Published : 31 Mar 2018 09:40 AM
Last Updated : 31 Mar 2018 09:40 AM
ம
ழை சூழல் மாறி கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரியை தொட்டு விட்டது. வெயிலை கண்டு எரிச்சலாகும் சராசரி மனிதர்களுக்கு மத்தியில் வெயிலால் மகிழ்கிறார்கள் வெள்ளரிப் பழ வியாபாரிகள்.
திருச்சியை அடுத்த இனியானூர் பகுதியில் விளையும் வெள்ளரிப் பழத்தின் சுவையும் ஊர் பெயருக்கு ஏற்றபடியே இனிப்பாகத்தான் இருக்கிறது. காண்போரை சுண்டி இழுக்கின்றன வாசமும் நிறமும். விதைகள் வழித்தெடுக்கப்பட்ட வெள்ளரிப் பழத்தைச் சுற்றிலும் வெயில் படாதவாறு வாழை மட்டை கட்டி வைத்திருக்கும் அழகே தனி.
மட்டையைப் பிரித்து மஞ்சள் நிறத்தில் மின்னும் பழத்தோலை உரித்துவிட்டு, நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் தேவாமிர்தம் தோற்றுப்போகும். அடிக் கிற வெயிலுக்கு நடுவே பழத்தின் குளுமையைக் கூட்டுகின்றன கட்டி வைத்த வாழை மட்டைகள்.
“காலை 6 மணிக்கு பழம் ஒடிக்கச் செல்வோம், கொடியில் இருந்து ஒடித்த வெள்ளரிப் பழத் தை மதியம் 3 மணிக்குள் விற்றுவிட வேண்டும். இல்லையென் றால் கெட்டுப்போய்விடும். பிறகு குப்பையில் போட்டு வர வேண்டியதுதான்” என்றார் காளியம்மா.
இனியானூரைச் சேர்ந்த சித்ரா நம்மிடம் கூறும்போது, “பங்குனி, சித்திரை, வைகாசி இந்த மூனு மாதம் மட்டுமே வெள்ளரி பழ சீஸன். 45 நாளுக்கு ஒரு முறை என 2 முறை விதைப்போம். வெள்ளரிப் பிஞ்சுகளை பறிப்பதில்லை. நேரடியாக பழம் மட்டுமே ஒடிப்பதால் சுவை அதிகமாக இருப்பதுடன் அடுத்த விதைப்புக்கான விதையும் கிடைக்கிறது.
15 பழம் உள்ள ஒரு கூடை பழத்தை 350 ரூபாய் கொடுத்து வாங்கி செல்பவர்கள், பழத்தின் சைஸை பொறுத்து ரூ. 40 முதல் 70 வரை விற்பார்கள். எந்த அளவுக்கு வெயில் அடிக்கிறதோ அந்தளவுக்கு சீக்கிரம் பழம் விற்றுவிடும்” என்றார்.
வெயிலில் இருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடுபவராக நீங்கள், வெயிலே சுகம் என வாழும் இது போன்றவர்களும் இயந்திர கதியான இந்த வாழ்க்கைக்கு நடுவே இருக்கத்தான் செய்கிறார்கள்.
விவசாயமும் இல்லாததால் கட்டிட வேலை, காட்டு வேலைக் குச் செல்லும் பெண்கள் இந்த மூன்று மாதம் வெள்ளரிப் பழ வியாபாரிகளாக அவதாரம் எடுப்பார்கள். இருப்பினும் பழத்தில் இருக்கும் பளபளப்பு, பாவம் இந்த வியாபாரிகளிடம் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT