்டுமானங்களுக்கு அனுமதி அளித்துவிடுகின்றன.

பத்திரப்பதிவுத்துறை

விளைநிலங்களை அழித்து, மனைப்பிரிவுகளாக பதிவு செய்வதை நடைமுறையாக கொண்டிருக்கிறது.

நில அளவைத்துறை

விளைநிலங்களுக்கு வரைபட நகல் தயாரித்து, மனைப்பிரி வாக்கி கொள்ள வழி சொல்லிக்கொடுக்கிறது.

மின்வாரியம்

விளைநிலங்களில் எழுப்பப் படும் கட்டுமானங்களுக்கும், நீராதாரங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கும், உடனடியாக மின் இணைப்பை வழங்கி விடுகிறது.

தடுக்க வேண்டுகோள்

பல்வேறு அரசுத்துறைகளும் விளைநிலங்கள் அழிவுக்கு காரணமாக இருப்பதை விவசாய பிரதிநிதிகள் பட்டியிலிடுகிறார்கள். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விளைநிலங்களை பாதுகாக்க முடியும் என்று மேலப்பாளையம் குறிச்சிப் பகுதியை சேர்ந்த விவசாய பிரதிநிதி ஆர். கணேசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

திருநெல்வேலியில், வண்ணார் பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் பாளையங் கால்வாயிலிருந்து விளைநிலங்களுக்கு செல்லும் மடைகளை அடைத்து, கட்டுமானங்களை எழுப்பி வருவது குறித்து, தொடர்ந்து பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டி வருகிறேன். ஆனால், அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசின் அனைத்து துறைகளும் அத்துமீறி விளைநிலங்களை அழிவுக்கு கொண்டு செல்வதை தடுக்க பசுமை தீர்ப்பாயம் தலையிட்டு முடிவு கட்ட வேண்டும்.

விளைநிலங்கள் அழிவை தடுக்க அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து, விவசாயப் பிரதிநிதிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x