Published : 18 Mar 2017 06:05 PM
Last Updated : 18 Mar 2017 06:05 PM
பிளஸ் 2 தேர்வு விரைவில் முடியவுள்ள நிலையில் மாணவர்கள் வங்கிகளை கல்விக் கடனுக்காக அதிகளவில் அணுகுவர்.
இந்நிலையில், ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட ஆன்லைன் கல்விக் கடன் திட்டம் தொடர்பாக மாவட்டந்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முடுக்கிவிடுமாறு மாவட்ட அளவிலான வங்கிகள் குழுக்களுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் உத்தரவிட்டுள்ளார்.
கல்விக்கடன் ஆலோசனைக் குழு அமைப்பாளர், பிரைம் பாயின்ட் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் டெல்லியில் அண்மையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், நிதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்தபோது மத்திய அரசு இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாகவும் மத்திய நிதி அமைச்சகம் அளித்த உறுதிகள் தொடர்பாகவும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:
வித்யாலக்ஷ்மி இணையதள விழிப்புணர்வு
கல்விக்கடன் பெருவதற்காக மாணவர்கள் வங்கிகளை அணுகும் நிலையில் ஆன்லைன் மூலமாக கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க ஏற்படுத்தப்பட்ட வித்யாலக்ஷ்மி இணையதளத்தை ( > https://www.vidyalakshmi.co.in/Students/ )மாணவர் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும். மேலும், மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நிதி அமைச்சகம், ஆன்லைன் கல்விக் கடன் திட்டம் தொடர்பாக ஏப்ரல், மே மாதங்களில் மாவட்டந்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முடுக்கிவிடுமாறு மாவட்ட அளவிலான வங்கிகள் குழுக்களுக்கு உடனடியாக உத்தரவிடப்படும் என உறுதியளித்தது.அதேவேளையில், மொபைல் ஆப் மூலமாக கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக பரீசிலிக்கப்படும் எனத் தெரிவித்தது.
'கல்விக் கடனை வாராக் கடனாக கருதக் கூடாது'
கல்விக் கடனை மற்ற வணிகக் கடன் அல்லது தனிநபர் கடன் போல் வாராக் கடனாக கருதக்கூடாது. மாணவர்கள் பெறும் கல்விக்கடனை 180 மாதங்களில் திருப்பிச் செலுத்தலாம் என்பதே இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் (IBA) சட்டவிதி. இதனைப் பின்பற்றினாலே பல்வேறு பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். ஆனால், வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் கல்விக்கடன்களை விற்றுவிடுவதால் அவை வாராக்கடனாக கணக்கிடப்படுகின்றன. இதனால், மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள்கூட நடந்திருக்கின்றன.
கல்விக் கடனை வங்கிகள் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். வாராக் கடனாக இவற்றைக் கருதினால் ஒரு மாணவன் சம்பாதிப்பதற்கு முன்னதாகவே சிபில் போன்ற கிரெடிட் ரேட்டிங்கில் பின்தங்கிவிடுகிறார்.
கல்விக் கடனை வாராக் கடனாக கருதாமல் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி கடன் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டதற்கு இது தொடர்பாக ரிசர்வ் வங்கியும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையும் இணைந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கூட்டுச் சதி இருக்கிறதா என விசாரணை தேவை?
மாணவர் பெறும் கல்விக் கடனை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் சம்பந்தப்பட்ட தனியார் அமைப்புகளும் வங்கிகளும் பெறும் லாபம் என்னவென்பது குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மூலமாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏஆர்சி (ARC) எனப்படும் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளுக்கு கல்விக் கடனை மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
'100% வட்டி மானியம்'
மாணவர்கள் படிப்பு முடியும்வரை கல்விக் கடனுக்கு 100% வட்டி மானியம் அளிக்க வேண்டும். 100% வட்டி மானியம் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தாலும் வங்கிகள் 25% முதல் 30% வரை மட்டுமே வட்டி மானியம் அளிக்கின்றன. மேலும், கல்விக் கடனை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதாலேயே அது வாராக் கடனாகிறது. எனவே, கல்விக் கடனுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்.
கண்காணிப்பு குழு தேவை..
தேசிய அளவிலும் மாநில அளவிலும் கல்விக் கடன் வழங்குவதை அதை வசூல் செய்வதையும் கண்காணிக்க வங்கி அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
குறைகேட்பு மையம்
கல்விக் கடன் தொடர்பாக மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளும் வகையிலும் குறைகளை பதிவு செய்யும் வகையிலும் மண்டலம் வாரியாக குறை கேட்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நிதியமைச்சகம் உடனடியாக அனைத்து மாநிலங்களிலும் மண்டல வாரியாக கல்விக் கடன் குறை கேட்பு மையங்கள் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT