Last Updated : 03 Feb, 2014 07:46 PM

 

Published : 03 Feb 2014 07:46 PM
Last Updated : 03 Feb 2014 07:46 PM

தூத்துக்குடி: 50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்; சிற்பக் கலைஞரின் தொடரும் சாதனைப் பயணம்

மருத்துவ குணம் கொண்ட வெள்ளை எருக்கன் வேரில், கடந்த 50 ஆண்டுகளாக, 55 ஆயிரம் விநாயகர் சிலைகள் வடித்திருக்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த சிற்பக்கலைஞர்.

சிற்பக் கலைஞர்

தூத்துக்குடி சின்னக்கோயில் அருகே முதியவர் ஒருவர், கையில் வெள்ளை நிறப் பொருளை வைத்து, சிறிய ரம்பத்தால் அதை செதுக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, வெள்ளை எருக்கன் வேரில் விநாயகர் சிலைகள் வடிப்பதாக கூறினார். விரல் அளவே உள்ள, எருக்கன் வேரில் விநாயகர் சிலையா...? என ஆச்சரியத்தோடு அவரிடம் வினவிய போது, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார். இனி அவரைப்பற்றி…

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.ராஜா என்ற சிரஞ்சீவி (64). இவரது பூர்வீகம், கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம். இவரது தந்தை தச்சுத் தொழிலாளி. 52 ஆண்டுகளுக்கு முன் தொழில் நிமித்தமாக குடும்பத்தோடு தூத்துக்குடியில் குடியேறினர்.

12 வயதில்

3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராஜா, 12 வயதில் சிற்பம் செதுக்கும் கலையை, தனது குரு கங்காதரனிடம் கற்றுக் கொண்டார். அப்போது தொடங்கிய அவரது கலைப் பயணம் இன்றுவரை தொடர்கிறது.

வெள்ளை எருக்கன் வேரில் விநாயகர் சிலை மட்டுமின்றி, அம்மன், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், அந்தோணியார், மாதா, குழந்தை இயேசு உள்ளிட்ட உருவங்களையும் உருவாக்கியுள்ளார். வெள்ளை எருக்கன் வேருடன் சிறிய அரம், தேய்ப்புத்தாள், ஆக்சா பிளேடு ஆகியவைதான் இவரது ஆயுதங்கள்.

தனது கலைப் பயணம் குறித்து, இனி ராஜாவே தொடருகிறார்...“ எனது சொந்த ஊரான அழகப்பபுரத்துக்கு அருகேதான் புகழ்பெற்ற மருந்துவாழ் மலை உள்ளது. சின்ன வயதில் அங்கு அடிக்கடி செல்வேன். அப்போதுதான் கங்காதரன் என்ற குருவிடம் சிலை வடிக்க கற்றுக் கொண்டேன்.

மருத்துவ குணமுடையது

`திருமுல்லை’ என்றழைக்கப்படும் வெள்ளை எருக்கு மருத்துவ குணம் கொண்டது. `வெள்ளெருக்கு வேர் இருந்தால் வினைகள் தீரும்’ என்பது அகஸ்தியர் வாக்கு. எனவே, வெள்ளை எருக்கன் வேரில் செய்த சிலைகள் வீட்டில் இருந்தால், தீய வினைகள் அணுகாது, கண் திருஷ்டி நீங்கும், தீய சக்திகள் அகலும் என்ற நம்பிக்கை இருப்பதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

வெள்ளை எருக்கன் வேரில், 1 அங்குலம் முதல் 9 அங்குலம் உயரம் வரையிலான சிலைகளை உருவாக்குகிறேன். இவற்றை, ரூ.100 முதல் ரூ. 500 வரை விற்பேன். நாள் ஒன்றுக்கு 4 சிலைகள் என்னால் செய்ய முடியும்.

ஊர் ஊராக செல்கிறேன்

தெருத்தெருவாக சென்று வீடுகளுக்கு முன் வைத்தே, சிலைகளை செய்து கொடுத்து விடுவேன். தூத்துக்குடி, கன்னியா குமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சென்று, எருக்கன் வேர் சிலைகளை விற்பனை செய்து வருகிறேன்.

இளம் வயதில் குஜராத், கோவா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கும் சென்று சிலைகள் விற்பனை செய்துள்ளேன். இந்த வருமானத்தில் தான், நானும் எனது மனைவி மாரியம்மாளும் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது.

எங்கே கிடைக்கும்?

வெள்ளை எருக்கன் வேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் மருந்துவாழ் மலை, பருந்துவாழ் மலை, திருச்சி காவிரிக் கரை, கொள்ளிடம், கொல்லி மலை போன்ற ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிகளில் கிடைக்கும். சிறு சிறு கட்டைகளாக வெட்டி, வெயிலில் உலர்த்தி அதில் உருவங்கள் வடிப்பேன்.

வெள்ளை எருக்கன் செடிகளு க்குள் பாம்புகள் இருக்கும். எனவே, வேர் எடுக்க செல்லும் முன் 48 நாட்கள் விரதம் இருப்பேன். ஒரு முறை வேர் எடுத்து வந்தால் நான்கு மாதங்கள் வரை ஓடும்.

55 ஆயிரம் சிலை

கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை, 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் சிலைகளை வடித்துக் கொண்டே இருப்பேன்.

தமிழக அரசு சார்பில், `சிற்பி’ என, எனக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த உதவித் தொகையும் இதுவரை கிடைக்கவில்லை. முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தேன். அதுவும் கிடைக்கவில்லை. நலிந்த கலைஞருக்கான உதவி மற்றும் முதியோர் ஓய்வூதியம் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x