Published : 21 Mar 2019 09:01 PM
Last Updated : 21 Mar 2019 09:01 PM

மாண்புமிகு மனிதர்கள் 1:  கால் டாக்ஸி  ஓட்டுநர் ஜெரீனா பேகம்

பிச்சை எடுத்தும், எச்சில் இலை எடுத்துப் போட்டும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த என்னாலேயே இன்று கால் டாக்ஸி டிரைவர் ஆக முடிந்தது என்றால் உங்களால் ஏன் சாதிக்க முடியாது என்ற கேள்வியை எழுப்புகிறார் ஜெரீனா பேகம்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிப்பவர் ஜெரீனா பேகம். தன்னந்தனியாக சொந்தக் காலில் நின்று வாழ்க்கையில் வென்ற கதையை சிரித்த முகத்தோடு பேசத் தொடங்குகிறார்.

''என் திருமண வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. அதனால் கணவரைப் பிரிந்தேன். 3 குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டேன்.  குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி பிச்சை எடுத்தேன். அதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. குழந்தைகளின் பசியைப் போக்குவதே என் குறிக்கோளாக இருந்தது. பிறகு எச்சில் இலை எடுத்துப் போட்டேன். வீட்டு வேலைகள் செய்தேன். முறை வாசல் வேலை செய்தேன். பூண்டு வியாபாரம் செய்தேன். குட்டி யானை, ஆட்டோ என பல வாகனங்களை ஓட்டினேன். ஆனால் அதில் கிடைக்காத மகிழ்ச்சி கார் ஓட்டும் போது  கிடைக்கிறது. இது என் சொந்த வாகனம் கிடையாது. உபர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் 13 ஆண்டுகளாக வண்டி ஓட்டிப் பிழைக்கிறேன்'' என்று விழிகளை விரித்துச் சொல்கிறார் ஜெரீனா.

''படித்து முடித்து வீட்டில் இருக்கும் 2 பெண்கள், ஐடிஐ படித்து விட்டு மெக்கானிக் வேலை பார்க்கும் மகன் இவர்கள் தான் என் உலகம் .17 வருடங்களுக்கு முன்பு உடுத்த உடை இல்லாமல்  கைக்குழந்தைகளுடன் ரோட்டில் நிற்கும் போது ஒருவர் என்னிடம் வந்து 'ஏன்மா இந்த நேரத்துல இங்க நிக்குற? வயசுப் பொண்ணா இருக்குற இங்கலாம் தனியா நிக்காத. இந்தா 1500 ரூபாய் இதை வெச்சு ஒரு வீடு எடுத்துத் தங்குன்னு சொன்னதை என் உசுர் இருக்குற வரை மறக்கவே மாட்டேன்'' என கண்ணீரில் கசிந்துருகிப் பேசுகிறார்.

துயரம் நிறைந்த தன் கதையில் பரிதாபம் வந்துவிடக்கூடாது என்ற தொனியும் அவர் பேச்சில் எதிரொலித்தது. மும்பை , பெங்களூர்  வாகன நெரிசலைக் கூட சமாளிச்சிடலாம். ஆனா, சென்னை வாகன நெரிசலை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டம் என பேச்சைப் போலவே கியரையும்  மாற்றுகிறார்.

''படிப்பு இல்லை , பாதுகாப்பு இல்லை , நான் வண்டி ஓட்டுனாத்தான் என் குடும்பத்தைக் காப்பாத்த முடியும் , டீசல் விலை ஏறிக்கிட்டே போகுது. இதனால எங்களோட 3 வேலை சாப்பாடு 2 வேலையாக் குறையுது. ஆனாலும் எப்படியாவது முன்னுக்கு வந்துடணும்னு மூச்சைப் பிடிச்சு இழுத்து வேலை செய்றேன்.

எனக்கு ஒரே ஒரு ஆசைதான். என் குழந்தைகளுக்கு அப்பா பாசம் கிடைச்சதில்லை. அடிச்சாலும் அணைச்சாலும் நான் தான். எப்படியாவது அவங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துடணும்'' என்று திரளுகின்ற கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்.

சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கே மூலையில் முடங்கிப்போகும் நபர்களுக்கு மத்தியில் ஜெரீனா பேகம் தனிப்பெரும் ஆளுமையாக, நம்பிக்கை மனுஷியாகத் தெரிகிறார். அவர் கனவுகள் மெய்ப்படட்டும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x