Published : 07 Sep 2018 08:36 AM
Last Updated : 07 Sep 2018 08:36 AM
தன்பாலின உறவில் ஈடுபடுதல் குற்றம் என்ற 377-வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் தன்பாலின உறவு சட்டப்படி குற்றமல்ல.
‘ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சுய விருப்பத்துடன் உடல் ரீதியான உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம்’ என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் படி தடை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் முடிவெடுக்கும் உரிமையை நீதிமன்றத்தின் பொறுப்புக்கே விட்டுவிடுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்பின் இருதரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு விவரம்:
சட்டப்படி வயது வந்த இருவர் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உடல்ரீதியான உறவு வைத்துக் கொள்வதை தடுக்க முடியாது. அப்படி தடுத்தால், அவர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அடிப்படை சம உரிமையையும், கவுரவமாக வாழும் உரிமையையும் மீறும் செயலாகும். எனவே, இத்தகைய உறவை தடை செய்யும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
சட்டப்பிரிவு 377-ன் கீழ், இயற்கைக்கு மாறாக விலங்குகள், குழந்தைகளிடம் உடல்ரீதியான உறவில் ஈடுபடுவது குற்றம் என்பதில் மாற்றம் இல்லை. ஆண் - பெண் தன்மை உடையவர்கள், பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், ஒரே பாலின உறவில் நாட்டம் கொண்டோர் என பல்வேறு பிரிவினராக உள்ளோர் ‘எல்ஜிபிடிக்யூ’ என அழைக்கப்படுகின்றனர். இவர்களை துன்புறுத்த பிரிவு 377 பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தனை காலம் இவர்களுக்கான அடிப்படை உரிமையை வழங்காமலும், சுதந்திரமாக வாழ விடாமலும், ஒருவித அச்ச உணர்வில் இருக்க வைத்ததன் மூலம் இவர்களிடம் வரலாறு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இப்பிரிவினருக்கு மற்ற குடிமக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் உண்டு. பாலின உறவு என்பது உடல்ரீதியான விஷயம். இதில் பாரபட்சமாக நடத்துவது அடிப்படை உரிமையை நிராகரிக்கும் செயல். தன் பாலின உறவு மனரீதியான குறைபாடு அல்ல; அது உடல்ரீதியான இயற்கை நிலை என்பதை உணர வேண்டும். அவர்கள் இதுநாள் வரை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு, ஒளிந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ‘எல்ஜிபிடிக்யூ’ பிரிவினருக்கு உரிமைகள் வழங்குவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதால் அவர்களுக்கு உரிமைகள் வழங்குவது கட்டாயம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தன்பாலின உறவுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் இருந்துவரும் நிலையில், இத்தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று தன்பாலின உறவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சட்டப்பிரிவு 377-ல் எது குற்றம்?
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் படி, வயது வந்த ஒருவர் இயற்கைக்கு மாறாக ஆண், பெண், குழந்தைகள் அல்லது விலங்குகளுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம். இக்குற்றச் செயலுக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையடுத்து, இனி குழந்தைகள் மற்றும் விலங்குகளிடம் உறவு கொண்டால் மட்டுமே இப்பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT