Published : 07 Feb 2014 11:52 AM
Last Updated : 07 Feb 2014 11:52 AM
பருவமழை பொய்த்ததால் வறட்சியின் பிடியில் தமிழகம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 16 சதவீதமும், 2013-ம் ஆண்டு 31 சதவீதமும் குறைவாகப் பொழிந்துள்ளது. 2012-ம் ஆண்டு வறட்சியால் பாதித்த பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சினார்கள். இப்போது அந்தப் பகுதிகளில் புதிதாக 10 ஆழ்குழாய் கிணறுகள் போட்டால், 8-ல் தண்ணீர் வருவ தில்லை. ஒன்றிரண்டில் தண்ணீர் கிடைத்தாலும், அது எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரிய வில்லை என்கின்றனர் விவசாயிகள்.
அணைகளில் நீர்
தமிழ்நாட்டில் உள்ள 15 பெரிய அணைகளில் பெரியார் அணையில் மட்டும் 100 அடிக்கு மேல் (111 அடி) நீர் இருப்பு உள்ளது. மதுரைக்கு தண்ணீர் வழங்கும் வைகை அணையில் 35 அடி மட்டுமே தண்ணீர் இருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திருமூர்த்தி, பவானிசாகர் உள்பட 9 அணைகளில் 50 அடிக்கும் குறைவாக நீர்இருப்பு உள்ளது. மேட்டூர் அணையில் 51.57 அடியும், பாபநாசம் அணையில் 74.70 அடியும், மணிமுத்தாறு அணையில் 82 அடியும், சாத்தனூர் அணையில் 88 அடியும், ஆழியாறு அணையில் 78.30 அடியும் நீர்இருப்பு உள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது.
இருப்பினும், கன்னியாகுமரி மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கங்களின் கூட்டமைப்பு செய லாளர் செ.நல்லசாமி கூறியதாவது:-
நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தில் 19,500 குளம், குட்டை, கண்மாய், ஏரிகள் இருந்தன. நகர்ப்புற வளர்ச்சி காரணமாக 6500 குளம், ஏரிகள் காணாமல் போய்விட்டன. 18 குளங்களை விழுங்கித்தான் சென்னை மாநகரம் உருவாகியிருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. கொங்கு மண்டலத் தில் 1200 அடிக்கு ஆழ்குழாய் கிணறு போட்டால்தான் தண்ணீர் கிடைக்கிறது. பருவமழை பொய்த் ததால், தற்போது 10 ஆயிரத்துக் கும் மேற்பட்ட குளம், குட்டை,ஏரி, கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.
மாடுகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாததால் மாடுகளை விற்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 4.5 கோடி தென்னை மரங்களில், வறட்சி காரணமாக 40 லட்சம் மரங்கள் கருகி விட்டன. 2.10 கோடி மரங்களில் தேங்காய் காய்ப்பு நின்றுவிட்டது என்றார் அவர்.
நெல்லை மாவட்டம், ராய கிரியைச் சேர்ந்த விவசாயி டி. ராஜசேகர் கூறுகையில், 25 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. கிணறு தோண்டி னாலும் அதிகபட்சம் 1 மணி நேரம் தான் தண்ணீர் இருக்கிறது என்றார்.
குடிநீர் நிலை
குன்னூர் பெட்போர்டு பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் பி.கே.முத்துசாமி கூறுகையில், குன்னூர் நகராட்சியில் 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இப்போது (வியாழக்கிழமை) 12 நாட்கள் ஆகியும் குடிநீர் வரவில்லை. மலைப்பகுதியிலே இந்த நிலைமை என்றால், மற்ற மாவட்டங்களின் நிலைமையை சொல்லவே வேண்டாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT