Published : 07 Oct 2013 05:41 PM
Last Updated : 07 Oct 2013 05:41 PM
சுகுணாவும் முரளியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஒரே அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். இருவரும் நாற்பதுகளில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஐந்து வருட அலுவலகப் பழக்கம் அவர்களை சக ஊழியர் என்ற நிலையில் இருந்து, நண்பர்களாக மாற்றியிருந்தது. அலுவலகத்துக்குள் நுழைந்ததுமே சுகுணாவின் கண்கள் முரளியைத்தான் தேடும். முரளி வேறு பிரிவில் வேலை செய்தாலும், அவர் இருக்கும் இடத்துக்கே சென்று காலை வணக்கம் சொல்வார் சுகுணா. அந்தப் புன்னகைக்காகத்தான் அதுவரை காத்திருந்த மாதிரி, முரளியின் முகமும் பளிச்சிடும். அவரவர் வேலைகளில் மூழ்கிப்போனவர்களை உணவு இடைவேளைதான் உயிர்ப்பிக்கும்.
முரளிக்குப் பிடித்த ஏதோவொரு உணவு சுகுணாவின் டிபன் பாக்ஸில் இடம் பிடித்திருக்கும். சுகுணாவுக்குப் பிடிக்காத உணவு வகையை, இதுவரை அலுவலகத்துக்குக் கொண்டுவந்ததே இல்லை முரளி. இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பேச மாட்டார்கள், நிறைய பேச்சுக்கு இடையே கொஞ்சம் உணவும் உள்ளே போகும். தினமும் சலிப்பில்லாமல் அப்படி என்னதான் பேசுவார்களோ என்று அவர்களது நண்பர்கள் நினைக்கும் அளவுக்குப் பேசித் தீர்ப்பார்கள். ஆண், பெண் நட்பில் இருக்கும் அத்தனை சுவாரசியங்களும் அவர்களின் பேச்சில் இருக்கும். பிரியத்துடன் பேசிவிட்டு, மனம் இல்லாமல் பிரிவார்கள்.
பிரேக்கிலும் இருவரும் சேர்ந்தேதான் டீ குடிப்பார்கள். இவர்களது இந்த விகல்பமில்லாத நட்பை மாலைக்கண் கொண்டு யாரும் பார்த்ததும் இல்லை, விமர்சித்ததும் இல்லை. அவர்களை அவர்கள் இயல்புடனேயே ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் நட்பு இருவர் வீட்டினருக்கும் பரிச்சயம். ஆனால் யாருமே எதிர்பார்க்காத ஒருநாளில் அவர்களின் நட்பில் விரிசல் விழுந்தது.
வேலையில் கவனக் குறைவால் தவறுசெய்துவிட்டதாக சுகுணாவை அழைத்துத் திட்டினார் மேலதிகாரி. இதுபோன்ற திட்டுகள் வேலையிடத்தில் சகஜம்தான் என்றாலும், அன்றைய திட்டு எல்லை மீறியதாக இருந்தது. மேலதிகாரியின் அறையில் இருந்து கலங்கிய கண்களோடும் வாடிய முகத்துடனும் வெளியே வந்த சுகுணாவைப் பார்த்தபோது முரளிக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை. தன் இருக்கையை விட்டு கோபத்தோடு எழுந்தவர், மேலதிகாரியின் கன்னத்தில் அறைந்துவிட்டார். இப்படியொரு விளைவை சுகுணாவே எதிர்பார்க்கவில்லை என்பதை அதிர்ந்த, அவரது முகமே காட்டிக் கொடுத்துவிட்டது.
அதன் பிறகு வழக்கமான அலுவலக விசாரணைகளுக்குப் பிறகு வேறு கிளைக்கு மாற்றப்பட்டார் முரளி. அங்கிருக்கப் பிடிக்காமல் சுகுணாவும் மாற்றல் வாங்கிக்கொண்டார். ஆனால் சுகுணாவைப் பார்க்காமலும் பேசாமலும் முரளியால் இருக்க முடியவில்லை. சுகுணாவுக்காகத் தன் வீட்டைக்கூடத் துறக்கத் தயாராக இருந்தார். அப்படியொரு மனநிலையில்தான் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.
இது முரளி என்கிற தனிப்பட்ட மனிதனின் பிரச்சினை மட்டுமல்ல. சமூகத்தில் பல இடங்களிலும் இதுபோன்ற உறவுச் சிக்கல்கள் அதிகரித்துவருகின்றன. இதை சாதாரண நிகழ்வாக ஒதுக்கிவிடாமல், இதற்குப் பின்னால் இருக்கிற உளவியலை ஆராய்ந்தால்தான், பிரிவுகளின் சதவிகிதம் குறையும்.
திருமணம் தாண்டிய இதுபோன்ற உறவுச் சிக்கல்களுக்குக் காரணம், மூன்று முக்கிய விஷயங்களில் அசட்டையாக இருப்பதுதான். இன்று பெரும்பாலான வீடுகளில் கணவனும் மனைவியும் மனம் விட்டுப் பேசிக்கொள்வதில்லை. அப்படியே பேசினாலும் குடும்பம், வரவு-செலவு, குழந்தைகள் இதைச் சுற்றியேதான் இருக்கும். இவை தவிர அவர்களுக்கேயான பேச்சு என்பது மிகவும் குறைவு. மனம்விட்டுப் பேசுவது குறைகிறபோது, புரிந்துகொள்ளுதலும் குறைகிறது. சின்னச் சின்ன ஊடல்களும் பெரிய பிரிவுக்கு அடித்தளமாகிவிடும். இருவர் மட்டுமே இருக்கிற உறவில் விரிசல் ஏற்படும்போது, மூன்றாவது நபர் அந்த விரிசல் வழியே உள்நுழைந்துவிடும் அபாயமும் இருக்கிறது.
ஆண், பெண் இருவருக்குமே திருமணத்துக்கு முன் கனவுகளும் கற்பனைகளும் ஏராளம் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளில் பெரும்பாலானவை திருமணத்துக்குப் பிறகு நிறைவேறுகிற தாம்பத்தியத்தில் பிரிவு ஏற்படாது. ஆனால் ஏமாற்றங்கள் நிறைந்திருக்கும்போது மகிழ்ச்சிக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. வீட்டில் வெறுப்பையும் வெளியே அன்பையும் தேடத் தொடங்கிவிடுவார்கள். தன் மீது அக்கறையாக இருக்கிறவர்கள் மீது, இவர்களுக்குப் பிரியமும் நேசமும் துளிர்விடத் தொடங்கும். நாள்கள் செல்லச்செல்ல, அதுவே பிரிக்க முடியாத பிணைப்பாகிவிடும்.
இந்த இரண்டு காரணங்களும் இல்லாத வேறொரு காரணமும் இருக்கிறது. அடிப்படையில் கணவன், மனைவி இருவருக்கும் எதிலுமே ஒத்துப்போகாது. எதற்கெடுத்தாலும் கீரியும் பாம்புமாகச் சண்டையிடுவார்கள். இந்த மாதிரி பிணைப்பற்ற பந்தங்கள் மிக விரைவில் பிரிவை நோக்கிச் சென்றுவிடும்.
ஆனால் இதற்கெல்லாம் இடம் கொடுத்துவிடாமல் வாழ்வதில்தான் இல்லறத்தின் மகத்துவமே அடங்கியிருக்கிறது. எந்தப் பிரச்சினை வருவதற்கு முன்னாலும் நம் உள்மனது எச்சரிக்கை மணி அடிக்கும். நம் அலட்சியம்தான், அந்தச் சத்தத்தை மழுங்கடித்துவிடும். அதனால், எப்போதெல்லாம் உள்மனம் எச்சரிக்கை மணி அடிக்கிறதோ, அப்போதெல்லாம் நாம் தவறான பாதையில் செல்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒருவர் மற்ற நண்பர்களிடம் பேசாத சங்கதிகளையோ, அந்தரங்க விஷயங்களையோ பேசத் தொடங்குகிறார் என்றால், அப்போதே ‘லட்சுமணன் கோட்டை’க் கிழித்துக்கொள்வது நல்லது. அந்தக் கோட்டைத் தாண்டாமல் இருப்பதுதான் இருவருக்குமே நல்லது. அடுத்தவர் நம் மீது அதிகபட்ச உரிமை எடுத்துக்கொள்வதையும் கண்டிக்க வேண்டும். மிக நெருங்கிய நண்பராக இருந்தால், நாசூக்காக எடுத்துச் சொல்லலாம். அப்படியும் எல்லை மீறுவது தெரிந்தால் தயவு தாட்சண்யம் இல்லாமல் கண்டித்துவிட வேண்டியதுதான்.
இப்படி ஏற்படும் உறவுகளில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. உடல் சார்ந்த உறவைவிட, உணர்வு ரீதியான பிணைப்பை அத்தனை சீக்கிரம் உதறிவிட முடியாது. இப்படி ஏற்படுகிற உறவுகள் எல்லாமே நீர்க்குமிழிகள்தான் என்பதைப் புரிந்துகொண்டால் வாழ்க்கை நீரோட்டத்தில் தடையேதும் வராது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT