Last Updated : 07 Jan, 2014 08:21 PM

 

Published : 07 Jan 2014 08:21 PM
Last Updated : 07 Jan 2014 08:21 PM

ஈரோடு: பொங்கல் பண்டிகையால் வெல்லம் உற்பத்தி, விற்பனை களைகட்டுது

பட்டாசு இல்லாமல் கூட தீபாவளி கொண்டாடலாம். ஆனால், செங்கரும்பு, வெல்லம் இல்லாமல் தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாட முடியாது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், ஈரோடு மாவட்டத்தில் வெல்லம் காய்ச்சும் பணியும், விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

கரும்பு வியாபாரிகள் சுறுசுறுப்பு

ஈரோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் செங்கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, வியாபாரிகள் மொத்த கொள்முதல் செய்வதைத் தொடங்கியுள்ளனர். சராசரியாக ஒரு ஜோடி கரும்பு, 30 முதல் 50 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது. இவை சில்லறை சந்தையில் விற்பனைக்கு வரும்போது, ஒரு ஜோடி செங்கரும்பு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். செங்கரும்பைப் போலவே, பொங்கல் ஸ்பெசலாக கருதப்படும் வெல்லம் விற்பனையும் தற்போது சூடு பிடித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெல்லம்காய்ச்சும் ஆலைகள் 60க்கும் மேற்பட்டவை இயங்கி வந்தன. கரும்பின் விலை உயர்வு, வெல்லத்தின் விலை வீழ்ச்சி, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளின் எண்ணிக்கை தற்போது பத்தாக சுருங்கியுள்ளது.

வெல்லம் உற்பத்தி குறைவு

ஈரோட்டை அடுத்த முள்ளம்பரப்பு பகுதியைச் சேர்ந்த வெல்லம் தயாரிப்பு ஆலையின் உரிமையாளர் பரமசிவம் கூறியதாவது: கடந்த 18 ஆண்டுகளாக வெல்லம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கரும்பு பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இத்தொழிலில் இருந்து பலர் விலகி விட்டனர். நாங்கள் வாங்கும் கரும்பின் விலைக்கும், உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வெல்லத்தின் விலைக்கும் சம்பந்தமில்லாத நிலைதான் பல ஆண்டுகளாக தொடர்கிறது.

ஆண்டு முழுவதும் வெல்லம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாங்கள், கடந்த இரு மாதங்களாகத்தான் ஆலையை இயக்குகிறோம். பொங்கலுக்கு பிறகு வெல்லத்தின் தேவையைப் பொறுத்தும், விலையைப் பொறுத்தும்தான், தொடர்ந்து இயக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உற்பத்தி செலவு அதிகம்

வெல்ல உற்பத்தி ஆலையில் சராசரியாக, 10 முதல் 12 டன் கரும்பு வெல்லமாக மாற்றப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து 100 கிலோ வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஆலையில், நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக, கரும்பினை டன் ஒன்றுக்கு 2, 800 ரூபாய் விலை கொடுத்து வாங்கும் ஆலை நடத்துபவர்கள், அதற்கு வெட்டு கூலி, எடுத்து வரும் செலவு என டன்னுக்கு 4,100 ரூபாய் செலவு பிடிப்பதாக கூறுகின்றனர்.

வெல்லத்தின் பயன்பாடு குறைந்ததால் விலையும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு கிலோ வெல்லம் 42 ரூபாயி லிருந்து, 34 ரூபாயாக குறைந்து விட்டதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் என்ற இரு வகைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் உருண்டை வெல்லத்தின் தேவை அதிகமாக உள்ளதாக கூறும் உற்பத்தியாளர்கள், வெல்லத்தின் நிறத்தைப் பொறுத்து விலை வித்தியாசப்படுவதாக தெரிவி த்தனர்.

விற்பனை சூடுபிடிக்கிறது

ஈரோடு வெல்ல மண்டி வியாபாரிகளிடம் பேசியபோது, “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் வெல்லம் வாங்குவதற்காக வியாபாரிகள் இங்கு வருகின்றனர். பொங்கல் நெருங்குவதால், சந்தைக்கு வெல்லத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 30 கிலோ அளவு கொண்ட சிப்பத்தின் விலை, ரூ. 1200லிருந்து, 1,100 என குறைந்துள்ளது” என்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் செங்கரும்பு மற்றும் வெல்ல விற்பனை வேகம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆலை உரிமையாளர்களிடத்திலும், வியாபாரிகளிடத்திலும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x