Published : 26 Sep 2018 07:28 AM
Last Updated : 26 Sep 2018 07:28 AM

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை மட்டுமே அடிப்படையாக வைத்து தேர்தல்களில் நிற்பதற்கு தடை விதிக்க முடியாது; எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு: நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர அறிவுரை

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை மட்டுமே அடிப்படையாக வைத்து, தேர்தலில் நிற்க தடை விதிக்கவோ குற்றப் பின்னணி உடைய எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யவோ முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.  குற்றப் பின்னணி உடை யவர்கள் தேர்தலில் போட்டியிடு வதை தடுக்க நாடாளுமன்றம்தான் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் லட்சுமண ரேகையை தாண்ட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, குற்ற வழக்குகளில் தண்டனை பெறுபவர்கள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஆனால், பெரும்பாலான எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் நீதிமன்றங் களில் நிலுவையில் இருந்து வருகின்றன.

எனவே, முக்கிய குற்ற வழக்கு களில் சிக்கி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கள் தொடரப்பட்டன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்குகளை விசாரித்து வந்தது.

நாட்டில் மொத்தம் உள்ள 4,896 எம்பி, எம்எல்ஏக்களில் தற்போது  1,765 எம்பி, எம்எல்ஏக்கள் மீது 3,045 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், முக்கியமான இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க நாடாளுமன்றம்தான் உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள்  லட்சுமண ரேகையைத் தாண்ட இயலாது. குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்பட்டதை மட்டுமே அடிப்படையாக வைத்து, குற்றப் பின்னணி உடைய எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யவும் முடியாது.

தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை எந்தெந்த சூழலில் தகுதிநீக்கம் செய்ய முடியும் என்பதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஏற்கெனவே வரையறுத்துள்ளது. எனவே, அதற்குள் நாங்கள் செல்ல விரும்ப வில்லை.

ஆனால், இதுதொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். தவிர, தாங்கள் தேர்வு செய்யும் நபர்களின் குற்றப்பின்னணி குறித்து அறிந்துகொள்ள வாக்காளர் களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே, குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் தொடர்

பான விவரங்களை தேர்தலின்போது வேட்புமனுக்களில் பெரிய எழுத்துகளில் குறிப்பிட வேண்டும்.

ஊடகங்களில் விளம்பரம்

தேர்தலில் கட்சி சார்பா கவோ, சுயேச்சையாகவோ போட்டியிடும் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, தங்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மற்றும் குற்றப் பின்னணி குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உள்ளூர் ஊடகங்களில் விரி வாக விளம்பரம் செய்ய வேண் டும். அரசியல் கட்சிகளும் தங்களது இணையதளங்களில் இதுதொடர்பாக அறிவிக்க வேண்டும்.

குற்ற வழக்குகளை எதிர் கொள்ளும் நபர்கள் கட்சி சார்பிலோ, கட்சி சின்னத்திலோ போட்டியிடக் கூடாது என அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண் டும். அதுபோன்ற நபர்கள் தேர்தலில் போட்டியிட அரசி யல் கட்சிகளும் வாய்ப்பு அளிக்கக் கூடாது.

ஊழலும்  குற்றப் பின்னணி உடையவர்களின் அரசியலும் ஜனநாயகத்தின் வேரையே அழித்து விடும். எனவே, இதை தடுக்க நாடாளுமன்றம் உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டுவந்து, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.

வழக்கறிஞர்களாக  பணியாற்ற தடையில்லை

பாஜக மூத்த நிர்வாகியும் மூத்த வழக்கறிஞரு மான அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘பிற தொழில் மூலம் ஊதியம் பெறுபவர்கள் நீதிமன்றங் களில் வழக்கறிஞர்களாகப் பணியாற்ற அகில இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. ஆனால்,

அரசு சம்பளம் பெறும் எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக் கள் பலர் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களா கவும் பணிபுரிகின்றனர். இது சட்ட விரோதம். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

அதற்கு மத்திய அரசு தரப்பில், ‘‘எம்பி, எம்எல்ஏக் கள் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தானேயன்றி அவர்கள் முழுநேர அரசு ஊழியர்கள் கிடையாது. எனவே இந்த மனுவிசாரணைக்கு உகந்தது அல்ல’’ என வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,  நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி போன்ற  மக்கள் பிரதிநிதிகள் வழக்கறிஞர்களாக தொழில் செய்யக் கூடாது என்று பார் கவுன்சில் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, அவர்கள் வழக்கறிஞர் களாக தொழில் புரிய தடை விதிக்க முடியாது. இவ்வாறு கூறி  மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x