Published : 31 Mar 2018 09:39 AM
Last Updated : 31 Mar 2018 09:39 AM
ப
ழங்கால கருப்பு வெள்ளை படங்களில் பயில்வான்களை காட்டும்போது அவர் கர்லாக் கட்டையை சுற்றியபடி இருப்பார். பலம் பொருந்திய மனித னாக காட்டுவதற்கு கர்லாக் கட்டைகளை சுழற்றுவதைக் காட்டினாலே போதும். அப்படி உடல் பலத்தோடு தொடர்புடையதாக இருந்தது கர்லாக் கட்டை. நமது பாரம்பரிய போர் கலைகளில் ஒன்று. கர்லாக் கட்டை சுழற்றுவதன் மூலம் வைரம்பாய்ந்த கட்டையாக உடம்பை உரமேற்ற முடியும்.
மறைந்து வரும் இந்த வீரக்கலை யை மீட்டு, இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க முனைப்புடன் செயல்பட்டு வருகி றார் புதுச்சேரியைச் சேர்ந்த கலைமாமணி ஜோதி செந்தில் கண்ணன். 3 பெயர்கள் இருந்தாலும் நபர் ஒருவர்தான்.
புதுச்சேரி - பூரணாங்குப்பம் பகுதியில் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தை தொடக்கி சிலம்பம், குத்துவரிசை, தட்டு வரிசை, புடி வரிசை, வர்மம், நாட்டு மருத்துவம், தியானம், யோகா, கர்லாக் கட்டை என பாரம்பரிய கலைகளை பயிற்றுவிக்கிறார். இவரிடம் பெண்கள் உட்பட உள்ளூர் மக்களும் வெளிநாட்டினரும் கர்லை சுற்றப் பயில்கின்றனர். இதுதவிர வெளிநாடுகளுக் குச் சென்றும் பயிற்றுவிக்கிறார்.
இவரது தாத்தா கட்ட வாத்தி யார் கோவிந்தசாமி தற்காப்பு கலையில் சிறந்தவர். இவரிடம் 5 வயது முதல் கற்க ஆரம்பித்தவருக்கு தாத்தாவையும் சேர்த்து 9 ஆசான்கள். போர்க்கலை, வெறுங்கை சண்டை, சிலம்பம், வாள் சண்டை, வில் வித்தை, வேல் கம்பு, கர்லாக் கட்டை என தனது 28 வயது வரைக்கும் ஒவ்வொரு கலையையும் கற்றுக் கொண்டார் ஜோதி செந்தில் கண்ணன்.
அவர் நம்மிடம் கூறும்போது “கர்லாக் கட்டையில் 64 சுற்றுகளை சுற்றினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காலையில் செய்தால் உடல் நலத்தை வளப்படுத்தும். மாலையில் செய்தால் தூக்கமின்மை, வயிற்றுக் கோளாறு வராது. கொழுப்புகளை அழித்து, உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். பலம் பெருகுவதோடு, அழகான உடல் அமைப்பு கிடைக் கும்” என அடுக்குகிறார் கர்லாக் கட்டை சுற்றுவதன் நன்மைகளை.
புடி கர்லை, குஸ்தி கர்லை, புஜ கர்லை, கை கர்லை, தொப்பை கர்லை என 5 வகை கர்லாக் கட்டைகள் உள்ளன. இதில் 64 வகையான கர்லாக் கட்டை சுற்றுகள் உள்ளன. கர்லாக் கட்டை சுற்றும் பெருமை தெரியாமல் தற் போது பலர் ஜிம்முக்கு சென்று உடலின் புறத்தோற்ற அழகைக் கூட்டி, உண்மையான உடல் வலுவை இழந்து வருகிறோம் என்பது ஜோதி செந்தில் கண்ணனின் கவலையாக இருக்கிறது.
கடந்த ஆண்டு அப்துல் கலாம் நினைவு தினத்தின்போது 30 நிமிடங்களில் 1,147 முறை 12 கிலோ கர்லாக் கட்டை சுற்றி உலக சாதனை படைத்திருக்கிறார். அது போல் 32 நிமிடங்கள் கதம்பச் சுற்றில் 64 கர்லாகக் கட்டைளை தொடர்ந்து சுற்றி சாதனை படைத்திருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டி
1904 மற்றும் 1932 ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் கர்லாக் கட்டை சுற்றும் போட்டி இருந்துள்ளது. ‘தம்பெல்’ என்று பெயரில் நடத்தி வந்தனர். அந்த ‘தம்பெல்’ எனும் பெயர் பின்னாளில் ‘தம்பிள்ஸ்’ ஆனது. மீண்டும் கரலைச் சுற்றுவதை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வேண்டும் என்பது இவரின் விருப்பம் மட்டுமல்ல நமது விருப்பமும் கூட.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT