Last Updated : 26 Feb, 2014 08:48 PM

 

Published : 26 Feb 2014 08:48 PM
Last Updated : 26 Feb 2014 08:48 PM

நெல்லை: பள்ளிக் குழந்தைகளை பலி வாங்கும் ஆட்டோக்கள்: போலீஸார் மட்டுமல்ல, பெற்றோரும் பொறுப்பாளிதான்

பள்ளிக் குழந்தைகளை ஆட்டோக்களில் திணித்து, அழைத்துச் செல்வதை, போலீஸார் மட்டுமின்றி, பெற்றோர் கூட கண்டுகொள்ளாததன் விளைவு, திருநெல்வேலியில் ஒரு மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்திருக்கிறார், 18 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

பேராசை டிரைவர்கள்

`ஆட்டோக்களில் பெரியவர்கள் என்றால் 3 பிளஸ் 1 என்றும், சிறியவர்கள் என்றால் 4 பிளஸ் 1 என்றும் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்’ என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை ஆட்டோக்களின் பின்புறமாக எழுதியும் வைத்திருக்கிறார்கள். ஆனால், பேராசை பிடித்த பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள், இந்த விதிமுறையை கடைபிடிப்பதில்லை.

இடம் கொள்ளும் வரை பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றிக்கொள்ளும் போக்குதான் காணப்படுகிறது. இதை போக்குவரத்து போலீஸாரோ, வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்களோ கண்டுகொள்வதில்லை.

20 குழந்தைகள்

இதுபோல், பள்ளிக் குழந்தைகளை புளிமூட்டையைப்போல் திணித்து, ஆட்டோ டிரைவர்கள் அழைத்து செல்வதையும் கூட போலீஸாரோ, போக்குவரத்து அலுவலர்களோ கண்டுகொள்ளவில்லை. ஒரே ஆட்டோவில் 20 குழந்தைகள் வரை திணித்து அழைத்துச் செல்கின்றனர்.

குழந்தைகளின் புத்தகப்பைகளும், சாப்பாட்டுக் கூடைகளும் ஆட்டோவின் வெளியே பெரிய மூட்டை போன்று தொங்க விடப்பட்டிருக்கும். இந்த ஆட்டோ, சாலையில் செல்லும்போது சிறிய தேர் நகர்ந்து செல்வதைப்போன்று காட்சியளிக்கும். இவ்வளவு குழந்தைகளை ஏற்றியிருப்பதால், ஆட்டோவை நிதானமாக ஓட்டவும் ஓட்டுநர்கள் முயல்வதில்லை. பள்ளி நேர அவசரம் கருதி அதிவேகமாக இத்தகைய ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

அவ்வாறு இயக்கியதால்தான் திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, ஜே.சி.பி. இயந்திரம் மீது, ஆட்டோ மோதி மாணவி சசிகலா (11) உயிரிழந்திருக்கிறார்.

கண்டுகொள்ளாத போக்கு

இவ்வாறு எங்காவது விபத்து நிகழ்ந்தால் அதிகாரிகளும், போலீஸாரும் சுறுசுறுப்புடன் செயல்படுவதும், பின்னர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்க செய்ய வேண்டும், விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழாவை கொண்டாடுவதில் காட்டும் அக்கறையை, சாலை பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் காட்டுவதில்லை. வெறும் சம்பிரதாயத்துக்கு சாலை பாதுகாப்பு வார விழாக்களை நடத்திவிட்டு செல்வதும், சாலை விதிமீறல்களால் உயிரிழப்புகள் நேருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் மாதத்தில் ஒருநாள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப்பு குழு கூட்டமும் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. விபத்துகளை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தெல்லாம் இந்த கூட்டத்தில் பேசப்படுகிறது. ஆனாலும் விதிமீறல்கள் தொடர்கின்றன.

பெற்றோரின் மெத்தனம்

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் வழக்குரைஞர் டி.ஏ.பிரபாகரிடம் பேசினோம்.

இத்தகைய விதிமீறல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்குமுன் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோகளை பிடித்து, அபராதம் விதிப்பு, பறிமுதல் நடவடிக்கைகளை எடுத்தபோது ஆட்டோ ஓட்டுநர்கள் ஸ்டிரைக், பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தல் போன்றவை நடந்தன. இது தொடர்பாக பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், குறைந்த கட்டணத்தில் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக ஆட்டோக்களில் சென்று திரும்புவதையே பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

ஆட்டோ ஓட்டுநர்களோ அதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்று அதிக வருமானம் ஈட்டுவதற்கு துணிகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பெற்றோர் களும், ஆட்டோ ஓட்டுநர்களும் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும்.

பஸ்களிலும்…

அரசுப் பேருந்துகளில் 54 பிளஸ் 2 என்றுதான் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், காலை மாலை வேளைகளில் அரசுப் பேருந்துகளில் 70 முதல் 100 பயணிகள் வரையில் அடைத்துக்கொண்டு செல்வதை காணமுடிகிறது.

சாதாரண, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பங்களில் இருந்து பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் பலருக்கும் ஆட்டோக்களில் மாதம் குறைந்த தொகைக்கு செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால், பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை ஆட்டோக்களில் அனுப்புகிறார்கள், என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x