Published : 15 Mar 2018 08:03 AM
Last Updated : 15 Mar 2018 08:03 AM

சென்னை-மதுரை இருவழி பாதை தயார்: ஏப்ரலில் ரயில்கள் இயக்கப்படும் என தகவல்

விழுப்புரம்-திண்டுக்கல் இடையேயான இருவழி ரயில்பாதை திட்டத்தின் இறுதிக்கட்டமாக தாமரைப்பாடி- கல்பட்டிசத்திரம் இடையே பணி முடிவடைந்தது.

செங்கல்பட்டு முதல் கன்னியாகுமரி வரை ரயில்களில் ஏற்படும் நெரிசலை கருத்தில்கொண்டு கூடுதலாக செங்கல்பட்டு- திண்டுக்கல் இடையே 2-வது ரயில்பாதை அமைக்க முடிவானது.

முதல்கட்டமாக செங்கல்பட்டு- விழுப்புரம் இடையே 2-வது பாதை அமைக்கப்பட்டு ரயில் இயக்கப்பட்டது. 2-ம் கட்டமாக விழுப்புரம்- திண்டுக்கல் இடையே 281 கி.மீ.க்கு 2-வது பாதை அமைக்கும் பணி 2011-ல் தொடங்கி, பல கட்டங்களாக 259 கிமீ தூரத்துக்கு முடிக்கப்பட்டது.

இதில், திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி முதல் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கல்பட்டிசத்திரம் வரை 22 கி.மீ. தூரம் பாதை அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடந்தது.

பெங்களூருவில் இருந்து வந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேற்றுமுன்தினம் 22 கிமீ தூர பாதையில் டிராலி மூலம் சென்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று காலை 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து கே.ஏ.மனோகரன் கூறும்போது, ‘சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. குறிப்பிட்ட குறைகளை நிவர்த்தி செய்த பிறகு ஒரு சில வாரங்களில் பயணிகள் ரயிலை இயக்க சான்றிதழ் அளிப்பேன்’ என்றார்.

மதுரை மண்டல ரயில்வே பொது மேலாளர் நீனுஇட்டியாரா கூறும்போது, ‘ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் இருந்து ஒப்புதல் சான்று கிடைத்தவுடன் இந்த மாத இறுதியில் ரயில்கள் இயக்கப்படும்’ என்றார்.

மதுரை-திண்டுக்கல் இடையே ஏற்கெனவே இரட்டை ரயில் பாதை முடிந்துவிட்டது. தற்போது சென்னை முதல் மதுரை வரை இரட்டை பாதை பணி முடிந்துவிட்டதால், ரயில்வே நிர்வாக ஒப்புதலோடு ஏப்ரல் முதல் வாரம் முதல் சென்னை- மதுரை இடையே இருவழித் தடங்களிலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்மூலம் பயண நேரம் குறைவதுடன், கூடுதல் ரயில்கள் இயக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x