Published : 21 Dec 2013 12:00 AM
Last Updated : 21 Dec 2013 12:00 AM

சென்னை: குப்பைத் தொட்டியாகும் பக்கிங்ஹாம் கால்வாய்

கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகில் உள்ள கனால் பாங்க் சாலையில் குப்பைத் தொட்டிகள் இல்லாததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பக்கிங்ஹாம் கால்வாயில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். கால்வாயிலும், ரயில் நிலையம் அருகிலும் சேரும் குப்பையை அகற்றவும், அப்பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகில் உள்ள கனால் பாங்க் சாலையில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு மிக அருகில் இருக்கின்றனர். கால்வாயில் தேங்கிக் கிடக்கும் குப்பையால் அப்பகுதி வாசிகளுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் குப்பு கூறுகையில், “யாராவது உயர் அதிகாரி வந்தால் மட்டும் இந்த கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றுவார்கள். இல்லையென்றால் இது இப்படியேதான் கிடக்கும். குழந்தைகள் தெருக்களில் விளையாடுவதால் அவர்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகிறது” என்றார்.

இங்கு குப்பைகளை அகற்ற ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் குப்பை வண்டி வருகிறது. எனினும் குப்பைகள் அதிகமாக இருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். பாட்ரிஷியன் கல்லூரி அமைந்திருக்கும் பக்கத்து தெருவில் குப்பைத் தொட்டிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சரோஜினி கூறுகையில், “இங்கு சின்னதாக ஒரு குப்பைத் தொட்டியை இதற்கு முன்பு வைத்திருந்தார்கள். ஆனால் அது சில மணி நேரங்களிலேயே வழிந்துவிடும். இப்போது அது கூட இல்லை” என்றார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, ‘ரயில் நிலைய வளாகத்தில் இருக்கும் குப்பைகளை ரயில்வே துறைதான் அகற்ற வேண்டும். ஆனால் அதையும் நாங்கள் சில நேரங்களில் சுத்தம் செய்து வருகிறோம். கால்வாயில் உள்ள குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுப்போம். அந்தப் பகுதியில் குப்பைத் தொட்டி வைப்பது குறித்து பேசுகிறேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x