Published : 16 Jan 2014 08:36 PM
Last Updated : 16 Jan 2014 08:36 PM
விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கும் சாலை பாதுகாப்பு வாரம் இவ்வாண்டும் கடந்து சென்றுவிட்டது. ஆனால், வழக்கம்போல் வாகனங்கள் சிட்டாய் பறக்க, போக்குவரத்து விதிகள் காற்றில் பறந்தன. பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரம், `சாலை பாதுகாப்பு வாரமா’க அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சாலை விபத்துகளை தவிர்க்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.40 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது என்று சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். `விபத்தினால் வருவது துன்பம், பாதுகாப்பினால் வருவது இன்பம்’ என்ற கருத்தை மையப்படுத்தி, இவ்வாண்டுக்கான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் எமன், சித்ரகுப்தன் வேடமிட்டு விழிப்புணர்வு நாடகமும், பேரணிகள், வாகன பேரணிகள், வாகன முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது என்றெல்லாம் பல்வேறு நிகழ்வுகளும் நடந்தேறின.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து போலீஸார் உள்ளிட்டோர் விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், பாதசாரிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை விநியோகித்தனர். கல்வி நிலையங்களில் மாணவர், மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் சொல்லப்பட்ட கருத்துகள் மக்களை சென்றடைந்தனவா? அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா? என்பது சந்தேகம்தான். விழிப்புணர்வு உருவாக்கப்பட்டிருந்தால் விதிமீறல்கள் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
புதன்கிழமை காணும் பொங்கல் தினத்தன்று இருசக்கர வாகனங்களில், அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்ததை புதன்கிழமை காணமுடிந்தது. ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் புளிமூட்டையை திணிப்பதுபோல் பயணிகளை அடைத்துச் சென்றனர். இதையெல்லாம் போக்குவரத்து போலீஸார் கண்டுகொள்ளவில்லையே.
கண்டு கொள்ளாதது ஏன்?
சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவது நல்லதுதான். ஆனால் விபத்துகளுக்கு காரணமான குண்டும் குழியுமான சாலைகள், சிறுபாலங்கள், வேகத்தடைகள் குறித்து யாராவது கண்டுகொண்டார்களா? என்று பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. அடிக்கடி விபத்துகள் நிகழும் இடங்களை கண்டறிந்து, அங்கு சாலைகள், பாலங்கள், சிறுபாலங்கள் ஆகியவற்றை அகலப்படுத்துதல், வேகத்தடைகள் ஏற்படுத்துதல், போதுமான மின்விளக்கு வசதிகளை அமைத்தல், சாலை சந்திப்புகளில் அடையாள குறியீடுகளை காட்டும் பலகைகளை ஏற்படுத்துதல், சாலை வளைவுகளை நேர்செய்தல் என பல்வேறு தீர்வு காணும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக அரசுத்துறை அதிகாரிகளும் அறிக்கை விட்டுவிட்டு சும்மா இருந்துவிடுகிறார்கள்.
சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்று சொல்கிறோம். காரணம், பாதுகாப்பு இல்லாத சாலையில் , பாதுகாப்பு இல்லாத பயணங்களால் பாதுகாப்பு இல்லாத மனிதர்களுக்கு கிடைக்கும் அதிக பட்ச தண்டனை மரணமாக உள்ளது. வாகனம் ஓட்டிய சிறுவன் அல்லது சிறுமி, வாகன உரிமையாளர் மற்றும் வாகனம் மீது இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 3, 4, 5 பிரிவுகளின்படி வழக்கு பதிய வேண்டும். ஆனால், பெற்றோருக்கு தெரிந்து அல்லது தெரியாமல் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஒட்டுகின்றனர். இதை தடுக்க முடியாமல் அரசுத்துறைகள் இருக்கின்றன.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும். போக்குவரத்து விதிகளை சரியா்க கடைபிடிக்கும் அப்பாவி மனிதர், விதிகளை மீறும் நண்பரால் விபத்தில் இறக்கிறார். விழிப்புணர்வு இல்லை என்று நாமே நம்மை ஏமாற்றி கொள்வதுதான் தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT