Published : 27 Oct 2014 01:37 PM
Last Updated : 27 Oct 2014 01:37 PM
'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலியைத் தொடர்ந்து திண்டுக்கல் நாயுடு மகாஜன நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பேசியதாவது: சமுதாயத்தில் நிலவும் முக்கியப் பிரச்சினைகளை மக்கள் மன்றம் முன் நிறுத்தும் பணியை 'தி இந்து" தமிழ் நாளிதழ் செம்மையாக மேற்கொள்கிறது.
`தி இந்து' தமிழ் நாளிதழ் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது. இதற்கு காரணம், கடந்த ஓராண்டாக இந்த இதழில் ஒரு ஆபாசப் படம்கூட வெளிவந்ததில்லை. பொதுவாக, எல்லோருக்கும் அந்தரங்கம் உள்ளது. சினிமாக்காரர்களுக்கும் உள்ளது. ஆனால், தேவையின்றி அதில் மூக்கை நுழைக்காமல் கண்ணியமான சினிமா செய்திகளை `தி இந்து' தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. திறமையை மிகச் சரியாக அடையாளம் காட்டி, அதை கூர்மைப்படுத்துகிறது. இவ்விழாவில் துணைவேந்தர், ஆளும் கட்சியல்லாத எம்எல்ஏ, விவசாயி என இவர்களை மேடையேற்றியதில் இருந்தே, இந்த பத்திரிகை மக்களுக்கு யாரை அடையாளம் காட்டுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்பத்திரிகையின் நோக்கம் புனிதமானது.
இலக்கியம், சினிமா, ஆன்மிகம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இதழ்கள் இருந்தாலும், ஏராளமான துறைகளை உள்ளடக்கிய செய்திகளை தருகிறது `தி இந்து'.
முகநூலில் (பேஸ் புக்) அதிகம் பகிரப்படும் கட்டுரைகள், `தி இந்து' தமிழில் வெளிவந்த கட்டுரைகள்தான். தமிழகத்தில் குடிநோயாளிகள் அதிகமாகி வரும் சூழலில், அதன் தாக்கம் மக்களை எந்த அளவு பாதிக்கப் போகிறது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் தொடர் சமூகத்தின்மேல் இந்து நாளிதழுக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது. சமுதாயத்தின் முக்கியப் பிரச்சினைகளை தைரியமாக எடுத்து, மக்கள் மன்றம் முன் நிறுத்துகிறது `தி இந்து'. அதற்கான மாற்றுத் தீர்வையும் இப்பத்திரிகை முன்வைக்கிறது. இதுதான் என்னை மிகவும் கவர்ந்தது.
மீனவர் வாழ்க்கையை மையப்படுத்தி, நான் இயக்கிய படம் நீர்பறவை. ஆனால், மீனவர்களை கடலோடிகள் என்று குறிப்பிட்டது `தி இந்து'. இந்த வார்த்தை எனக்கு முன்பே தெரிந்திருந்தால், எனது படத்துக்கு அந்த பெயரையே வைத்திருப்பேன். நான் தேசிய விருது பெற்றதைவிட `தி இந்து' வாசகர்களாகிய உங்கள் முன் நிற்பதை பெருமையாக நினைக்கிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT