Published : 02 Mar 2018 08:10 AM
Last Updated : 02 Mar 2018 08:10 AM
மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை கைது செய்யச் சென்றபோது ஏற்பட்ட மோதலையடுத்து போலீஸார் நடத் திய என்கவுன்ட்டரில் 2 பேர் பலியாயினர். ரவுடிகள் சுட்டதில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.
மதுரை காமராஜர்புரம் பகுதியில் அதிமுக - திமுக பிரமுகர்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. முன்விரோதத்தில் இதுவரை இரு தரப்பிலும் 8-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திமுக பிரமுகரின் ஆதரவாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதில், மதுரை இந்திரா நகரைச் சேர்ந்த மந்திரி என்ற முத்து இருளாண்டி (28), காமராஜர்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற சகுனி கார்த்திக் (29) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல ரவுடிகளான முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் இருவர் மீதும் பல்வேறு கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி வழக்கு கள் நிலுவையில் உள்ளன. திமுக முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய இருளாண்டி கோஷ்டி திட்டமிட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.
இதற்கிடையே, செல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண் டில் பதிவான கொலை வழக்கு ஒன் றில் இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். அவர்கள் இருவரும் மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் தங்களது கூட்டாளியான மாயக்கண்ணன் என்பவர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, செல்லூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், எஸ்.ஐ. முருகன் ஆகியோர் தலைமையி லான தனிப்படையினர் நேற்று காலையில் இருந்து மாயக்கண்ணன் வீட்டை கண்காணித்து வந்தனர்.
ரவுடிகள் உள்ளே இருப்பதை உறுதி செய்ததும், மாலை 4 மணி அளவில் போலீஸார் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து, அவர்களை கைது செய்ய முயன்றனர். அப் போது போலீஸாரை நோக்கி ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, போலீஸார் திருப்பிச் சுட்டனர். இதில், குண்டு பாய்ந்து முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மாயக்கண்ணன் உள்ளிட்ட சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
துப்பாக்கி பறிமுதல்
ரவுடிகள் சுட்டதில் ஒரு போலீஸ்காரருக்கு காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த வீட்டில் இருந்து ரவுடிகளின் துப்பாக்கி ஒன்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். ரவுடிகள் இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. என்கவுன்ட்டர் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்கவுன்ட்டர் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘பலியான ரவுடிகள் இருவர் மீ்தும் கொலை உட்பட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. அவர்களை செல்லூர் போலீஸார் பிடிக்க முயன்றபோது, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீஸார் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில் இருவரும் இறந்துவிட்டனர். இந்த சம்பவம் பற்றி முழுமையாக விசாரித்த பிறகுதான், என்ன நடந்தது என்பது தெரியவரும்’’ என்றார்.
26 ஆண்டுகளில் 10 பேர்
மதுரையில் கடந்த 1992-ல் தென் றல் மோகன், ராஜகுரு ஆகியோரும் 1999-ல் புதுராமநாதபுரம் ரோட்டில் மார்க்கெட் பாலனும் போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தனர். 2007-ல் தெப்பக்குளம் அருகில் கல்மண்டையன், கவியரசன் ஆகியோர் அப்போதைய உதவி ஆணையர் வெள்ளத்துரை நடத்திய என்கவுன்ட்டரில் பலியாயினர்.
ஏற்கெனவே இதே சிக்கந்தர்சாவடியில் இருவரும், ஒத்தக்கடையில் ஒருவரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகியோரையும் சேர்த்து கடந்த 26 ஆண்டுகளில் 10 ரவுடிகள் போலீஸ் என்கவுன்ட்டரில் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT