Last Updated : 18 Jan, 2017 02:17 PM

 

Published : 18 Jan 2017 02:17 PM
Last Updated : 18 Jan 2017 02:17 PM

சாதாரணமானவர்களுக்கும்தானே புத்தகக் கண்காட்சி?

இதுவரையில்லாத அளவுக்கு இன்று மக்கள் உடற்பயிற்சி, யோகா என்று கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு என யாரோ ஒரு அறிஞர் சொன்னதையும் அதனோடு சேர்த்துக்கொள்வது நல்லது.

நல்ல புத்தகங்களைத்தேடி எங்கெங்கோ அலைய வேண்டியதில்லை. எல்லாவகையான நல்ல புத்தகங்களும் புத்தகக் கண்காட்சியில் ஒரே இடத்தில் ஆலயத்தின் தீபங்களைப் போல அணிவகுத்து நிற்கின்றன.

அதுவும் இந்தமுறை அங்காடிகளுக்கு எதிரே அகலஅகலமான வழிப்பாதைகள். உயர்த்திக் கட்டப்பட்ட விழாக்கால அலங்கார துணிதைத்த கூரைகள், ஆங்காங்கே மின்விசிறிகள் என காற்றோட்டம் சிறப்பாக அமையும்படி அமைத்திருந்தார்கள்.

புத்தகக் கண்காட்சியில் நுழைவதற்கு முன் எங்கோ படித்த, கேட்ட, பார்த்த புத்தகங்களை நினைத்துக்கொண்டோ, கண்காட்சியை ஒட்டி பலரும் சிபாரிசு செய்யும் பட்டியல்களை நினைத்தோ அல்லது மறந்துவிட்டோ நாம் நுழையலாம். ஆனால் கையில் காசோ கார்டோ இல்லாமல் மட்டும் நுழைந்துவிடக்கூடாது.

புத்தக வகைகளுக்கேற்ப அமைந்துள்ள புத்தக அங்காடிகளைப் பற்றிய புரிதல்கள் எதுவும் இல்லாமலும் நுழைவதும்கூட சற்று குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடும். கையில் காசோ கார்டோ எடுத்துச்செல்லாமல் செல்லலாம். அது ஒன்றும் பெரிய தண்டனைக்குறிய குற்றமில்லை. நம்மை யாரும் தடுக்கப்போவதும் இல்லை.

'இந்தமுறை வேடிக்கைப் பார்க்கத்தான் போகிறேன் அடுத்தமுறை வாங்கிவிடுவேன்' என்று செல்லும்போது அதுகூட தேவையில்லாத ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் தந்துவிட வாய்ப்புண்டு. குறைந்தபட்சம் 500 ரூபாயாவது எடுத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு நுழைந்தால் நீங்களும் ஒரு பிஸியான ஒரு வாசகருக்கான தோற்றத்தோடு கண்காட்சியில் உள்ள ஏதோ ஒரு புத்தக அங்காடியின் முத்திரை முகவரியிட்ட பையோடு அதில் புத்தகத்தை சுமந்து கௌரவமாக வெளியே வரலாம். இல்லையென்றால் யாரும் மதிக்கமாட்டார்களா என்ன பேச்சு இது சின்னபிள்ளத்தனமா என்று வடிவேறு பாணியில் நீங்கள் கேட்பது நன்றாக காதில் விழுகிறது.

அப்படியில்லை, 500 ரூபாய் இருந்தால்தான் ஓரளவுக்கு இரண்டு மூன்று புத்தகங்களையாவது வாங்கமுடியும் என்று சொல்லவந்தேன்.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம். அப்போதுதான் புத்தகக் கண்காட்சி பற்றி கேள்விப்பட்டு சிறிது பணமும் சேர்த்துக்கொண்டு சென்னை வந்தேன். கூட்டநெரிசலில் யாரோ எனது பணத்தை பேண்ட் பாக்கெட்டில் தங்கள் அருந்தேவை கருதி அபேஸ் செய்துகொண்டார்கள். நான் என்ன செய்யட்டும்.

'போய் இறங்கிய பிறகு சாப்பிட்டுக்கலாம்' என மதியம் வேறு சாப்பிடவில்லை. ஒரு பக்கம் காசு போன கவலை, இன்னொரு பக்கம் பசி, வேறொரு பக்கம் வாங்க எண்ணியிருந்த புத்தகங்கள் வெளியே வைக்கப்பட்டிருந்த ஃப்ளெக்ஸ் பதாகைகளிலிருந்து என்னைப் பார்த்துக் கண்ணடித்துக்கொண்டிருக்கும் பரிகாசம். அந்த நேரம் பார்த்து ஒரு நண்பர் என்னைத் தெரிந்துகொண்டதுபோல ''சார் உங்களை சில கூட்டங்கள்ல பாத்திருக்கேன். ஏன் வெளியில நிக்கறீங்க... உள்ள வாங்க.'' என்றார்.

''இல்ல சார் டிக்கட் இல்ல.'' ''என்ன சார் நீங்க கியூவைப் பார்த்து பயந்துட்டீங்களா? ஹாஹாஹா! ஒரு நிமிஷம் இருங்க'' அவரே டிக்கட் வாங்கப் போக அதைத் தடுக்க முடியாமல் நின்றேன். டிக்கெட்டோடு வந்தவர்.'' வாங்க உங்களுக்குத் தேவை யான புத்தகங்களை அள்ளிகிட்டு வரலாம் வாங்க சார்'' என்று பெருகும் உற்சாகத்தோடு என்னை இழுக்க நான் சற்றே கைகளை விலக்கிக்கொண்டு ''ஒரு பிரச்சனை சார்'' என்று எனக்கு நேர்ந்த சம்பவங்களை சொன்னேன்.

''அடடடா முதல்ல வாங்க ஏதாவது சாப்பிடலாம்'' என்றவர் சுற்றிலும் முற்றிலும் பார்த்தவர்... வகைவகையான பொறைகள் அடுக்கிவைக்கப்பட்ட தற்காலிகக் கடைக்கு அழைத்துச் சென்றார். நண்பர் பொறைவாங்கித்தந்த அந்த நிகழ்வை வாழ்நாளில் எப்போதுமே மறக்கமுடியவில்லை.

சமீபத்திலும் அத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றது. அதன் ஹீரோ சாட்சாத் அதே ஆசாமிதான். அவரை பார்த்ததுமே நாக்கில் ஜொள்ளு ஊறியது... பொறை தின்ற ஞாபகம். அந்தமுறை காசில்லாமல் போனதற்கு வேறொரு காரணம். அந்தக் காரணம் சுத்தமாக ஞாபகமில்லை. காசில்லாமல் போவதற்குப்போய் என்ன காரணம் இருக்கமுடியும்? காசில்லாத காரணத்தைத் தவிர.

கையிலோ காசில்லை. மனமோ புத்தகங்கள்மீதான ஆசை. என்ன செய்யட்டும். ஆனால் புத்தகக் கண்காட்சிக்குள் சென்றே ஆகவேண்டும். குறைந்தபட்சம் புத்தகங்களையாவது பார்க்கவேண்டும் என்ற ஏக்கம்.

ஒரு கொடுமை என்னவென்றால் அந்தமுறை அந்த பழைய நண்பரிடமும் மிகவும் சிறுதொகை மட்டும்தான் இருந்தது. ''பொறை சாப்பிடலாமா'' என்று கேட்டார். நான் அவரை ஒரு மாதிரியாக பார்த்தேனே தவிர எப்ப சாப்பிடலாம் என்றுதான் கேட்டுவைத்தேன். எதற்கு வலிய வர்ற லட்சுமி விரட்டணும். அவர் சொன்னார் ''மொதல்ல புக்கு அப்புறம்தான் பொறை'' என்றார். ''சரி வாங்க'' என்று அவரோடு உள்ளே சென்றேன்.

அந்த நண்பர் ஒவ்வொரு அங்காடி அங்காடியாக நுழைந்து நுழைந்து வெளியே வந்தார். நான் கேட்டேன். ''என்ன சார் இது? ஒரு புக்குகூட வாங்கலை நுழைஞ்சி நுழைஞ்சி வெளியே வர்றீங்களே கையில வேற ஒரு அமவுண்ட் வச்சிருக்கீங்க... இல்லனா வாங்க போய் பொற வாங்கி சாப்பிடலாம்'' என்றேன்.

அவரோ ''சார் இருங்க சார் ஏன் அவசரப்படறீங்க... '' என்று அவர் இப்படி பேசும்போதே தமிழ்நாடு பாடநூல் நிறுவன அங்காடி வந்துவிட்டது. ''வாங்க வாங்க'' என்று காட்டில் முயல்கள் அகப்பட்டுக்கொண்டு ஆட்டம்காட்டுவதை பிடிக்கப்போவதுபோன்ற லாவக உற்சாகத்தோடு என்னை இழுத்தார். உள்ளே போனவர் அந்நிறுவனத்தின் காலாவதியாகிப்போன புத்தகங்களை அள்ளினார். ஒவ்வொரு புத்தகமும் அறுநூறு எழுநூறு பக்கங்கள், விலையோ 2 ரூபாய், 2ரூபாய் ஐம்பது காசு, 2 ரூபாய் 90 காசு. இந்த நிகழ்வு பழங்கால நிகழ்வு என்று நினைத்துவிடவேண்டாம். அதிகம் போனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்சம்பவமாகத்தான் இருக்கும்.

ரஷ்ய வரலாறு, தென்அமெரிக்க வரலாறு, பழங்கால இந்திய வரலாறு.. எப்படியாவது தள்ளிவிடவேண்டுமென்று குடவுனில் இருந்தால் இடத்தை அடைத்துக்கொள்ளுமான புத்தகங்கள் அவை. எதற்கு லாரி வாடகை செலவு வேறு எனக் கவலைப்பட்டு வழியில் ஆற்றில்கீற்றில் போட்டுவிடாமல் கண்காட்சிவரை சிரமப்பட்டு எடுத்துவந்ததோடு மிகவும் கேவலமான விலைக்கு தருகிறார்களே. ரஷ்ய வரலாறு மட்டும் விலை மிகவும் அதிகம். 5 ரூபாய். அவர்களது பரோபகார சிந்தையை நினைத்துநினைத்து மனம் வியந்தது.

நானும் அவருமாக புத்தகங்களை அள்ளிக்கொண்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வெளியே வந்தோம். ''சார் இவ்வளவு புத்தகங்களையும் நீங்கள் படிப்பீங்களா? உங்க சித்தப்பா மளிகைக் கடை வச்சிருக்கிறதா சொல்லியிருக்கீங்க இல்ல? ஒருவேளை அவருக்கு உதவிகரமாக செய்யறதா நெனைச்சி?'' என்று முழுவதுமாக முடிக்கவில்லை. அதற்குள் அவர் ''இதை விட நீங்க என்னை நீங்க செயின்ட் ஹெலனா தீவுக்கு நாடு கடத்தியிருக்கலாம்'' என்றார். ''நீங்க வரலாறு படிக்கறவர்தான்'' ஒத்துக்கறேன் என்றேன்.

நெப்போலியன் அங்கு சென்றபோது அங்குள்ள தட்பவெப்பநிலை, நெப்போலியனின் கடைசிகாலத்தில் காவலர்கள் நடத்தியமுறை எல்லாம் அடுக்கடுக்காக ஞாபகம் வந்தன. ''பொற கிடைக்குமா சார்?'' என்று நான் மீதியுள்ள காசுககு பொறை சாப்பிடும் ஆவலில் கேட்க நினைத்து ''அங்க பொற கிடைக்குமா சார்'' என்று வாய்த்தறி கேட்டுவிட அவரோ ''செயிண்ட் ஹெலனா தீவிலா? சரியாப்போச்சி... பொறை கிடைக்காது, சிறைதான் கிடைக்கும் ஹாஹாஹா'' என்று அப்பாவியாய் சிரித்தார். ''ஆனா இங்கே கிடைக்கும் வாங்க போலாம்'' என்றவாறே வேகமாக சென்றவரை நான் பின்தொடர்ந்தேன்.

அவர் பாணியை பிறகு நானும் கடைபிடிக்கத் தொடங்கினேன். என்பிடி, சாகித்ய அகாடெமி என தேடித்தேடி குறைந்தவிலை அங்காடிகளைக் கண்டுபிடித்தேன். அங்காடிகளில் பழைய எடிஷன்களை கால்விலைக்குத் தந்தனர். ஆனால் அதில் இன்னும் ஒரு புத்தகம் கூட இன்னும் படிக்கஆரம்பிக்கவில்லை.

உண்மையில் புத்தகம் வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற எந்தக் கட்டாயமுமில்லை. அது நமது மனநிலையும் விருப்பார்வத்தையும் நாம் எதிர்பார்க்கும் பாடுபொருள் சரியாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறதா போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. ஒரு பக்கம் வரலாற்று நாயகர்களும் இன்னொரு பக்கம் பக்திப் பழங்களும் வேறொரு பக்கமோ பகுத்தறிவு சூரியன்களும் கல்லூரி புத்தகங்கள், அறிவியல், நவீன தொழில்நுட்பம், தன்னம்பிக்கை, இலக்கியம், சமையல் கலை, சிறுவர் உலகம், பெண்கள் முன்னேற்றம் என பலவகையான ரசனைகளுக்கும் அறிவுமேம்பாட்டுக்கும் அங்கு தீனி உண்டு.

இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் பொங்கல் அன்று செல்ல உத்தேசத்திருந்து எப்படியோ தவறிவிட்டது. மறுதினம் மாட்டுப்பொங்கல் அன்று சென்றிருந்தேன்.. நான் எதிர்பார்த்த கூட்டமே வேறு. மாட்டுப்பொங்கல் அன்று புத்தகக் கண்காட்சி அங்காடிகளின் பாதைகளில் நடக்கவே முடியாது. ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் பிதுங்கிவழியும். கடைக்காரர், ''சார் கொஞ்சம் இடிக்காம தள்ளிப் போங்க சார்'' என்ற சொன்னதை பார்த்த நினைவெல்லாம் உண்டு. அன்றைய காலை அந்தமாதிரியான அறிகுறிதான் தென்பட்டது. ஆனால் மதியத்திற்குப் பிறகு அந்த எதிர்பார்ப்பு சற்றே சரிந்து மாலையில் முற்றிலுமாக காற்றோடத் தொடங்கியது. பணமதிப்பு நீக்கம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. அப்படியெனில் பைரவா படம் மட்டும் எப்படி முதல்நாளே 16.61 கோடி அள்ளியது. கடந்த நான்கு நாட்களில் பைரவா வசூல் 100 கோடி ரூபாய்.

வழக்கமான ஒரு அம்சம்தான் என்றாலும் இங்கு குறிப்பிடாமல் இருக்கமுடியாது. முன்பு பார்த்த அத்தகைய மக்கள் வெள்ளத்தில் பலவிதமான மக்களும் இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் போகப்போக புத்தகங்கள் எலைட் சமூகத்திற்கானது என்பதுபோன்ற தோற்றத்தையேக் காணமுடிகிறது. அதிலும் இந்தமுறை மருந்துக்குக்கூட சாதாரண மத்தியதர வகுப்பினரோ அதற்கும் கீழ் உள்ளவர்களோ புத்தகக் கண்காட்சிக்கு வருவதற்கான எந்த சுவடும் இருப்பதாகத் தெரியவில்லை.

புத்தகக் கண்காட்சிக்கு வருகை தரும் மக்களை பார்க்கும்போது ஒரு வித்தியாசம் தெரிந்தது. இவர்கள் யாவரும் உயர் மத்தியதர வகுப்பினர் என்பது. புத்தகங்களின் விலைகளை கேட்டாலே தலை சுற்றுகிறது. எந்த புத்தகமும் இருநூறு ரூபாய்க்கு குறைவாக இல்லை. ஐந்து ரூபாயிலிருந்து ஐம்பது அறுபது ரூபாய்க்குக் கூட புத்தகங்கள் உண்டு. ஆனால் அவைகள் புத்தகங்கள் என்று சொல்லுவதைவிட சிறுபிரசுரங்கள் எனலாம். 200 ரூபாய் புத்தகம்தான் புத்தகமாக லட்சணமாக இருக்கிறது.

அப்படியே சிலர் வந்தாலும் கையில் வைத்திருக்கும் வாட்டர் பாட்டிலை எடுத்துஎடுத்து ஊற்றிக்கொண்டு தாகசாந்தி செய்துகொள்வதைப் பார்க்கமுடிந்தது. கண்காட்சி வளாகத்தில் உள்ள அந்த உணவுவிடுதியில் உள்ளே நுழைவதற்கு பலரும் அச்சப்பட்டு அசூயைப்பட்டு தெறித்து ஓடிவருவதையும் பார்க்கமுடிகிறது. ஆனால் வேறுசிலரோ சகஜமாக உள்ளே சென்று சொன்ன விலைக்கு டோக்கன்களை வாங்கி மூக்குபுடைக்க ஒரு பிடிபிடிப்பதையும் பார்க்கலாம். அப்படியெனில் யாருக்கு நடக்கிறது புத்தகக் கண்காட்சி?

இதே பொங்கல் வைபவத்தின்போதுதான் 'பைரவா' திரைப்படத்தின் எகிறியுள்ள முதல்நாள் வசூலை ஒப்பிடும்போது புத்தகக் கண்காட்சியின் அன்றைய வசூல் நிச்சயம் நூறில் ஒரு சதவீதமாவது இருக்குமா என்பது சந்தேகம்தான்.

ரசனை அடிப்படையிலோ மக்கள் ஈடுபாட்டின் அடிப்படையிலோ பார்க்கும்போது இந்த ஒப்பீடு சமமானது அல்ல. புத்தகங்களின் விலை, கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் பண்டங்களின் விலை, நுழைவுக்கட்டணம், பார்க்கிங் ஸ்டேண்டில் நிறுத்தப்பட்ட எக்கச்சக்கமான கார்களைப் பார்க்கும்போது எளிய மனிதனிடமிருந்து புத்தகக் கண்காட்சி சற்று தள்ளியேயிருக்கிறதோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியிவில்லை.

புத்தக விலை ஏற்றம் குறித்து அறிய, வளர்ந்துவரும் பதிப்பாளர் 'அடவி' முரளி அவர்களைத் தொடர்புகொண்டோம். இப்படியொரு கேள்விக்காக காத்திருந்தவர் போல பொலபொலவென கொட்டத் தொடங்கினார்.

புத்தகத் தயாரிப்பு செலவு மிகவும் கூடியுள்ளது முக்கியமான காரணம். பைண்டிங், பிரிண்டிங், ஆபீஸ் வாடகை, ஊதியம் என எல்லாமே கூடியுள்ளது. முன்பு கணினியில் தட்டச்சு செய்பவர்களுக்கு அப்போதெல்லாம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலே போதும். தற்போது 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டும். சென்னையின் காஸ்ட் ஆப் லிவிங் ஒரு காரணம்.

புத்தக தயாரிக்கும் முறைகளிலேயே நிறைய மாற்றம் வந்துவிட்டது. உதாரணமாக புத்தக அட்டையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்குக் காரணம் கண்காட்சிக்கு வரும் வாசகர்களிடம் தரமான புத்தகங்களை கொண்டு சேர்க்கவேண்டும் என்ற நோக்கம்தான். 300 ஜிஎஸ்எம் ஆர்ட் போர்டில்தான் இப்போது அட்டை போடுகிறார்கள். மேலும் லேமினேஷன் கிளாஸி இருந்ததெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எல்லோருமே மேட் லேமினேஷனாக மாறிவிட்டது.

அப்புறம் இன்னொரு முக்கிய காரணம் லைப்ரரி ஆர்டரை நம்பி புத்தகம் போடுவது மிகவும் சிரமம். அதனால் பிஓடி அதாவது பிரிண்ட் ஆன் டிமாண்ட் அடிப்படையில்தான் இப்போதெல்லாம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. 500க்குமேல் நூறுநூறாக சேர்த்து அடிக்கப்படும் காப்பிகள் ஏறஏற ஆயிரம் இரண்டாயிரம் காப்பிகள் அச்சிட குறைந்த செலவுதான். இதில் காகித செலவு மட்டும் எகிறும்.

புத்தக கண்காட்சிக்காக அச்சிடும்போது அவ்வளவு எண்ணிக்கையில் அச்சிடஇயலாது. 4 காப்பியிலிருந்து 100 காப்பிவரை அடிப்பதற்கு ஒரு தொகை அடிப்படையில் குறைந்தது 300 காப்பிகள்தான் பெரும்பாலான பதிப்பகங்களில் அச்சிடப்படுகின்றன. காப்பி கூடகூட செலவு குறையும். ஆனால் 300 காப்பிகளே போதும் என்ற நிலையில் ஏராளமான டைட்டில்கள் 300 காப்பிகளில் அச்சிடும்போது செலவு பலமடங்கு ஆகிறது.

விலைவாசி எல்லா பொருள்களுக்கும் ஏறுவதுபோல புத்தகத் தயாரிப்பிலும் கணிசமான பங்கு உயர்ந்துள்ளது. இதனால் விலையை உயர்த்திவைக்கவேண்டியுள்ளது. எளிய வாசகர்களுக்கு பிரமிப்பை ஊட்டும் என்பது உண்மைதான். செல்போன் ரீசார்ஜ்க்காக நாம் தினம்தினம் 200 ரூபாய் செலவழிக்கும் தொகையை ஒப்பிடும்போது இது பெரிய தொகையில்லை என்றார்.

முரளி சொன்னதுபோல செல்போன் செலவுகளை ஒப்பிடும்போது இது பெரிய செலவில்லைதான். ஆண்ட்ராயிட் போனுக்கு பல ஆயிரங்களை செலவிடும் இளைஞர்களையும் பார்க்கிறோம். 200 ரூபாய் என்பது பெரிய திரைப்படங்களின் முதல்நாள் டிக்கெட்டைவிட மிகவும் குறைவான தொகைதான்.

பத்து சதவிகித கழிவில் கைக்கெட்டும் தூரத்தில் புத்தகங்களைப் பெற புத்தகக் காட்சி ஓர் அரிய வாய்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x