Last Updated : 05 Jun, 2019 11:59 AM

 

Published : 05 Jun 2019 11:59 AM
Last Updated : 05 Jun 2019 11:59 AM

ஆண்டு முழுவதும் விளைச்சல் தரும் காய்கறி ரகங்கள்!

குட்டைக் குட்டைக் கத்தரிக்காய், குண்டு குண்டு சுண்டைக்காய், நெட்டை நெட்டை முருங்கைக்காய், நீண்டு தொங்கும் புடலங்காய், வழவழப்பாய் வெண்டைக்காய், வாட்டமான பூசணிக்காய், பச்சை பச்சையாய்ப் பாகற்காய்,  பட்டை போட்ட பீர்க்கங்காய்... என்றெல்லாம் காய்கறிகளைப் பற்றி  பாடல்கள் உண்டு.

ஆண்டு முழுவதும் விளைச்சல் தரும் காய்கறி விதை ரகங்களை சாகுபடி செய்துப் பயன்பெறலாம் என்று விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கிறது, காய்கறி பயிர்கள் துறை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் செயல்பட்டு  வரும் காய்கறி பயிர்கள் துறை, பல்வேறு ஆராய்ச்சியின் மூலம்  பல ரகங்களில் காய்கறி விதைகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்து வருகிறது.

இந்தியா முழுவதும் விவசாயிகள் விதைகளை வாங்கி விதைப்புக்குப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வீரிய ஒட்டு வெண்டை கோ-4, சின்ன வெங்காயம் கோ-5, செடி முருங்கை பிகேஎம்-1 ஆகிய ரகங்கள் மிகவும் பிரபலமானவை என்கிறார் காய்கறி பயிர்கள் துறைத் தலைவர் ஆர்.சுவர்ணபிரியா.  அவரிடம் பேசினோம்.

காய்கறி ரகங்கள்!

“தக்காளி பிகேஎம்-1 ரகம் 135 நாட்களில் பயன்தரும்.  30-35 டன் மகசூல் கிடைக்கும். ஹெக்டேருக்கு 350 கிராம் விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதை ரூ.1,185. வரி கத்தரி கோ-2 ரகம், 150 நாட்களில் பயன்தரவல்லது. 35 டன் மகசூல் தரும்.  ஒரு ஹெக்டேரில் பயிரிட 400 கிராம் விதைகள் தேவை. ஒரு கிலோ விதை ரூ. 1,180.

மிளகாய் வீரிய ஒட்டு கோ-1 ரகம், 205 நாட்களில் பலன் தரக்கூடியது. 28 டன் மகசூல் கிடைக்கும். ஒரு ஹெக்டேரில் பயிரிட 200 கிராம் விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ ரூ.24,000. வெண்டை வீரிய ஒட்டு கோ-4 ரகம், 110 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். 25.60 டன் மகசூல் தரும். மஞ்சள் நரம்பு தேமல் நோய்க்கு எதிர்ப்புத்  திறனும், அடர்ந்த கரும்பச்சை நிறமும் கொண்டது. ஒரு ஹெக்டேரில் பயிரிட 2.5 கிலோ விதைகள் தேவை. ஒரு கிலோ விதை ரூ.2,000.

பூசணி கோ-2 ரகம், 135 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். 23-25 டன் மகசூல் கொடுக்கும். ஒரு ஹெக்டேரில் பயிரிட 1.5 கிலோ விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதை ரூ.770. பாகற்காய் கோ-1 ரகம் 115 நாட்களில் பயன்தரக்கூடியது. 14 டன் விளைச்சல் தரும். காய்கள் அடர்பச்சை நிறமாக இருக்கும். ஒரு ஹெக்டேரில் பயிரிட 3 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதை ரூ.3,000.

பீர்க்கன்காய் வீரிய ஒட்டு கோ-1 ரகம் 120 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். 40 டன் விளைச்சல் தரும். ஒரு ஹெக்டேரில் பயிரிட 1.2 கிலோ விதைகள் தேவை. ஒரு கிலோ விதை ரூ.3,000. புடலங்காய் கோ-2 ரகம் 105 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். 36 டன் மகசூல் தரும். 32-35 செ.மீ. நீளமுள்ள சிறிய காய்களை கொண்டது. ஒரு ஹெக்டேரில் பயிரிட 2 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதை ரூ.1,420.

சுரைக்காய் வீரிய ஒட்டு கோ-1 ரகம் 100-110 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். 79.03 டன் மகசூலாக

கிடைக்கும். ஒரு ஹெக்டேரில் சாகுபடி செய்ய 2.4 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதை ரூ.3,000. கொத்தவரை எம்டியு-1 ரகம், 100 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். 10 டன் மகசூலாக கிடைக்கும். சாம்பல் நோயைத் தாங்கும் திறன் கொண்டது. ஒரு ஹெக்டேரில் சாகுபடி செய்ய 10 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதை ரூ.500.

குத்துரக அவரை கோ-14 (ஜி.பி.) ரகம் 75-90 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். 7.5 டன் விளைச்சல் தரும். இது குத்து ரகம் என்பதால் சாகுபடி செய்ய பந்தல் தேவையில்லை. ஒரு ஹெக்டேரில் சாகுபடி செய்ய 35 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதை  ரூ.500.

சின்ன வெங்காயம்

கோ-5 (ஓ.என்.) ரகம், 130-135 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். 18.90 டன் விளைச்சல் தரும். விதை மூலம் நாற்று விடப்பட்டு, நடப்படுகிறது. ஏக்கருக்கு ஒரு கிலோ விதையும், ஹெக்டேருக்கு 2.5 கிலோ விதையும் சாகுபடிக்கு தேவை. ஒரு கிலோ விதை ரூ.3,000.

முளைக்கீரை, தண்டுக்கீரை கோ-1 ரகங்கள் முறையே 25 மற்றும் 50-60 நாட்களில் பலன் தரக்கூடியவை. 7-8 டன்  கீரை மகசூலாக தரும். ஹெக்டேரில் சாகுபடி செய்ய 2 கிலோ விதைகள் தேவை. ஒரு கிலோ விதை ரூ.500. முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை கோ-2 ரகங்கள் முறையே 25 மற்றும் 35-50 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். 10-11 டன் கீரை விளைச்சலாக கிடைக்கும். ஒரு ஹெக்டேரில் சாகுபடி செய்ய 2 கிலோ விதைகள் தேவை. ஒரு கிலோ விதை ரூ.500.

கிள்ளுக்கீரை மற்றும் அரக்கீரை கோ-3 ரகங்கள் முறையே, 25 மற்றும் 35-50 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். 20 நாட்களில் முதல் அறுவடைக்கு வருகிறது. தரையில் இருந்து 5 செ.மீ. விட்டு அறுவடை செய்யவேண்டும். பின்னர் ஒருவார இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். மொத்தமாக ஹெக்டேருக்கு 90 நாட்களில் 30 டன் கீரை மகசூலாக கிடைக்கும்.

ஹெக்டேரில் சாகுபடி செய்ய 2 கிலோ விதைகள் தேவை. ஒரு கிலோ விதை ரூ.500. இதேபோல, செடி முருங்கை, செடிக்கு ஆண்டுக்கு 225 காய்களை தரவல்லது. மூன்று முறை மறுதாம்பு விட்டு, ஆண்டுக்கு 4 முறை பராமரிக்கலாம்.

வீட்டு காய்கறித் தோட்டங்களில் பயிரிடும் வகையில், ரூ.10, ரூ.20 சிறிய பாக்கெட்டுகளில் தரமான காய்கறி விதைகள் விற்கப்படுகின்றன. தானியங்கி விதை விற்பனை கருவியில் ரூ.10 மட்டும் செலுத்தி இந்த விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.  நீர்ப்பாசன வசதி இருந்தால் இந்த ரக விதைகளை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்” என்றார் நம்பிக்கையுடன் ஆர்.சுவர்ணபிரியா.

காய்கறியும்... மிளகாயும்...

பொதுவாக காய்கறிகள் என்று குறிப்பிடுகிறோம். காய் என்பது நமக்குத் தெரியும். அது என்ன கறி? கறி என்ற சொல் இறைச்சியைக் குறிப்பதாக நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது அல்ல. அந்தக் காலத்தில் கறி என்ற சொல் மிளகைக் குறிக்கும். உறைப்புக்காக பயன்படுத்தப்பட்ட பொருள் மிளகு என்பதாலேயே, கறியிட்டு செய்கின்ற பொருட்களைக் கறி என்று கூறினர். அதிக காரத்துடன் (உறைப்பு) செய்யக்கூடிய புலால் உணவுக்கு மிளகிட்டு சமைத்ததால், கறி என்று பெயர் வந்துள்ளது. படிப்படியாக கறி என்பது புலால் உணவைக் குறிப்பதாக மாறிவிட்டது.

13-ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஒரு தாவரம் அறிமுகமாகியது. அது மிளகு போன்றே காரமாக இருந்ததாலும், அதைக் காயவைத்து, வற்றலாக்கிதான் பயன்படுத்த முடியும் என்பதாலும் அதை `மிளகாய் வற்றல்' என்று அழைத்தனர்.

மிளகின் மாற்று வடிவமாக கருதியதாலும், மிளகுபோல உறைப்புடன் கூடிய காயாக இருந்ததாலும் அதை மிளகாய் என்று சொல்லத் தொடங்கினர். ஆனாலும், மிளகுக்கு இணையாக மிளகாயை சொல்ல முடியாது. ஏனெனில், மிளகாயில் உள்ள ஒரு வகையான அமிலம், வயிற்றின் உட்பகுதியில் புண் மற்றும்   புற்றுநோயை உருவாக்கும் தன்மையுடையது அதேசமயம், மிளகு உடலுக்கு நன்மை செய்யக்கூடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x