Published : 20 Mar 2018 11:24 AM
Last Updated : 20 Mar 2018 11:24 AM
மனிதனின் வாழ்விடங்களில் பரவலாக காணப்பட்ட சிட்டுக்குருவி இனம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. அவை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதர்களுக்கு இருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எங்கு பார்த்தாலும் பரவலாக காணப்பட்ட பறவையினம் சிட்டுக்குருவிகள். இவை வீட்டுக்குருவிகள், ஊர்க்குருவிகள், அடைக்கலக்குருவிகள் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இப்பறவை, மனிதனின் வாழ்க்கையோடு தொடர்புடையவை. மனிதன் எங்கு இருக்கிறானோ அந்த வாழ்விடங்களில்தான் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வசிக்கும். மரத்தில் கூடு கட்டினால் அதனுடைய முட்டைகளையும், குஞ்சுகளையும் அதைவிட பெரிய பறவைகள் எடுத்து சாப்பிட்டுவிடும். அதனால், மனிதனின் வீட்டுக்குள்ளே பாதுகாப்பான இடத்தில் கூடுகட்டி வசிக்கின்றன. பருவநிலை மாற்றங்கள் மற்றும் மனிதனின் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தற்போது இவற்றின் கூடுகளையும் காணவில்லை. இப்பறவைகளையும் பார்க்க முடியவில்லை.
இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ராஜேஷ் கூறியதாவது:
முன்பு கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும்தான் அதிக அளவில் இருந்தன. அவற்றில் காற்று வருவதற்கு இடைவெளிகள் விட்டு கட்டப்பட்டிருக்கும். அந்த வீடுகளில் மேற்கூரையின் கட்டைகளுக்கு இடையே குருவிகள் கூடுகட்டின. தற்போது பெரும்பாலான வீடுகள் கான்கிரீட் கட்டிடங்களாகிவிட்டன. கூடவே ஏசி வசதியும் வந்துவிட்டது. இந்த சூழல், சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. அதுபோல், முன்பு வீடுகளில் சாக்கு மூட்டைகளில் தானியங்கள் சேமித்து வைக்கப்படும். அந்த தானியங்களை எளிதாக இந்த சிட்டுக்குருவிகள் கொத்தி கொத்தி சாப்பிடும். தற்போது வீடுகளில் தானியங்கள் பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்கின்றனர். அதுபோல், வடகம், அரிசி உள்ளிட்ட மனிதன் சாப்பிடும் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடும். தற்போது மனிதனுடைய உணவு கலாச்சாரமும், வாழ்விடமும் மாறிவிட்டன. தேவையான உணவும், உறைவிடமும் கிடைக்காததால் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டன. தவிர பயிர்களில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் உரம், பூச்சி மருந்துகள் போன்றவையும் சிட்டுக்குருவியின் மறைவுக்கு காரணமாக உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொபைல்போன் டவர்கள் அதிகரிப்பால் சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், அதற்கும், சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைவுக்கும் தொடர்பு இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது.
எனவே, சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையை அதிகரிக்க, அவை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதுதான் சரியான செயல். இவ்வாறு அவர் கூறினார்.
வீடுகளில் கூடு அமைக்கலாம்
மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறும்போது, “சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் 13 ஆண்டுகளாகும். தொல்காப்பியத்திலும், பாரதியார் கவிதைகளிலும் சிட்டுக்குருவிகளின் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காடுகள் மட்டுமின்றி வயல்வெளிகள், மரங்கள், தாவரங்கள் அழிவுக்கும் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைவதற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. அந்த காலத்தில் வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகள் கட்டுவதற்கு பரண், மச்சு என பல மறைவிடங்கள் இருந்தன. வீட்டின் பின்புறம் தோட்டம் இருந்தது. நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை. இதுவே, சிட்டுக்குருவிகள் அழிவுக்கு காரணம். எஞ்சியுள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்க மரம், மூங்கில் அல்லது மண் கலயங்களை கொண்டு கூடுகளை தயார் செய்து, வீடுகளின் முன் தொங்கவிடலாம். சிறிய வீடாக இருந்தாலும், முடிந்த அளவுக்கு தோட்டம் அமைக்கலாம்” என்றார்.
சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் மக்கள்
மதுரை லேடி டோக் கல்லூரியில் விலங்கியல் துறையில் முதுநிலை படிக்கும் மாணவிகள் டி.ஐரின், ஆர்.மிருதுளாராணி ஆகியோர், சிட்டுக்குருவிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டனர். அந்த மாணவிகளுக்கு ஆய்வில் உறுதுணையாக இருந்த கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ப்ரியா ராஜேந்திரன் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் 55 இடங்களில் சிட்டுக்குருவிகள் வசிப்பதை மாணவிகள் தங்களின் ஆய்வில் கண்டறிந்தனர். 16 இடங்களுக்கு நேரடியாக சென்று குருவிகளை கணக்கெடுத்துள்ளனர். அதில், அலங்காநல்லூர், பழங்காநத்தம் பகுதியில் 130 சிட்டுக்குருவிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அலங்காநல்லூரில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கான பொருட்கள், தானியங்கள் தாராளமாக கிடைக்கின்றன. பழங்காநத்தத்தில் அங்குள்ள மக்களே சிட்டுக்குருவிகளுக்கான கூடுகள் கட்டி வீடுகளில் வைத்துள்ளனர். உணவையும் அவர்களே வழங்குகின்றனர். உணவுக்காக இந்த பறவைகள் நீண்ட தூரம் செல்லாது. எனவே, கூடு கட்டும் வசதியும், உணவும் இருக்கும் இடங்களுக்கு அவை தேடிவரும். எனவே, அத்தகைய இடங்களை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT