Published : 26 Sep 2014 04:10 PM
Last Updated : 26 Sep 2014 04:10 PM
அகதா கிறிஸ்டியின் ‘தி மவுஸ் டிராப்’ நாடகத்துக்கு அறிமுகம் தேவையில்லை. ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ரிச்சர்டு அட்டன்பரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமீர் ரஸா ஹுசைன் மற்றும் விராட் ஹுசைன் இயக்கத்தில் ‘தி மவுஸ் டிராப்’ நாடகத்துக்கு ஏர்செல் ஏற்பாடு செய்திருந்தது. செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில் சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நாடகத்தைப் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.
உலகில் நீண்ட நாட்களாக மேடையேற்றப்பட்டு வரும் நாடகம் என்ற பெருமையை உடையது அகதா கிறிஸ்டியின் ‘தி மவுஸ்டிராப்’. 1952-ல் இருந்து இதுவரை 26,000 முறை ‘தி மவுஸ்டிராப்’ மேடையேறியிருக்கிறது. இதை வைத்தே இந்நாடகத்தின் சிறப்பை உணர்ந்துகொள்ளலாம்.
கொலை மர்மத்தைப் பற்றிய இந்நாடகத்தின் முடிவைப் பார்வையாளர்கள் இன்றளவும் சுவாரஸ்யமானதாக கருதி மற்றவர்களிடம் வெளியே சொல்வதில்லை. இந்நாடகம் முதல் முறையாக அரங்கேறியபோது, ரிச்சர்டு அட்டன்பரோவும், ஷிலா ஷிம்ஸும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரிச்சர்டு அட்டன்பரோவை நினைவு கூரும் வகையில், அமீர் ரஸா ஹுசைனின் ஸ்டேஜ்டோர் நாடகக் குழுவினர் ‘தி மவுஸ் டிராப்’பை மேடையேற்றியிருக்கின்றனர்.
மோலி ரால்ஸ்டன் (விராட் ஹுசைன்), கில்ஸ் ரால்ஸ்டன் தம்பதி, விருந்தினர் விடுதியைப் புதிதாகத் தொடங்கி நடத்திவருகின்றனர். கிறிஸ்டோ பர்ரென், மிஸஸ் பாய்ல், மிஸ் கேஸ்வெல், பராவிசினி ஆகியோர் விருந்தினர்களாக அவ்விடுதியில் தங்கியிருக்கின்றனர். ஒரு படுகொலை பற்றிய ரேடியோ செய்தி கிடைத்தவுடன் விடுதியில் இருக்கும் அனைவரின் நடவடிக்கைகளிலும் மாற்றம் தெரிகிறது. அந்தப் படுகொலையைத் தொடர்ந்து மான்க்ஸ்வெல் மேனர் விடுதியில்தான் அடுத்த கொலை நடக்கவிருப்பதாக விடுதிக்குத் துப்பறிய வரும் செர்ஜென்ட் டிராட்டர் சொல்கிறார். டிராட்டர் சொன்ன மாதிரியே மிஸஸ் பாய்ல் கொல்லப்படுகிறார். கொலைகளுக்கான பின்னணி, கொலையாளி யார் என்பதைப் படுசுவாரஸ்யமான திருப்புமுனை காட்சிகளாக உருவாக்கியிருப்பார் அகதா கிறிஸ்டி.
அமீர் ரஸா ஹுசைன் மற்றும் விராட் ஹுசைன் இயக்கத்தில் அகதா கிறிஸ்டியின் ‘தி மவுஸ் டிராப்’ புத்துயிர்ப்புடன் மேடையேறியிருக்கிறது என்றே சொல்லலாம். நாடக அரங்க அமைப்பில் இருந்து கதாபாத்திரங்கள் தேர்வு வரை அனைத்திலும் ‘ஸ்டேஜ்டோர்’ நாடகக் குழுவினரின் நேர்த்தி வெளிப்பட்டது. நாடகத்தின் மேடை வடிவமைப்பின் அம்சங்களே நம்மை 60 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடுகிறது. நாடகத்தின் எந்தவொரு கட்டத்திலும் தொய்வு ஏற்படாத வண்ணம் நடிகர்களின் நடிப்பு அமைந்திருக்கிறது. வசன உச்சரிப்பில் இருந்து காட்சி அமைப்புவரை அனைத்திலும் இயக்குநர்களின் திறமை வெளிப்படுகிறது.
பார்வையாளர்களின் கவனத்தை ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரே சீராகக் கொண்டு செல்வதில் அமீர் ரஸாவும், விராட்டும் முழுவெற்றி அடைந்திருக்கின்றனர் என்றே சொல்லாம். இன்னும் எத்தனை ஆயிரம் முறை வேண்டுமானாலும் மேடையேறும் தன்மை ‘தி மவுஸ் டிராப்’பில் இருப்பதாகவே தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT