Published : 21 Nov 2013 12:00 AM
Last Updated : 21 Nov 2013 12:00 AM

அனைவருக்கும் ஐந்து ஏக்கர் நிலம்

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மறு அவதாரம் எடுக்கிறது நிலச்சீர்திருத்தக் கொள்கை!

சிறு விவசாயிகளிடம் நிலங்கள் இருந்தால் வரிவசூல் செய்வது சிரமம் என்பதால் இந்தியாவில் ஜமீன்தார்களிடம் நிலங்களை முடக்கி வைத்திருந்தது ஆங்கிலேய அரசாங்கம். சுதந்திரத்துக்குப் பிறகு, மண்ணைத் தொப்புள்கொடி உறவாகப் பார்க்கும் விவசாயிகளின் கையில் நிலங்கள் இருக்க வேண்டும் என்று நேரு, காந்தி, வினோபா பாவே உள்ளிட்டோர் உந்துதல் கொடுத்தார்கள்.

ஆனாலும், 1950-களில் பேசப்பட்ட நிலச்சீர்திருத்தக் கொள்கை 1961ல்தான் நில உச்சவரம்புச் சட்டமாகியது. ஆனால் அதற்குள், பண்ணையார்களும் ஜமீன்தார்களும் நிலங்களை பினாமிகள் பெயர்களில் பதுக்கிக்கொண்டார்கள். இடதுசாரிகள் ஆதிக்கம் உள்ள மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் மட்டுமே இந்தச் சட்டம் ஓரளவுக்குச் சாத்தியமானது. மற்ற மாநிலங்களில் முழுதாகத் தோற்றுப் போனது.

தொலைந்துபோன கிராமங்கள்

இந்தியாவில் 30% பேருக்கு நிலம் ஒரு சொத்து. ஆனால், 70 சதவீதத்தினருக்கு நிலம் என்பது வாழ்வாதாரம், உணவுக் களஞ்சியம். உழைப்பவர்கள் கையில் நிலம் என்ற நியதியை மீறி இந்தியாவில், உழைப்பைச் சுரண்டுபவர்களின் கையில்தான் நிலங்கள் இருக்கின்றன. சுதந்திர இந்தியாவில் ஏழரை லட்சம் கிராமங்கள் இருந்தன. உலகமயமாக்கல் கொள்கையைத் தூக்கிப் பிடித்ததால், கடந்த 20 ஆண்டுகளில் 90 ஆயிரம் கிராமங்கள் முற்றாக அழிந்துவிட்டன. இவற்றிலிருந்த விளைநிலங்களும் நீர் ஆதாரங்களும் காணாமல் போய்விட்டன.

‘ஜன சத்யாகிரஹா’

நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, ஒரு குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டர்டு (சுமார் ஒன்றரை ஏக்கர் ஒரு ஸ்டாண்டர்டு) இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இது பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபட்டது. 1972-ல் இதை 15 ஸ்டாண்டர்டு ஆக்கினார்கள். இதனால் பினாமிகள் பெருகியதால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பினாமி ஒழிப்புச் சட்டம் பிரகடனமானது. பினாமி பெயருக்குச் சொத்துக்களை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று சொன்னார்கள். ஆனால், யாரையும் தண்டித்ததாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் நிலச் சீர்த்திருத்தக் கொள்கையில் மாற்றம் கோரி இடது சாரிகள், தலித் மக்களுக்கான நில உரிமை அமைப்புகள், ஏக்தா பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராடிவருகின்றன. 2000க்கும் மேற்பட்ட அமைப்புகள் கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று போபாலிலிருந்து டெல்லிக்கு ‘ஜன சத்யாகிரஹா’ நடைப்பயணத்தைத் தொடங்கின. சுமார் ஒரு லட்சம் பேர் இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டதால் மத்திய அரசு நடுங்கிப்போனது.

பதினோராவது நாள், ஆக்ராவில் அவர்களைச் சந்தித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அவர்களுடைய கோரிக்கைகளில் பத்தை மட்டும் நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கைப்பட எழுதிக்கொடுத்தார். அதற்கான வேலைகள் இப்போது நடக்க ஆரம்பித்திருக்கின்றன. அநேகமாக, டிசம்பருக்குள் நிலச் சீர்த்திருத்தக் கொள்கையின் புதிய வடிவம் பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகலாம்.

அனைவருக்கும் ஐந்து ஏக்கர் நிலம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஏக்தா பரிஷத் அமைப்பின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தனராஜ், “கிராமங்களில் வாழும் மக்களுக்குப் பத்து சென்ட் நிலத்துடன் வீடு, பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுத்தல், பழங்குடியினருக்குக் காட்டு நிலங்களைப் பகிர்ந்தளித்தல், நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்றுதல், எய்ட்ஸ் நோயாளிகள், திருநங்கைகளுக்கு நிலம் வழங்குதல் என்று எங்களின் பத்துக் கோரிக்கைகளுக்கு அமைச்சர் ஒப்புதல் அளித்தார். அதன்படி சில மாநிலங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைத்திருக்கிறார்கள். புதிய நில உச்சரவம்புக் கொள்கையை வரையறுக்க 10 சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய 18 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. குழு ஜூலை 24-ல் சமர்ப்பித்த அறிக்கை கேபினட் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. அறிக்கையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தினால், உழைக்கும் மக்களுக்கு, குறைந்தது ஐந்து ஏக்கர் நிலம் சொந்தமாகும்.

மத நிறுவனங்களுக்கும் கிடுக்கிப்பிடி

“நஞ்சையாக இருந்தால் 5 முதல் பத்து ஏக்கரும் தரிசாக இருந்தால் 10 முதல் 15 ஏக்கரும் மட்டுமே ஒரு குடும்பம் வைத்திருக்க முடியும். மதநிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், தொழிற்சாலைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் இவை அனைத்தும் நில உச்சவரம்புச் சட்டத்திற்குள் வந்து விடும். நிலமற்ற ஏழைகளுக்காகக் கொடுக்கப்பட்ட நிலங்களை அபகரித்து வைத்திருப்பவர்களிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

பினாமி நிலங்களும் தப்ப முடியாது

“கிராம, பஞ்சாயத்து, நகர, மாவட்ட அளவில் ‘லேண்ட் ப்பூல்’ என்று சொல்லப்படும் நிலத் தொகுப்பு இருக்க வேண்டும். விவசாயத்துக்குப் பயன்படாத நிலங்கள், சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள், குத்தகை செலுத்தாத நிலங்கள், பினாமி நிலங்கள் ஆகியவற்றைக் கையகப்படுத்தி நிலத்தொகுப்பில் சேர்க்க வேண்டும். இதிலிருந்து, நிலமற்றவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும். கிராம அளவில் கமிட்டிகள் அமைத்து இன்னாருக்கு இவ்வளவு நிலம் சொந்தம் என்று உறுதிப்படுத்த வேண்டும். அறிவியல்பூர்வமாக நில அளவை செய்து இன்னாருக்கு இவ்வளவு நிலம் என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

“இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதமாக இருக்கும் நாடோடி மக்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் கொடுத்து அவர்களை ஓரிடத்தில் குடியமர்த்த வேண்டும். பழங்குடி, தலித் மக்களின் நிலங்களை மிரட்டி வாங்குபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் தேவைகளுக்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீடாக நிலங்களையே வழங்க வேண்டும். இப்படி, முக்கியமான 19 அம்சங்கள் அந்த அறிக்கையில் இருக்கின்றன’’ என்கிறார் தனராஜ்.

வீடற்றவர்கள்

“உழைக்கும் மக்களுக்கு நிலம் உயிருக்குச் சமம். இப்போது நிலங்கள் உழைக்கும் மக்களை விட்டு அந்நியப்பட்டுக் கிடக்கின்றன. அதனால்தான் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. தேசியப் பொருளாதார வளர்ச்சியில் 20% ஆக இருந்த விவசாயத்தின் பங்கு இப்போதோ வெறும் 3%. இந்தியக் கிராமப்புற வறுமைக்கும் நிலப்பங்கீட்டுக்கும் நேரடித் தொடர்பு உண்டு.

“1992 நிலவரப்படி இந்தியக் கிராமங்க ளில் 80 லட்சம் குடும்பங்களுக்கு வீடு இல்லை. குடியிருக்க வீடு என்பது மக்களின் அடிப்படை உரிமை அதைக் கொடுக்க முடியாத அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாரிவழங்குகிறது. இது கடைசித் தருணம். இப்போதாவது, நிலமற்றவர்களுக்கு நிலம் கிடைக்க வேண்டும்” என்று முடித்தார்.

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் நம்முடைய அரசியல்வாதிகள் அமலாக்க விடுவார்களா?

தொடர்புக்கு: shanmugasundaram.kl@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x