Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM
ரத்தப் பரிசோதனை இல்லாமல், ரத்த அழுத்தம் பரிசோதிக்காமல் இரண்டு நிமிடங்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தொற்று அல்லாத நோய்களில் நீரிழிவு நோய் முதன்மை பெற்று வருகிறது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்கின்றன ஆய்வுகள்.
நீரிழிவு நோயைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யாமல், ரத்த அழுத்தம் பரிசோதிக்காமல் நீரிழிவு நோயைக் கண்டறிய பிரெஞ்சு நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஈஸி ஸ்கேன்’ எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கருவியில் உள்ள பலகையில் உள்ளங்கைகளையும், பாதங்களையும் வைக்கும் போது வியர்வை சுரக்கும். இந்த இரண்டு பாகங்களில் உள்ள வியர்வைச் சுரப்பிகளைச் சுற்றி நரம்புகள் உள்ளன. அந்த நரம்புகள் பாதிப்படையாமல் இருந்தால் வியர்வைச் சுரப்பியில் உள்ள ‘குளோரைடு அயனி’ எனும் வேதிப் பொருள் சம அளவில் இருக்கும். நரம்புகள் பாதிக்கப்பட்டால் அந்த அயனி குறைவாக இருக்கும். குளோரைடு அயனியின் எண்ணிக்கையை இந்தக் கருவியில் உள்ள மென்பொருள் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட நபருக்கு அடுத்த ஓராண்டுக்கு நீரிழிவு நோய் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதைச் சொல்லிவிடும்.
இதுகுறித்து மருத்துவமனையின் நீரிழிவு நோய்த் துறை பேராசிரியர் தர்மராஜன், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
பொதுவாக நீரிழிவு நோய்க்கு ரத்தப் பரிசோதனை செய்து கொள்பவர்கள், காலையில் சாப்பிடாமல் வரவேண்டும் என்று சொல்வார்கள்.
இந்தப் புதிய கருவியில் பரிசோதனை செய்ய விரும்புபவர்கள், காலையில் வெறும் வயிற்றோடு வர வேண்டும் என்பது போன்ற கட்டாயம் எதுவும் இல்லை. இந்தக் கருவியில் நான்கு பிரிவுகள் உள்ளன.
ஒருவரின் பரிசோதனை முடிவுகள் பூஜ்யம் முதல் 25 சதவீதத்துக்குள் இருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்பில்லை. அதுவே 25 முதல் 50 சதவீதத்துக்குள் இருந்தால் அவருக்கு நீரிழிவு ஏற்பட குறைந்தபட்ச வாய்ப்பு உண்டு.
50 முதல் 75 சதவீதம் என்றால் அவருக்கு இந்நோய் நிச்சயம் ஏற்படும். 75 சதவீதத்துக்கு மேல் இருந்தால் அவர் அபாய கட்டத்தில் இருக்கிறார் என்று பொருள். இந்த முடிவுகளுக்கு ஏற்ப தேவையான சிகிச்சைகளை நாங்கள் பரிந்துரைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கருவி நாட்டிலேயே முதன்முதலாக சென்னை அரசு மருத்துவமனையில்தான் பரிசோதனை முயற்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.
‘ஈஸி ஸ்கேன்’ நிறுவனத்தைச் சேர்ந்த சரவணன் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் சுமார் 500 இடங்களில் இந்தக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் 10 கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. சென்னையில் இதுவரை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும் நீரிழிவு நோய் அல்லாத சுமார் 1,500 பேரை இக்கருவி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். இதன் முடிவுகள் விரைவில் வரும். எதிர்பார்க்கும் அளவில் நேர்த்தியான முடிவுகள் வரும் பட்சத்தில், இக்கருவியை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயன்படுத்தி பலரை இந்நோயில் இருந்து காப்பாற்றலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT