Last Updated : 18 Jun, 2019 12:07 PM

 

Published : 18 Jun 2019 12:07 PM
Last Updated : 18 Jun 2019 12:07 PM

இஷ்டப்பட்டு படித்தால் ஆங்கிலமும் எளிதுதான்! - வழிகாட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்

ஆங்கிலம் என்றாலே பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு எட்டிக்காய்தான்.  இந்த எண்ணத்தை மாற்றி, ஆங்கிலப் பாடத்தை ஆர்வமுடன் கற்கும் சூழலை ஏற்படுத்தியதுடன், மாணவர்களுக்கு இலவசமாக அகராதியும் வழங்குகிறார் நாமக்கல்லை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெ.ராம்ராஜ். இவரது கற்பிக்கும் திறனைப் பாராட்டிய பள்ளிக் கல்வித் துறை, ஆசிரியர்களுக்கும் ஆங்கிலப்  பயிற்சியை நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆசிரியர் ஜெ.ராம்ராஜை சந்தித்தோம். “நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில், இளநிலை ஆங்கில இலக்கியம் பயின்றேன்.  ஆசிரியராக வேண்டுமென்ற  உத்வேகத்தால்,  எம்.ஏ. ஆங்கில இலக்கியம், பி.எட். படித்து ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். தற்போது மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்,  6 முதல் 10-ம் வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்தி வருகிறேன்.

ஆங்கிலம் என்றாலே கடினமான பாடம் என்ற எண்ணம் மாணவர்களிடம் உள்ளது. அதைப்போக்கும் வகையில், பாடம் நடத்து வதற்குமுன் ஏதாவது ஒரு பொது அறிவு குறித்த தகவலை மாணவர்களிடம் ஆங்கிலத்திலும், தமிழிலும் விளக்கிக் கூறி உற்சாகப்படுத்துவேன்.

திரைப்படங்கள் மாணவர்கள் மட்டுமன்றி,  அனைத்துத் தரப்பினர் கவனத்தையும் ஈர்ப்பவை. எனவே, திரைப்படங்களின் பெயர்,  அதில் வரும் வசனங்களை தொடர்புபடுத்தி,  ஆங்கில வார்த்தைகளைக் கூறும்போது,  மாணவர்கள் அவற்றை நன்கு நினைவில் வைத்துக்கொள்வர்.

உதாரணமாக நடிகர் விஜய் நடித்த `மெர்சல்’  படத்தின் பெயரை, ஆங்கிலத்தில் சர்ப்ரைஸ், அமேசிங் என்றெல்லாம் நான் விளக்கும்போது, அதை மாணவர்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்கின்றனர்.

ஆங்கிலப் பாடத்தில் வரும் செய்யுள்களை எளிதாகப் புரிந்து படிக்க, திரைப்படப்  பாடல்களை ஒப்பிட்டு மாணவர்களுக்கு கற்பிப்பது வழக்கம். இது மாணவர்களிடம்  ஆங்கில செய்யுள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தால்தான், மாணவர்கள் படிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், கடந்த ஆண்டு எனது சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம்-தமிழ் அகராதியை  வழங்கினேன்.

aangilam-2jpg

மாணவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்,  பள்ளியில் எந்த ஒரு மாணவருக்கும் பிறந்த நாள் என்றால், பேனா போன்ற சிறு அன்பளிப்புகளை வழங்கி ஊக்கப்படுத்துவதும்  வழக்கம். இது நல்ல பலனைத் தந்துள்ளது. மேலும், பாடங்களைத் தாண்டி, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த தகவல்களையும் தெரிவிக்கிறேன்.

இதேபோல,  ஆங்கிலத்தை எப்படி மாணவர்களுக்குப் புரியும் வகையில் கற்பிப்பது என்பது குறித்தும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் இந்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பயிற்சி நடைபெற்றாலும், என்னை அழைப்பர்.

அரசுப் பள்ளி மட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். ஆசிரியர்களுக்கு அளிக்கும் பயிற்சி,  ஏராளமான மாணவர்களைப் போய்சேரும் என்ற நோக்கில் பயிற்சி அளிக்கிறேன்.

அதேபோல,  ஆசிரியர்களின் வாட்ஸ்-அப் குழுவில், தினமும் ஏதாவது ஒரு வாக்கியம் அமைப்பது குறித்த தகவல்களையும்  அனுப்பி வருகிறேன். என்னிடம் பயின்ற, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்  5  பேர், நாமக்கல்லில் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக உள்ளனர்.  கஷ்டப்பட்டு படிக்காமல்,  இஷ்டப்பட்டு பயின்றால் ஆங்கிலம் போன்ற எளிதான மொழி வேறெதுவும் இல்லை” என்றார் உறுதியுடன் ஆசிரியர் ராம்ராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x