Published : 08 Jun 2019 12:31 PM
Last Updated : 08 Jun 2019 12:31 PM
இன்று தமிழகமெங்கும் பரபரப்பாய் பேசப்படும் வார்த்தை `நீட்’. மருத்துவம் படிப்பதற்கான தகுதியை அளவிடும் தேர்வு இது. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் இந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பயில முடியும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் சிலர் தற்கொலை செய்துகொண்ட துயரமும் இங்குண்டு. இந்த நிலையில், படிக்க வசதியிருந்தும், சிறப்பு பயிற்சி பெற முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு கை கொடுக்கிறது கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்.
`மைசூர் பா’ என்ற வார்த்தை காதில் விழுந்தவுடன், நாவில் எச்சில் ஊறுவதுடன், நம் மனக்கண்ணில் தோன்றுவது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்தான். இனிப்புகளை வழங்கி நம்மை மகிழ்விக்கும் இந்நிறுவனம், ஏழை, நடுத்தர மாணவர்களின் வாழ்க்கையையும் இனிப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆம், மருத்துவக் கல்வி பயில விருப்பம் இருந்தும், நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று, தேர்வில் வென்று, டாக்டராக வேண்டுமென்ற கனவு இருந்தும், வசதியின்மை காரணமாக அந்தக் கனவை குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் மாணவர்களுக்கு, அக்கனவை நனவாக்க தன்னாலான முயற்சியைத் தொடங்கியுள்ளது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்.
தகுதி இருந்தும், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக நீட் தேர்வுக்கு பயிற்சி எடுக்க இயலாதவர்களுக்காக, இலவசமாக நீட் பயிற்சி முகாமை நடத்துகிறது இந்த நிறுவனம். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணனிடம் பேசினோம்.
“எல்லா குழந்தைகளுக்கும் உயர்கல்வி பயில வேண்டுமென்ற ஆசை உள்ளது. குறிப்பாக, நிறைய குழந்தைகளுக்கு மருத்துவம் பயில வேண்டுமென்ற லட்சியம் இருக்கிறது. தற்போதைய சூழலில் மருத்துவம் பயில வேண்டுமெனில் `நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். சிறப்பு பயிற்சி பெற்றால் இத்தேர்வில் வெல்வது எளிதாகும். ஆனால், எல்லா குழந்தைகளாலும் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியில் பங்கேற்க முடிவதில்லை.
பயிற்சி வகுப்புக்கு கட்டணமாக ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டியுள்ளது. இது எல்லோராலும் இயல்வதல்ல. இதனால், திறமையான பல மாணவர்களால் நீட் தேர்வுக்குத் தேவையான பயிற்சியைப் பெற முடியாமல் போய்விடும் சூழல் உள்ளது. எனவேதான், `வைத்ய வித்யா’ என்ற பெயரில், நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்க முடிவு செய்தோம். இந்தப் பயிற்சி நீட் தேர்வுக்குத் தயாராக உதவுவது மட்டுமின்றி, பல்வேறு தேர்வுகளுக்கும் தயாராக உதவும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவும் சிறு முயற்சிதான் இது. அவர்களை கைதூக்கிவிட முயற்சிக்கிறோமே தவிர, நேரடியாக எம்.பி.பி.எஸ். பயிலும் வாய்ப்பை பெற்றுத் தரவில்லை. ஆனால், ஆர்வமுள்ள, எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் முயற்சியின் தொடக்கம்தான் இது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் உயரே செல்ல ஒரு ஏணிப்படியாய் விளங்குகிறோம்.
கோவையில் உள்ள ஐஐடி ஸ்டடி சர்க்கிள் அமைப்பைச் சேர்ந்த எஸ்.எஸ்.வெங்கடேசன், ஜெயந்தி வெங்கடேசன் ஆகியோர், இந்தப் பயிற்சி முகாமை நடத்த முன்வந்தனர். விருப்பமுள்ள, ஆனால் வசதியில்லாத குழந்தைகளுக்கு நீட் பயிற்சி வகுப்பு நடத்தத் திட்டமிட்டு, அதற்கான நுழைவுத் தேர்வை நடத்தினோம்.
கோவை மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 350-க்கும் மேற்பட்டோர், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் கலந்துகொண்டனர்.
110 மாணவர்களுக்கு...
இவர்களில் பெரும்பாலானோரின் பெற்றோர், டிரைவர், கூலி தொழிலாளி, டெய்லர், ஃபிட்டர், விவசாயி, மெக்கானிக், எலெக்ட்ரீஷியன், கார்பென்டர், பழைய துணி விற்பவர், செக்யூரிட்டி, குவாரி தொழிலாளி, சிறிய மளிகை கடை நடத்துபவர் என அடித்தட்டு மக்கள்தான்.
நுழைவுத் தேர்வு அடிப்படையில் 80 பேரைத் தேர்வு செய்ய முதலில் திட்டமிட்டிருந்தோம். அதேசமயம், சொற்ப மதிப்பெண்களில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 30 பேரையும் சேர்த்து, மொத்தம் 110 பேரைத் தேர்வு செய்துள்ளோம். மதம், ஜாதி என எந்த பேதமும் இல்லாமல் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கோவை ராம்நகரில் உள்ள சபர்பன் பள்ளியில், இம்மாதம் 16-ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த வகுப்புகள், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியே நடத்தப்படும். காலை 9 முதல் பகல் 1.15 மணி வரை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிற்பகல் 2 முதல் மாலை 6.15 மணி வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும்.
மொத்தம் 28 வகுப்புகளில், அனுபவம் மிக்க, தலைசிறந்த பேராசிரியர்களைக் கொண்டு கணிதம், இயற்பியல், வேதியியல், பொது அறிவு உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படும். வகுப்பறைகளில் நடத்தப்படும் பாடங்களைக் காட்டிலும், சற்று விரிவாக, ஆழமாக பாடங்கள் கற்பிக்கப்படும்.
ஆங்கிலப் பேச்சு பயிற்சி!
இரண்டு ஆண்டுகளுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளோம். சூழ்நிலையைப் பொறுத்து, வரும் ஆண்டுகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அதேபோல, ஆங்கிலப் பேச்சு, கையெழுத்துப் பயிற்சி, தன்னம்பிக்கைப் பயிற்சி உள்ளிட்டவற்றையும் கற்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
எங்களுடன் இணைந்து சேவையாற்றவும், கூடுதலான வகுப்புகள் நடத்த உதவவும் பலர் முன்வந்துள்ளனர். உண்மையில், நல்லது செய்ய பலரும் தயாராக உள்ளனர். அவர்களுக்கு வழிமுறைகள்தான் தெரியவில்லை. எங்களது இந்த சிறு முயற்சி, நிச்சயம் பெரிய இயக்கமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
பாதையை அடையாளப்படுத்த ஒரு விளக்கை தற்போது அமைத்துள்ளோம். இன்னும் பெரிய பெரிய நிறுவனங்கள் இந்தப் பாதையில் பயணித்து, இதுபோல சிறப்பு பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்த முன்வந்தால், ஏழ்மையால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் குழந்தைகள் ஏராளமானோர் கல்வி பெற்று, அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும்” என்றார் உறுதியுடன் எம்.கிருஷ்ணன்.
சமூகத்தின் மீதான அக்கறையே காரணம்... “அடிப்படையில் வணிகரான நீங்கள், ஆன்மிகம், கலை, கலாச்சார நிகழ்வுகளை நடத்தினீர்கள். தற்போது கல்வியின் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறீர்கள். அடுத்து என்ன?” என்று கேட்டோம். “வலை... என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம். பாலியல் தொந்தரவுகளில் சிக்காமல் தப்பித்துக் கொள்வது, விடுபடுவது, விழிப்புணர்வைப் பெறுவது தொடர்பான இந்தக் கருத்தரங்கு, இளம் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அடிப்படையில் சமுதாயத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகளும், துக்கங்களும் உள்ளன. அவற்றுக்கு சிறிய ஆறுதலைத் தர முயற்சிக்கிறோம். சக மனிதர்கள் மீதான அக்கறையின் விளைவுதான் இதுபோன்ற நிகழ்வுகள். இந்த சமுதாயம் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அந்த சமுதாயத்துக்கு நான் செய்யும் சிறு பிரதியுபகாரம், சமூகத்தின் மீதான அக்கறைதான் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த அடிப்படைக் காரணம்.இன்றைய இளைய தலைமுறைக்கு எண்ணங்கள் சிதற, கவனம் திசைதிரும்ப நிறைய வாய்ப்புகள் உள்ளன. நவீனத் தொழில்நுட்பங்கள் அதற்கு உதவுகின்றன. சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். முன்பெல்லாம் ஒரு எல்லையை வகுத்துவைத்திருந்தனர். எல்லைக்கோட்டை பெரியவர்கள் நிர்ணயித்திருப்பார்கள். ஒரு வயதுக்குப் பிறகு தனக்குத் தானே எல்லைக்கோட்டை வரையறுத்திருந்தார்கள். ஆனால், கோட்டுக்குள் வாழ்வது தவறு என்றும், அதை மீறுவதுதான் வாழ்க்கை என்றும் நினைக்கத் தொடங்கிவிட்டனர். இது பாதுகாப்பில்லாதது, ஆபத்து என்பதை இளைய தலைமுறைக்கு உணர்த்த முயற்சிக்கிறோம். தேசத்தின் சொத்தாக இளைய தலைமுறையை உருவாக்க சிறிய முயற்சிகளை மேற்கொள்கிறோம். சமூகக் கடமைகளை மேற்கொள்ள வழிகாட்டவும், தன்னம்பிக்கையும், தைரியமும் ஊட்டவும் முயல்கிறோம். இதற்கெல்லாம் நிச்சயம் பலனிருக்கும் என்று நம்புகிறோம்” என்றார் நம்பிக்கையுடன் எம்.கிருஷ்ணன். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT