Last Updated : 02 Feb, 2017 10:55 AM

 

Published : 02 Feb 2017 10:55 AM
Last Updated : 02 Feb 2017 10:55 AM

என்றும் காந்தி!- 3: அகிம்சைதான் மீட்சிக்கான ஒரே வழி

காந்தியைப் பொறுத்தவரை சத்தியமும் அகிம்சையும் பிரிக்க முடியாதவையாக இருந்தன. அகிம்சையைத் தன் உயிருக்கும் மேலாகக் கருதினார் காந்தி. அவர் எவ்வளவுக்கு எவ்வளவு மென்மையானவரோ அவ்வளவுக்கு அவ்வளவு மனஉறுதி மிக்கவர். அரிதான சமயங்களிலேயே அவர் மக்கள் முன் கண்கலங்கியிருக்கிறார். 1924, ஜூன் மாதம் நடந்த அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டின் தன் சகாக்கள் பலருக்கு அகிம்சையின் மீது ஈடுபாடு இல்லாததைக் கண்டு எல்லோர் முன்பும் அழுதார்.

எனினும், உப்பு சத்தியாகிரகத்தில் வரிசையாய்க் காவலரிடம் அடிவாங்கி வீழ்ந்த காந்தியின் தொண்டர்கள் திருப்பி ஒரு அடி கூட கொடுக்காமல், அடிகளுக்கு அஞ்சாமல் அகிம்சையின் ஆழத்தையும் வலிமையையும் காட்டி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள். காந்தியின் தொண்டர்களுக்கு ஆங்கிலேயர் கொடுத்த அடிகளெல்லாம் உண்மையில் ஆங்கிலேய அரசின் மேல் விழுந்த பேரிடிகளே. அகிம்சையை அவ்வளவு கட்டுப்பாட்டுடன் கடைப்பிடித்தார்கள் அப்போது காந்தியின் தொண்டர்கள்.

காந்தி அகிம்சையை சமூகத்தில் உள்ள கீழ்த்தட்டு மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குமே போதித்தார், ஆதிக்க வர்க்கத்துக்கு அல்ல என்றொரு உண்மையற்ற குற்றச்சாட்டு அவரது காலத்திலிருந்தே அவர் மீது வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதை மறுக்கும் பேராசிரியர் அ. மார்க்ஸ் இவ்வாறு பதிலளிக்கிறார்: “இது மிகவும் தவறான குற்றச்சாட்டு. யாரெல்லாம் கொடுமைகளுக்குக் காரணமோ அவர்களின் மனசாட்சியை நோக்கித்தானே காந்தி தொடர்ந்து பேசினார்! அப்படிப் பேசி ஆதிக்க மனப்பான்மையிலிருந்து கீழிறங்க வைத்து, அவர்களின் தவறுகளை அவர்களுக்கே உணர்த்தினார். ஆலயப் பிரவேசத்தை முன்னெடுத்தல், மலம் அள்ளுதல் போன்றவற்றை ஆதிக்க சாதியினருக்குத்தான் காந்தி வலியுறுத்தினார்.”

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். காந்தியைக் கடுமையாக எதிர்த்துவந்த அம்பேத்கரே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வன்முறையைத் தேர்ந்தெடுக்கவில்லை; அதைத் தன் மக்களுக்கு போதிக்கவுமில்லை. அவர் காந்தியைப் பின்பற்றாமல் இருந்தாலும் மகான் புத்தரைப் பின்பற்றியவரல்லவா! அதேபோல் காந்தியை எதிர்த்துவந்த மற்றொரு ஆளுமையான பெரியாரும் தனது போராட்டங்களை வன்முறை வழியில் நடத்தவுமில்லை; தனது தொண்டர்களுக்கு வன்முறையை போதிக்கவுமில்லை.

ராஜாஜி தலைமையிலான அப்போதைய தமிழக அரசு இந்தித் திணிப்பை முன்னெடுத்தது. அதற்கெதிரான போராட்டத்துக்காகத் தனது தொண்டர்களை ஆயத்தப்படுத்துவதற்காக ஒரு அறிக்கையைப் பெரியார் வெளியிட்டார். அதில் தனது தொண்டர்களுக்குப் பதினான்கு நிபந்தனைகளை விதித்தார். அவற்றுள் முக்கியமானவை சில இங்கே:

1. போலீஸ்காரரிடம் நமக்குச் சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக் கூடாது.

2. போலீஸ்காரர் முன்வந்ததும் அவரைப் பார்த்து புன்சிரிப்பு காட்டவேண்டும்.

3. கூப்பிட்டால், கைதுசெய்வதாய்ச் சொன்னால், உடனே கீழ்ப்படிய வேண்டும்.

4. போலீஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்துடன் அடிவாங்க வேண்டும். நன்றாய் அடிப்பதற்கு வசதிகொடுக்க வேண்டும்.

5. போலீஸ்காரர் பக்கத்தில் வந்தவுடன் நீங்கள் மெய்மறந்து பக்தியில் இருப்பதுபோல் ஒரு மகத்தான காரியத்தை நாம் சாதிப்பதற்காக இந்த அற்ப அதாவது நமது சரீரத்திற்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலிகொடுக்கக் கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு (பாக்கியம்) நமக்குக் கிடைக்கிறது என்று வரவேற்கும் தன்மையில் இருக்க வேண்டும்.

6. போலீஸ்காரர் அடிக்கும்போது தடுக்கும் உணர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.

7. போலீசார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஓடலாம் ஆனால் தொண்டர்கள் மார்பைக் காட்டியே ஆக வேண்டும்.

என்னதான் காந்தியைப் பெரியார் தொடர்ந்து மறுத்துவந்தாலும், உப்பு சத்தியாகிரகம் போன்றவற்றில் தொண்டர்களை அடிவாங்கவிட்டு காந்தி சிறைக்குச் சென்றுவிட்டார் என்றரீதியில் விமர்சித்திருந்தாலும் போராட்டம் என்று வரும்போது வன்முறையற்ற வழிமுறை என்பது எவ்வளவு பயனுள்ளது என்றும் வன்முறை எவ்வளவு ஆபத்தானது என்றும் பெரியார் நன்கு உணர்ந்திருந்தார்.

வன்முறையெனும் வண்ணத்துப்பூச்சி விளைவு

‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று ஆரம்பித்தால் உலகத்திலுள்ள மனிதர்கள் அனைவருமே கண்பார்வையற்றவர்களாகிவிடுவார்கள்’ என்று சொல்லப்பட்டது ஏதோ வார்த்தை விளையாட்டுக்காக அல்ல. வன்முறை என்பது வண்ணத்துப்பூச்சி விளைவு போன்றது. சிறு பொறி போல ஒரு இடத்தில் தொடங்குவது முதலில் பற்றிய பொருளையும் அதற்குப் பிறகு சுற்றி இருப்பவற்றையும் அழித்துக்கொண்டே விரிகிறது. அதை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தாவிட்டால் அதன் தீய விளைவுகளை உலகம் முழுவதுமே அனுபவிக்க நேரிடும். உலகப் போர்களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். தொடங்கிய இடம் என்பது ஒரு தனிமனிதரின் ஈகோ, சிறு கோபம், மனஸ்தாபம், அக்கறையின்மை, சுயநலம், உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை இப்படி ஏதாவதொரு சிறு காரணங்களிலிருந்துதான் போர்கள் உள்ளிட்ட மனிதர் விளைவிக்கும் பேரழிவுகள் தொடங்குகின்றன. அது தொடங்கும் சிறு புள்ளியைத் தாக்கியழிக்கும் வழிமுறைதான் அகிம்சை. வன்முறை என்பது ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு இழைக்கும் தீங்கு என்பது அடுத்த பட்சம். வன்முறையை மேற்கொள்ளும் மனிதர் தனக்கே உடல் ரீதியிலும் ஆன்மரீதியிலும் தீங்கிழைத்துக்கொள்கிறார். வன்முறை என்பது அடிப்படையில் தன் ஆன்மாவை அழித்துக்கொள்ளும் செயல். தன் ஆன்மாவை அழித்த பிறகான ஒருவருடைய வாழ்நாள், முழுவதும் பெரும் துயரத்திலும் அமைதியின்மையிலும் பதற்றத்திலுமே கழியும். ஒருவர் நல்ல நோக்கத்துக்காக வன்முறையைக் கையில் எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால், அவர் கையில் எடுத்த வன்முறை அந்த நல்ல நோக்கத்தின் தார்மிக அடிப்படையைச் சிதைத்துவிடுகிறது. உலகின் மற்ற போராட்டங்களுக்கெல்லாம் இல்லாத தார்மிக வலிமை இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு இருந்ததற்கு முக்கியமான காரணம் காந்தியும் அவர் போதித்த அகிம்சையுமே.

ஜார்ஜ் ஆர்வெலின் கேள்விகள்

காந்தியின் அகிம்சை குறித்துப் பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் காந்தியின் அகிம்சை வழிமுறையை ஆதரித்தாலும் ஒருசில முரண்கள் பற்றி இப்படி விவாதிக்கிறார்: “காந்தியின் சமாதானப் போக்கு என்பது ஆன்மிக ரீதியிலானது எனினும் தேவையான அரசியல் விளைவை அதைக் கொண்டு ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்பினார். போர் எதிர்ப்பை மேற்கத்தியப் போர் எதிர்ப்பாளர்கள் பார்த்த விதமும் காந்தி பார்த்த விதமும் வேறுவேறு… சர்வாதிகாரத்தை காந்தி சரியாகப் புரிந்துகொள்ள வில்லையோ என்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது போராட்டத்தின் கண்ணோட்டத்திலேயே அனைத்தையும் பார்த்தாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. மக்கள் கூட்டத்தைத் திரட்டும் மாபெரும் சக்தி அவரிடம் இருக்கிறது என்பதாலேயே ஆங்கிலேய அரசு அவரை அச்சத்துடன் அணுகியது. உலகைத் தன் குரலால் தட்டி எழுப்பிவிட முடியும் என்று அவர் நம்பினார். உங்கள் குரலை உலகம் கேட்பதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அரசாங்கத்தின் எதிரிகள் பாதி இரவில் திடீரென்று காணாமல் போவதும் அதற்குப் பிறகு, அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் போவதுமான சூழலைக் கொண்ட ஒரு நாட்டில் (ஹிட்லரின் ஜெர்மனி, ஸ்டாலின் ரஷ்யா), காந்தியின் வழிமுறைகள் எப்படிப் பின்பற்றப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்க்கச் சற்றுக் கடினமாக இருக்கிறது.”

மேலும் ஆர்வெல் சொல்கிறார்: “எல்லா மனிதர்களும் ஏறக்குறைய அணுகக் கூடியவர்களே. பெருந்தன்மையான எந்தச் செய்கையும் அவர்களிடத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தனிநபர்களைக் கையாள்வது குறித்து காந்தி கொண்டிருந்த எண்ணம். இதுவும் கேள்விக்குரியது. பைத்தியக்காரர்களைக் கையாளும்போது மேற்கண்ட கருத்து உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புத்திபேதலிக்காதவர் யார்? ஹிட்லர் புத்திபேதலிக்காதவரா? ஒரு கலாச்சாரத்தின் பார்வையில் மற்றொரு கலாச்சாரம் முழுக்க பைத்தியமாக இருக்கச் சாத்தியம் இல்லையா?’’

இப்படியெல்லாம் கேள்விகள் எழுப்பினாலும் ஜார்ஜ் ஆர்வெலின் இறுதி ஓட்டு அகிம்சைக்குத்தான்: “யாரோ ஒருவர் பொத்தானை அமுக்கியதும் ஏவுகணைகள் சீறிப்பாய்வது நிகழ்வதற்கு சில ஆண்டுகளே நமக்கு எஞ்சியுள்ள நிலையில், இந்தக் கேள்விகளெல்லாம் தீவிரமாகவும் உடனடி யாகவும் விவாதிக்க வேண்டியவை. இன்னோர் உலகப் போரை உலகம் தாங்குமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம், அகிம்சை வழியில்தான் மீட்சி இருக்கிறது என்பது மட்டுமே நம்மால் நினைத்துப் பார்க்கக் கூடிய சாத்தியம்.’’

(நாளை)

ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x