Published : 07 Mar 2018 11:18 AM
Last Updated : 07 Mar 2018 11:18 AM

100 கிளைகளுடன் ஒரு பனைமரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் கூடிய அதிசய பனைமரத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த மரத்தை 7 தலைமுறையாக பராமரித்து வருகின்றனர் விவசாயி அப்பாஜி குடும்பத்தினர்.

அப்பாஜி கூறும்போது, ‘‘எங்க முன்னோர் காசியில் இருந்து ஒரு பனை விதை எடுத்து வந்து, இங்கு இருக்கிற பெருமாள் கோயில் எதிரே நட்டு வளர்த்தாங்க. இந்த பனை மரத்தில் கிளைகள் படர்ந்து, ஒவ்வொரு கிளையிலும் ஒரு மரம் வளர்ந்தது. இப்போது 7 தலைமுறைகளைத் தாண்டி, 100 கிளைகளுடன் பரப்பி நிற்கிறது. கடந்த ஆண்டு பெய்த கடும் மழை, சூறாவளிக் காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த பனைமரத்துக்கு சிறு சேதாரம்கூட இல்லை’’ என்றார் பெருமை பொங்க.

‘‘இந்த அதிசய பனை மரத்தால்தான் எங்கள் ஊருக்கு பண்ணந்தூர் என்கிற பெயரே வந்திருக்கும்” என்கின்றனர் கிராமத்து இளைஞர்கள். தொடர்ந்து அவர்கள் கூறும்போது, “விஞ்ஞானிகள் பலர், இதன் விதைகளை எடுத்துச் சென்று பதியமிட்டனர். ஆனால் செடி வரவில்லை. அதேநேரம் மற்றொரு செடி இந்த பனைமரத்தின் கீழே முளைத்தது. அதை தாய் மரத்தின் எதிரே நட்டு வளர்த்தோம். அதிலும் கிளைகளுடன் மரம் வளரத் தொடங்கியது. வேறு இடத்தில் நட்டு வைத்த எந்த விதையும் வளரவில்லை’’ என்றனர். வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மரபணு மாற்றத்தால் இதுபோன்ற அதிசயங்கள் நிகழும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x