Published : 03 Mar 2018 08:39 AM
Last Updated : 03 Mar 2018 08:39 AM
மதுரையில் ரவுடிகளை போலீஸார் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்ற சம்பவத்தால், தென் மாவட்ட ரவுடிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றங்களின் தன்மை, அதற்கான சூழலைப் பொறுத்து, காவல்துறையில் ரவுடிகள் பட்டியலைத் தயாரிப்பர். முன்விரோதம் போன்ற சில பிரச்சினைகளில் சதித்திட்டம் தீட்டி, கொலைச் சம்பவங்களை அரங்கேற்றுதல், தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றை திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நபர்களை ரவுடிகளாக கருதி, பட்டியல் தயாரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவது காவல்துறை நடைமுறையில் உள்ளது.
இப்படியொரு சூழலில் வளர்ந்தவர்கள்தான் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்ட சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகியோர். மதுரை காமராஜர்புரத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக போஸ்டர் ஒட்டியதில் திமுக, அதிமுக பிரமுகர்கள் இருவரின் தலைமையிலான இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் தொடங்கியது.
ஒரே சமூகம், ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களுக்குள் உருவான பகை பின்னர் அரசியலில் பதவி, பணம் சம்பாதிப்பது என்ற போட்டியில் இரு கோஷ்டிகளாக உருவெடுத்து வளர்ந்தது. ஒரு கட்டத்தில் ஒரு தரப்பில் ஒரு கொலை நடந்தால் அதற்கு பழிக்கு பழியாக மற்றொரு தரப்பினர் கொலை செய்யப்படுவர். இதுவரை திமுக பிரமுகர் தரப்பில் 7 பேரும், அதிமுக பிரமுகர் தரப்பில் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், புதிது, புதிதாக நபர்கள் இரு கோஷ்டியிலும் இணைந்து கொண்டேதான் இருக்கின்றனர். இதன்படி தற்போது, இரு தரப்பிலும் தலா 25 பேருக்கு மேல் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இப்படியொரு சூழலில்தான் அதிமுக பிரமுகரின் தரப்பில் சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகியோர் முக்கிய ரவுடிகளாக உருவெடுத்தனர். இவர்கள் ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டால் சிறிது காலத்துக்கு மதுரை பக்கமே வருவதில்லை. மீண்டும் ஒரு கொலை செய்ய வேண்டுமானால் மட்டுமே அவர்கள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்படி, சகுனி கார்த்திக் 6 கொலை வழக்குகளிலும், முத்து இருளாண்டி 2 கொலை வழக்குகளிலும் தேடப்பட்டு வந்தனர்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. தொடர்ந்து போலீஸாரிடம் சிக்காமல் சவாலாக இருந்து வந்தனர். இறுதியாக தங்களது எதிர் கோஷ்டியைச் சேர்ந்த தலைமையை தீர்த்துக் கட்டும் நோக்கில், அவர்கள் இருவரும் மதுரை வந்தபோதுதான், போலீஸ் என்கவுன்டரில் பலியாயினர். சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் போலீஸார் ரவுடிகளை களையெடுக்கத் தொடங்கி உள்ளதால் தலைமறைவு ரவுடிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது: மதுரை கீரைத்துறை, காமராஜபுரத்தை மையமாக வைத்து திமுக பிரமுகர் விகே. குருசாமி, அதிமுக பிரமுகர் ராஜபாண்டியன் தரப்பில் இரு கோஷ்டிகள் உட்பட நகரில் பல்வேறு சிறிய கோஷ்டிகள் செயல்படுகின்றன.
காமராஜபுரம், யாகப்பா நகர் கோஷ்டிகளுக்குள் மட்டும் பழிக்குப் பழி சம்பவம் தொடர்கிறது. இரு கோஷ்டியிலும் இதுவரை 25 நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மதுரை நகரை பொறுத்தவரை 300-க்கும் மேற்பட்டோரும், புறநகரில் 200-க்கும் மேற்பட்டோரும் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், நகரில் 50 பேர், புறநகரில் 30 பேர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
போலீஸுக்கு போனில் சவால்
ஒரு மாதத்துக்கு முன், இரவில் சின்னக் கண்மாய் பகுதியில் பொதுமக்களை மிரட்டி, வாகனங்களுக்கு தீ வைப்பது தொடர்ந்தது. அண்ணாநகர் பகுதியில் ஒரு வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் சகுனி கார்த்திக் தொடர்பு பற்றி விசாரணை நடந்தது. இதையறிந்த சகுனி கார்த்திக் ஒரு போலீஸ் அதிகாரியை போனில் தொடர்பு கொண்டு ‘என்னிடம் துப்பாக்கி உள்ளது. அதில் 6 தோட்டாக்கள் இருக்கின்றன. 6 பேரைக் காலி செய்த பின்புதான் என்னை பிடிக்க முடியும். என்னை பற்றி விசாரிப்பதை தவிர்க்க வேண்டும்’ என மிரட்டி உள்ளார். மேலும், எதிர் கோஷ்டியான விகே. குருசாமி, அவரது மகனை தீர்த்துக் கட்ட அவர்கள் சதி திட்டமிடுவதை அறிந்துதான் இருவரையும் பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர் போலீஸார்.
இதன்படி, 2015 ரவுடி மாயன் கொலை வழக்கில் சிக்காமல் இருந்த சகுனி, இருளாண்டியை பிடிக்கும் நடவடிக்கையில் செல்லூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஈடுபட்டார். அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படியே சிக்கந்தர் சாவடி பகுதியில் இருந்த இருவரையும் பிடிக்க காவல் ஆய்வாளர் சென்றபோது, துப்பாக்கி, அரிவாளால் இருவரும் தாக்கினர். பதிலுக்கு சுட்டதில் சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகிய இருவரும் பலியாயினர். மதுரை உட்பட 4 மாவட்ட போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்த 2 ரவுடிகளும் இறுதியில் சுட்டு கொல்லப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT